கிறுக்கன்......?
அகில்
கன்னத்திற்கு
கைகளை முண்டுகொடுத்து சோகமாக உட்கார்ந்திருந்தான் பரணி. அவன்
கன்னங்களில் கண்ணீர் திவலைகள் உருண்டுகொண்டிருந்தன.
'என்ன மோனை? இப்பிடி அழுதுகொண்டிருந்தால் சரியா? சூரியனும் உச்சிக்கு
வந்துட்டுது. போறவாற சனம் எல்லாம் பார்த்துக்கொண்டு போகுதுகள். நடக்க
வேண்டிய அலுவலைப் பார்.' பரணிக்கு அருகில் வந்து அவன் தலையை வருடியபடி
தாய் நல்லம்மா சொன்னாள்.
அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரே நாளில் இந்த இரண்டு சாவும்
நடக்கும் என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை.
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பரணியின் நண்பர்கள் ரவியும், கேசவனும்
கிடங்கு தோண்டுவது தெரிந்தது. பரணி கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தான்.
அரையிலிருந்து நழவிய அரைக்காற் சட்டையை மேலே இழுத்துவிட்டுக்கொண்டான்.
வீதியோரமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு போன இருவர் பேசிக்கொள்வது அவன்
காதுகளில் துல்லியமாக விழுந்தது.
'இந்தப் பொடியன் சரியான கிறுக்கன். பார் இன்னும் அழுதுகொண்டு அதிலயே
குந்திக்கொண்டு இருக்கிறான். ஏதோ எங்கட இனம் சனம் செத்தமாதிரி.....'
கெக்கலங் கொட்டிச் சிரித்த வழிப்போக்கர்கள் மீது ஆத்திரத்துடன் ஒரு
கல்லைப் பொறுக்கி விட்டெறிந்தான் பரணி. அவர்கள் மேலும் சிரித்துக்கொண்டே
வேகமாக சைக்கிளை மிதித்தனர்.
பரணிக்கு கோபம் கோபமாக வந்தது. இன்று காலைமுதல் வருவோர் போவோர் எல்லாம்
அழுது வடிந்துகொண்டிருக்கும் இவனைப் பார்த்து இப்படித்தான் பேசிக்கொண்டு
போகிறார்கள். பரணி தனக்குள் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த
இரண்டு உடல்களையும் அடக்கம் செய்வதில் கவனம் செலுத்தினான். அவன் உதடுகள்
புறுபுறுத்தன.
'எந்த உயிர் என்டாலும் உயிர்தானே. இதில என்ன இனம் சனம் என்று
பார்க்கினம்? உயிரின்ர மதிப்புத் தெரியாதவை. ஏதேதோ உளறுகினம்.'
உயிரற்ற உடலமாகக் கிடக்கும் கண்மணியையும், வெள்ளையனையும் பார்க்கப்
பார்க்க வேதனையாக இருந்தது அவனுக்கு.
'இந்த ரெண்டு ஜீவன்களும் தாங்கள் எந்த இனம், ஜாதி என்று பாக்க இல்லையே.'
வீட்டுக்குப் பின்புறமாக இருந்த அந்த மாமரத்தோடு சற்று சாய்ந்துகொண்டான்.
நண்பர்கள் குழிதோண்டுவதில் மும்மரமாக நின்றனர். அவர்கள் கண்களிலும்
இந்த உடல்களுக்காக கண்ணீர் எட்டிப்பார்த்தபடி இருந்தது.
'இந்த சாவு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்...................'
'நான் மாமர நிழலில் அமர்ந்து விளையாடும்போதெல்லாம் என் மடியில் ஓடிவந்து
தலை வைத்துத் தூங்குகின்ற கண்மணிக்கும், வெள்ளையனுக்குமா உயிர்
போகவேணும்'
'இவையள் எல்லாரும் தங்கட ஆக்கள் செத்தால் தான் கவலைப்படுவினம்.
கண்மணியும், வெள்ளையனும் அப்பாவி ஜீவன்கள் தானே. இனம் சனமா என்று
கேடகினம். கண்மணியும் வெள்ளையனும் ஒரே இனமா?.....'
