பரிபாடலில் புனலாடல்

 

கவிஞர் மா.உலகநாதன்

 

உலகம் ஓர் நிறையாய்த் தான் ஓர் நிறையாய்ப்

புலவர் புலக்கோலால் தூக்க உலகனைத்தும்

தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்.

 

புலவர் பெருமக்களின் புலமையைத் தராசாகக் கொண்டால் உலகையே ஒரு தட்டில் வைத்தாலும், மதுரை மாநகரை ஏந்தியுள்ள தட்டு இஙங்கியே நிற்கும். அத்தகைய பெருமை பெற்றது நான்மாடக் கூடல்.

 

வையை பற்றிய பாடல்களில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வருவதும் அதில் மகளிரும் மைந்தரும் நீராடும் திறமும். காதற்பரத்தையும் பிறரும் நீராடலும், தலைவன் தான் தவறிழைக்கவில்லை என்று சூளுரைத்தலும், வேறு பிற காதற்காட்சிகளும் பரிபாடலில் இடம் பெற்றுள்ளன.

 

கள்ளொடு காமம் கலந்து கரைவாங்கும்

வெள்ளம் தரும் இப் புனல்.

                                  பரி-10/-69-70

 

நீரில் ஆடும் பொருட்டு மகளிர் தம் மேகலையை இறுகக் கட்டினர். வண்ண நீரை வீசும் கருவிகளையும் பனிநீர் கலந்த சந்தத்தையும் எடுத்துக்கொண்டு குதிரை மீதும் பெண் யானை மீதும், எருது பூட்டிய வண்டியின் மீதும் பல்லாக்கின் மீதும் ஏறினர்.

 

புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டித்

தாளித நொய் நூல் சரணத்தரி மேகலை

 

எனப்படுகால் இறுகிறுகத் தால் இட்டு

நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்

முத்துநீர்க் சாந்து அடைந்த மூஉய்த தத்துப்

புக அரும் பொங்கு உள்ளப் புள் இயல் மாவும்

மிகவரினும் மீது இனிய வேழப் பிணவும்

அகவரும் பாண்டியரும் அத்திரியும்-

 

சங்க கால மகளிர் குதிரையேற்றமும் யானையேற்றமும் செய்யுமளவுக்கு உடற்திறன் படைத்திருந்தார் என்பது இதன்வழி புலனாகிறது. மெல்லியலார் என்று வர்ணிக்கபடும் பெண்மை, அவசியம் நேரும்போது தன் ஆற்றலின் வீச்சை அதிகப்படுத்திக்கொள்ளும் என்பதையும் அறியமுடிகிறது.

 

யார்?யார்?

  முதியர், இளையர்,முகைப் பருவத்தர்.

வதிமண வம்பலர் வாயவிழ்ந் தன்னார்

இருதிற மாந்தரும், இன்னினி யோரும்

விரிவு நரையோரும், வெறு நரையோரும்

பதுவித மாதர், பரத்தையர் பாங்கர்

அதிர்குரல் வித்தகர் ஆக்கிய தாள

விதிகூட்டிய இயமென்நடை போலப்

பதிஎதிர் சென்று பரூஉக்கரை நண்ணி

 

                                         பரி-10-19-26

 

இவர்கள் நீராடப் போவது, தாள கதியில் அமைந்த மென்னடை போல பல் வயதினரும், பல தரத்தினரும் ஒருங்கே செல்லுவது இசைக்கருவிகள் ஒன்றிற்கொன்று வேறுபாடு உடையதெனினும் தாள கதியால் இணைந்து பாடலில் எல்லாம் மென்னடையாற் செல்வது போன்று எதிர் செல்கின்றவர்களும் உன்மை, மென்மை, இடைமையாகிய பண்பு வேறுபாடு உடையரேனும் நெருக்கத்தால் எல்லாரும் மென்மையாய் சேர்ந்து நீராடுகிறார்கள் என்று பரிமேலழகர் உரை விளம்புகிறது.

 

முடிவுரை:

 

மாடமோங்கிய மல்லல் மூதூர் என்று சிறப்பிக்கபடும் மதுரையில் தமிழ்ச் சங்கம் தழைத்தோங்கி இருந்ததொரு காலம். வையை பாய்ந்து மக்களை வளமாக வைத்திருந்தது. தமிழேடு தன்புனலில் எதிர்த்து எறியதையும் அறிவோம். அந்த வையையில் மகளிர் நீராடலில் நிகழ்ந்தனைத்தும் பரிபாடல் பக்குவமாய்ச் சொல்கிறது.

 

 

கவிஞர் மா.உலகநாதன்,

திருநீலக்குடி – 612 108

கும்பகோணம் - வழி

9442902334

 

 

 

 www.tamilauthors.com