மட்டுவில் ஞானக்குமாரன்
கவிதைகள் கண்ணீர்
விழுதுகள் ....!
சலுகைக்காற்று வீசும்
திசைபார்த்து
நீச்சலடிக்கும்
பாய்மரத்து ஓடங்களாகிப்போன
ஊடகங்கள்...!
தலை கொய்யப்பட்டது கூட
அறியாமல்
தலைப்புச் செய்திக்காக
காத்திருக்கும் வானொலிகள்...!
இடி
இடிப்பதைக் கூட
அவசரச் செய்தியாக்கிவிடுகிற(breaking
news)
தொலைக்காட்சிகள்
இப்படி
ஊர் எரியும் போது கூட
உறைப்புப் பணியாரம் சுடுவது பற்றிய
விவாதத்தை
சிரித்தபடி நீங்கள் நடாத்தும்போது
கன்னத்திலே படரும்
இந்தக் கண்ணீர் விழுதுகளை
எந்தக்கை தான் வந்து
துடைத்திட
நீழும் ...
இன்னொரு
கண்ணீர் விழுது ....!
கண்ணீர் விழுதுகள்
தெரியாதபடிக்கு
கண்கள் பழுதுகளாகிவிட்ட
பார்வையாளர்கள் ....
கண்ணீர்
விட்டுக்கவிதை எழுதினால் கூட
தண்ணீர் போட்டுவிட்டு
தடவிப் பார்க்கும்
பண்டிதர்கள் ....
இலக்கியக் கப்பல் ஓட்டி
விளையாட
கண்ணீர் கடல் தேடும்
கலைஞர்...
கிரிக்கெட் சூதாட்டம்
வெல்வதற்காக
தொலைக்காட்சிக் கடவுள் முன்பாக
தவமிருக்கும்
இளைய சமூகம்...
வலியின்
வதைகளைப்பற்றிச்
சொல்லும்போது கூட
வாலியின்
கவிதைகள் போல
வலிமையாய் இல்லையே என
நீங்கள் நிராகரிக்கும் போது
கன்னத்திலே படரும்
இந்தக் கண்ணீர் விழுதுகளை
எந்தக்கை தான் வந்து
துடைத்திட
நீழும்
இந்தியாவுக்கு இன்னொரு கடிதம்
...!
பாலஸ்தீனம்
பிரிந்தால் சுதந்திரம்
பாகிஸ்தானைப் பிரித்தால் தந்திரம்
எங்களுக்கு மட்டும்
சுதந்திரம்
ஏன் தரித்திரமானது ...?
அயல்வீட்டுக்கும்
ஆயுதவிருந்து
எமது புண்ணுக்கும்
சீழ் மருந்து
அருமையான அஸ்திரம்
உனது நடுநிலைப்
பாத்திரம் ...!
அறநெறி என்பதும் கூட
வெள்ளையருக்கு எதிராக
நீ பாவித்த
ஒருவழிப்பாதை தந்திரமோ ..?
உச்சத்திலே பறப்பது
உனது
கொடி மட்டுமா
துரோகத்தனத்திலே தோய்ந்த
உனது நெடியும்தானே .....
சொல்வாயா
நேரு நாடே
உனக்கு மட்டும்
ஆனந்த சுதந்திரமாம்
எமக்கோ
ஏனிந்த சுதந்திரமா ...?
நீ மட்டும்
பாகிஸ்தானை விவாகரத்து செய்யலாம்
ஆனால்
நாங்கள் மட்டும்
பிணம்கூடவா வாழ்க்கை நடாத்துவது
பாரதநாடே
உனக்கு மட்டும் சுதந்திரம்
என்பது
அழகான பொருள்
எமக்கென்ன அழுக்கா
பதில் தருவாய்
எமை ஏறெடுத்தும் பாராத நாடே...
|