'கண்மணியும் வெள்ளையனும் ஒரே பிளேட்ல சாப்புடுவீனம்.... பால்
குடிப்பீனம்.... ஓன்றா விளையாடி, நித்திரைகொண்டு சந்தோசமா இருக்க
இல்லையா?' நினைக்கும் போது எரிச்சலாக இருந்தது பரணிக்கு.
'இன்டைக்கு என்ர உயிர் இந்த உடம்பில இருக்குதெண்டால் அதுக்கு என்ன
காரணம்? என்ன இனம், என்ன சாதி என்று பார்க்காத கண்மணியின்ரயும்,
வெள்ளையனின்ரயும் தியாகம் தான்' மனதுக்குள் புறுபுறுத்தான்.
பரணிக்கு கண்மணியும், வெள்ளையனும் என்றால் உயிர். பள்ளிக்கூட நேரம்
தவிர மற்றைய நேரம் எல்லாம் அவனுக்கு இவர்களோடுதான் விளையாட்டு.
போதாக்குறைக்கு அயலில் இருக்கும் ரவியும், கேசவனும் கூட வெள்ளையனின்
பின்னாலேயே சுற்றுவார்கள். பரணி, தான் சாப்பிடும் போது வெள்ளையனுக்கும்,
கண்மணிக்கும்; தட்டுகளில் சாப்பாடு கொடுத்துவிட்டுத்தான் தான்
சாப்பிடுவான். இரவு தூங்குவதற்கு முதலும் இவன் பால் குடிக்கும்போது
வெள்ளையனையும், கண்மணியையும் மறக்கவே மாட்டான்.
குழியை வெட்டிமுடித்த நண்பர்கள் இருவரும் பரணியை நெருங்கி வந்தனர்.
வழமையாக அவர்கள் முகங்களில்; தென்படும் குறும்பும், உற்சாகமும் எங்கோ
ஓடிமறைந்திருந்தன. ஒருவித சோர்வுடன் பரணியின் அருகில் வந்தமர்ந்து
கொண்டனர். பரணிக்கு அருகே துவண்டு கிடந்த வெள்ளையனின் உடலை அன்புடன்
வருடியது ரவியின் கரம்.
'வெள்ளையனுக்கும் கண்மணிக்கும் என்ன நடந்தது மச்சான்?'
நடந்த சம்பவத்தை பரணி விபரித்தான்.
அன்று காலை எட்டரை, ஒன்பது மணியிருக்கும் பரணி நல்ல நித்திரையில
இருந்தான். திடீரென்று ஒரு சத்தம் அவன் தூக்கத்தை கெடுத்தது. 'உஷ;....
உஷ;......' என்ற சத்தம் - பாம்பு சீறுவது போல சத்தம் அருகில் கேட்டது.
போர்வையை உதறியபடி கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். சத்தம் மட்டும்
கேட்டுக்கொண்டிருந்தது. ஒன்றையும் காணவில்லை. கனவோ என்று தலையைச்
சொறிந்து கொட்டாவி விட்டபோது மறுபடியும் அதே 'உஷ;..... உஷ;.......'.
சத்தம் அவன் கட்டிலுக்கு அடியில் இருந்து வந்தது. மெதுவாக உடம்பை
வளைத்து குனிந்து பார்த்தான். கட்டிலுக்கு அடியில் நான்கு அல்லது ஐந்து
அடி நீளமான நாகம் ஒன்று படமெடுத்துச் சீறியது. அவனுக்கு குலை நடுக்கம்.
பாம்புக்குப் பக்கத்தில் கண்மணி வேறு......
பயத்துடன் கட்டிலில் இருந்து முடிந்தளவு தூரம் அப்பால் பாய்ந்து அறையை
திறந்துகொண்டு வெளியே ஓடினான். வெள்ளையனுக்கு எப்படித் தெரிந்ததோ
தெரியாது. அவன் கதவைத் திறந்ததும் அந்த இடைவெளிக்குள்ளால் உள்ளே
நுளைந்த வெள்ளையன் பரணி கூப்பிட்டும் வெளியே வரவில்லை. நெஞ்சு
திக்திக்கென்று அடித்துக்கொள்ள நடுங்கியபடி அறையையே பார்த்துக்கொண்டு
நின்றான் பரணி.
முற்றத்தைக் கூட்டி குப்பையை அள்ளிக்கொண்டிருந்த நல்லம்மாவின் கண்களில்
அவனது பீதியும், நடுக்கமும் ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தியிருக்க
வேண்டும்.
'என்ன தம்பி..... என்ன?.....' என்றபடி அள்ளிய குப்பையை அப்படியே
போட்டுவிட்டு பரணி நின்றுகொண்டிருந்த இடத்தை நெருங்கினாள். அம்மாவிடம்
நடந்ததைச் சொல்லவும் வெள்ளையன் பாம்பை தூக்கிவந்து வெளியே போடவும்
சரியாக இருந்தது. பாம்பு அசைவாட்டம் இல்லாமல் கிடந்தது.
பரணிக்கு ஒரே சந்தோசம். பாம்பை கொன்றுபோட்ட வெள்ளையனை அணைத்து
முத்தமிட்டான். அவன் பிடியிலிருந்து விலகி அவசரமாக கொல்லைப்பக்கமாக
ஓடினான் வெள்ளையன். புரணியும் திபுதிபுவென்று வந்து குவிந்துவிட்ட
அயலவர்களும் செத்தபாம்பை வேடிக்கை பார்க்க, பக்கத்துவீட்டு முருகேசு
அண்ணன் வந்து பாம்பு செத்துவிட்டதை உறுதிப்படுத்தினார். கொல்லையில்
கிடந்த ஓலைகளைப் போட்டு நெருப்பு மூட்டி, பாம்பைத் தூக்கி நெருப்பில்
போட்டார். ரப்பர் எரிவது போல ஒரு நாற்றம்... கூட்டம் மெல்லக் கலைந்தது.
'அம்மா நாகம்மாள் ஆச்சித் தாயே எங்கள மன்னிச்சிடம்மா......' அம்மா
கோயில் இருந்த திக்கைப் பார்த்து கும்பிட்டா. அப்போதுதான் பரணி
கவனித்தான் கண்மணியையும், வெள்ளையனையும் காணவில்லை.'
காலையில் நடந்ததை விபரித்த பரணி அத்தோடு நிறுத்தி விட்டு விம்மி விம்மி
அழத்தொடங்கினான்.
'பிறகு என்னடா நடந்தது?' ஆர்வமும், பயமுமாய் முகத்திற்கு இரண்டு
கைகளையும் முண்டுகொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்த ரவி பரணியைக் கேட்டான்.
'கண்மணியக் காணயில்லை. நான் என்ர அறைக்குள்ள ஓடிப் போய் பார்த்தேன்'
கண்களில் பொங்கி வழிந்த கண்ணீரை புறங்கைகளால் துடைத்தபடி தொடர்ந்தான்
பரணி.
'கண்மணி கட்டிலுக்கடியில விழுந்துகிடக்கிறதைப் பார்த்தேன். அப்பிடியே
கண்மணியைத் தூக்கிவந்து வெளியில வச்சுப் பார்த்தால் கண்மணிக்கு மூச்சு
வரயில்லை. கண்மணியின்ர கால்ல ஒரு அடையாளம் தெரிஞ்சுது. அதுல பாம்பு
கண்மணியைக் கொத்தியிருக்கும்போல. நான் அழுதுகொண்டு அம்மாவைக் கூப்பிட
நினைக்க அம்மாவே என்னைக் கூப்பிட்டா.
'டேய் பரணி இங்க ஓடிவாடா. கெதியன வா...' அம்மா கூப்பிட்ட விதம் எனக்கு
என்னவோ போல இருந்தது. கண்மணியை விட்டுட்டு கொல்லைப் பக்கம் ஓடிவந்தேன்.
வெள்ளையன் வாயில நுரை கக்கினபடி இழுத்துக்கொண்டு கிடக்க அம்மா தள்ளி
நின்று அழுதுகொண்டு இருந்தா. நான் பார்த்துக்கொண்டு இருக்கவே உயிர்
அடங்கிப் போச்சுது.' விசும்பினான் பரணி.
'பாம்பு வெள்ளையனையும் கடிச்சிருக்குது......'
நண்பர்கள் மத்தியில் பெரும் அமைதி நிலவியது.
'பிள்ளையள்..... என்ன இதுல செய்துகொண்டிருக்கிறியள்? இப்பிடியே கனநேரம்
வைச்சிருக்க ஏலாது. கெதியன அலுவலப் பாருங்கோ.'
நல்லம்மா குரல் கொடுத்தபடி அவர்களை நெருங்கி வந்தாள். அவர்கள் முகத்தில்
ஈயாடவில்லை. எல்லோருமே சோகமாகக் காட்சி தந்தனர்.
'இப்பிடித்தான் பிள்ளையள் வாழ்க்கை என்டுறது. உங்களுக்கு இப்ப விளங்காது.'
என்றபடி ரவியின் தலையை அன்புடன் தடவினாள். சிறுபிள்ளைகள் அந்த ஜீவன்கள்
மீது கொண்டிருந்த நேசத்தை நன்றாக உணர்ந்தவள் அவள்.
'ரவி வெள்ளைத் துணி கொண்டுவந்திருக்கிறன். பெரிய துண்டு வெள்ளையனுக்கு.
மற்றது கண்மணிக்கு. உடம்பை வடிவா சுத்தித் தூக்கிக்கொண்டு போங்கோ.'
பரணியின் தாய் கட்டளையிட்டதும் ஒரு பெருமூச்சுடன்; எழுந்து நடந்தான் ரவி.
கேசவன் பின்தொடர்ந்தான். பரணி ஓடிச் சென்று கண்மணி, வெள்ளையனின் உடல்களை
ஆசையுடன் தடவிக்கொடுத்தான். அவன் விரல்களில் சிறு நடுக்கம். கண்களில்
வேதனை நிரம்பி வழிந்தது.
'டேய் கண்மணியையும், வெள்ளையனையும் குளிப்பாட்ட வேணும். அப்பிடித் தானே
செத்தவீடுகள்ல நடக்கிறது. ரவி போய்த் தண்ணி கொஞ்சம் கொண்டுவா.'
கட்டளையிட்டான் பரணி.
'எல்லா உயிரும் ஒன்றுதான். எங்களுக்கு ஒரு சாத்திரம்.... வெள்ளையனுக்கு
ஒரு சாத்திரம் இல்லை. எல்லா உயிரும் செத்தா இப்பிடித்தான் உடம்பு வெறும்
கட்டையாய்க் கிடக்கும். அதுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச்
செய்யவேணும். இதுல என்ன சாதி, இனம் என்று பார்க்கக் கூடாது. எனக்காக
உயிரையே தியாகம் செய்த வெள்ளையனின்ரயும், கண்மணியின்ரயும் உடல்கள்
அதுக்குரிய மரியாதையோட போகவேணும்' பரணி பெரியமனிதனைப் போலப் பேசினான்.
நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து வீட்டிற்குள் இருந்து ஒரு சிறிய மேசையை
எடுத்துவந்தார்கள். பரணி கண்மணியைத் தூக்கிக்கொண்டு வர, ரவியும்,
கேசவனும் வெள்ளையனின் உடலைத் தூக்கி வந்தனர். மேசையில் கிடத்திவிட்டு
வாளி நிறைய கொண்டு வந்த தண்ணீரில் உடல்களைக் குளிப்பாட்டினர். பரணியின்
கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.
'இனி எப்போ மறுபடி இப்படி குளிப்பாட்டப் போறன்' என்று அவன்
நினைத்துக்கொண்டான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊர்ச் சந்தைக்குப் போய்வரும் மக்கள்
அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். நல்லம்மா வீட்டில் நடந்த சம்பவம்
ஊர் முழுவதும் பரவியிருந்தது. போவோர் வருவோர் எல்லாம் புதினம்
விசாரிப்பதும், பார்ப்பதுமாக இருந்தனர்.
'ஐயோ பாவம்' என்றவர்களைவிட 'பார் கிறுக்கன்கள் தாட்டுப்போட்டு போறதுக்கு
என்ன செய்துகொண்டு இருக்குறாங்கள். சொன்னாலும் விளங்காது சரியான
கிறுக்கனுகள்' என்று வசை பாடியவர்கள்தான் அதிகம்.
'வெள்ளையனுக்கும் கண்மணிக்கும் இருக்கிற நன்றி உணர்வோ, நேசமோ இல்லாத
இந்த ஜடங்கள் பேசுறதை கணக்கில எடுக்காத மச்சி' பரணியின் தோள் தொட்டுச்
சொன்னான் ரவி.
'சரி சரி நடக்க வேண்டியதைக் கவனிப்பம்' என்று துரிதப்படுத்திய கேசவன்
ஓடிப் போய் நல்லம்மா கொண்டு வந்து வைத்திருந்த துணிகளில் ஒன்றை எடுத்து
அந்த உடல்களின் ஈரம்போக துடைத்து விட்டான். வீட்டு வளவில் பூத்திருந்த
பூக்களைப் பறித்து பரணியின் தாய் இரண்டு மலர்ச்சரங்கள் தொடுத்து எடுத்து
வந்தாள். பரணி மாலைகளை வாங்கி கண்மணியின் கழுத்திலும், வெள்ளையனின்
கழுத்திலும் போட்டுவிட்டான். ஆசையாய் அந்த பஞ்சு போன்ற உடல்களை
மறுபடியும் தடவிக்;கொடுத்தான்.
பரணி சட்டென்று குசினிக்குள் ஓடினான்;. திரும்பி வந்த போது அவன் கையில்
கண்மணி பால் குடிக்கும் கப் இருந்தது. பஞ்சுபோன்றிருந்த கண்மணியின்
தலையை ஆசையாசையாய் வருடினான் பரணி. பால்க்கப்பை சரித்து 'இந்தா கண்மணி
கொஞ்சம் பால் குடி..... குடி கண்மணி...... குடி......' விம்மியபடி அழுத
மகனைத் தூக்கி அணைத்துக்கொண்டாள் தாய். ரவியும், கேசவனும் நல்லம்மா
கொடுத்த துணியினால் வெள்ளையனின் உடலை மூடினார்கள்.
'ஐயோ என்ர வெள்ளையன்...! அம்மா என்ர வெள்ளையன் அம்மா.....!!' பரணி
தாயின் மடியில புரண்டு அழுதான். ரவியும், கேசவனும் அந்த இரண்டு
உடல்களையும் தூக்கி மெதுவாக குழியில் இறக்கினர். ரவி மண்வெட்டியை
எடுத்து மண்ணை அள்ளிக் குழியை மூடினான். தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு
அழுதான் பரணி.
'கண்மணி....... என்ர கண்மணி.....' விசும்பினான் பரணி.
ரவியும், கேசவனும்; கூட அழுதனர். பரணி அவசரமாய் நடந்து தோட்டத்தில்
எங்கோ முளைத்திருந்த இரண்டு மல்லிகைச் செடிகளை கொண்டு வந்தான். அந்தக்
குழியின் முன்பாக அவற்றை நாட்டி விட்டு நிமிர்ந்தான்.
'சரி சரி எல்லாம் முடிஞ்சு போட்டுது. இனி அழக்கூடாது. போங்கோ' என்று
நல்லம்மா கூறவும் ரவியும் கேசவனும் புறப்பட ஆயத்தமானார்கள். பரணிதான்
பிரமை பிடித்தவன்போல அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தான். மண்ணில்
விழுந்துபுரண்ட பரணியை தன் தோள்களில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடந்தாள்.
ரவியும், கேசவனும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
கண்மணியும், வெள்ளையனும் போன வருடம் பரணியின் பிறந்தநாள் பரிசாக
அவனுடைய மாமா கொடுத்தது தான். நண்பர்கள் கூடி ஆராய்ந்து, அந்த
பொம்மேரியன் நாய்க்குட்டிக்கு வெள்ளையன் என்றும், பச்சை நிறக்கண்களால்
மிரண்டு பார்த்த அந்தப் பூனைக்குட்டிக்கு கண்மணி என்றும் பெயர்
வைத்தார்கள்.
நடப்பவற்றை எல்லாம் மூன்றாம் பேர்வழியாக வேலியோரமாக நின்று
பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு அந்தப் பிஞ்சு உள்ளங்களின் வேதனை நெஞ்சை
நெகிழவைத்தது. இதயம் இரும்பாய்க் கனத்தது.
அப்போது சிவன்கோயில் ஒலிபெருக்கியில் சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்ற
குரலில் பாடிக்கொண்டிருந்த சிவபுராண வரிகள் காதில் விழுந்தன.
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்;........' மாணிக்கவாசகரின்
உருக்கமான வரிகள் என் நெஞ்சைப் பிசைய என் துவிச்சக்கரவண்டியை
உருட்டியபடி நடக்கிறேன்.
..................................
கூர், மார்ச் 2010
வீரகேசரி, 16 மே 2010
ahil.writer@gmail.com
|