நூல் : பாக்கெட்டில் உறங்கும் நதி
நூல்
ஆசிரியர் :
  கவிஞர் சிறுவை அமலன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி.

னிய நண்பர்  மு.முருகேஷ் அவர்களிடம் அறிமுகம்  ஆனவர்கள் மட்டுமன்றி அறிமுகம் இல்லாத யார் கேட்டாலும் கூட ஹைக்கூ நூல் என்றால் உடன் அணிந்துரை தந்துவிடுவார் .அந்த அளவிற்கு ஹைக்கூ மீது பற்றும் ,பாசமும் உள்ளவர் .இந்த நூல் மு .முருகேஷ் அவர்களின் பதிப்பகமான அகநி வெளியீடாக வந்து இருப்பதால் அவரது அணிந்துரை கூடுதல் கம்பீரமாக உள்ளது.  கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின்  அணிந்துரையும் மிக நன்று .

நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்கள் சமுதாயத்தை உற்று நோக்கி சமுதாய அவலங்களைச் சாடி ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கொடூரமான தமிழினப் படுகொலையை யாராலும் மறக்க முடியாது .மன்னிக்கவும் முடியாது. அதனை நினைவூட்டுக் ஹைக்கூ ஒன்று .

முளைத்து நின்றன 
புதைக்கப்பட்ட
எலும்புகள் 
ஈழத்து
மண் !

உணவகங்களிலும் , விருந்துகளிலும் , இல்லங்களிலும் பரிமாறும் உணவுகளை ருசித்து உண்கிறோம் ஆனால் அதில் உள்ள சமையல் செய்தவர்களின் உழைப்பை நாம் உணருவதில்லை அதனை நன்கு   உணர்த்தும் ஹைக்கூ நன்று .

அடுப்பங்கரையில் 
இரத்தம்
சுண்டியது 
சமையல்
தொழிலாளி !

வழி மேல் விழி வைத்து காத்து இருப்பதை படித்து இருக்கிறோம் இவர் சற்று வித்தியாசமாக காட்சிப் படுத்தி உள்ளார் பாருங்கள் .

கடலுக்கு சென்ற கணவன் 
கலங்கரை
விளக்காய் 
மீனவச்சி
கண்கள்

இன்று தமிழக மீனவர்கள் அனைவரின் மனைவியும் வழி மேல் விழி வைத்தே காத்து இருக்கின்றனர் காரணம் இலங்கை சிங்கள இனவெறி பிடித்த இராணுவம்  மீனவர்களை தாக்குவது ,சிறைபிடிப்பது, படகுகளைக்   கைப்பற்றுவது   தினமும் செய்து கொண்டே இருக்கிறது. தட்டிக் ஏகேட்க்க நாதி இல்லை மத்தியில் ஆட்சி மாறியபோதும் கடலில்  காட்சி மாறவில்லை .சென்ற மீனவன் மீனோடு திரும்புவது அதிசியமாகி விட்டது .

அன்று காந்தி ,காமராசர் ,கக்கன் ,அண்ணா போன்ற நேர்மையானவர்கள் அரசியலில் இருந்தார்கள் இன்று அரசியலில் நேர்மை கேள்விக்குறியானது .ஊழல் மலிந்து விட்டது .எங்கும் எதிலும்  ஊழல் என்றானது .ஊழல் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்று நிருபித்து வருகின்றனர் எள்ளல் சுவையுடன் உள்ளல் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

ஒலிம்பிக்கில் 
முதலிடம்
பெறும் இந்தியா 
ஊழல்
போட்டி !

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமிதம் கொண்டோம் அன்று .ஆனால் இன்று மக்களாட்சியே கேலிக் கூத்தாகி வருகின்றது .வாக்களிக்க பணம் வழங்கும் அவலம் .பணம் தந்து வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலை .சின்ன மீன் போட்டு பெரிய மீன் எடுக்கும் வேலை செய்கின்றனர் தேர்தல் அவலம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

ஐந்தாண்டுகளில் 
கட்சிகள்
செய்தது 
ஓட்டுக்கு
ரூ 500.

பெரியார் பிறந்த மண்ணில் இன்று மூடநம்பிக்கைகள் பெருகி விட்டது வேதனை தருகின்றது பேய்ப்படம் எடுத்து பணம் சேர்க்கும் அவல நிலை சிலருக்கு .போட்டிப் போட்டு பேய்ப்படம் எடுக்கின்றனர். இராசிபலன் பார்ப்பது ,சாமியார்களை நம்புவது ஏமாறுவது தொடர்கதையாகின்றது . மூடநம்பிக்கை சாடி வடித்த ஹைக்கூ நன்று. சிந்திக்க வைக்கும் .

குழந்தை வரம் வேண்டி 
மரத்தில்
தொட்டில் 
பெருங்காற்றில்
விழுந்த மரம் !

ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பதும் மூட நம்பிக்கைதான். ஆங்கில வழி படித்து விட்டு சுயமாக சிந்திக்கத்  தெரியாதவர்கள் உண்டு. ஆனால் தாய் மொழியான தமிழ் வழி பயின்று உச்சம் தொட்டவர்கள் பலர் .

அறிவல்ல ஆங்கிலம் 
மொழி
 
அவ்வளவே
!

குலத்தொழில் விடுத்து அனைவரும் கல்வி கற்க வேண்டும் .பதவிகள் பெற வேண்டும் ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் .என்பதே மனித நேய ஆர்வலர்களின் விருப்பம். குலத்தொழில் ஒழிக்க உரக்கக் குரல் தந்துள்ளார் .

பறையடித்த தாத்தா 
பறையடித்த
அப்பா |
திருப்பி
அடிக்க நான் !

அடித்தால்தானே திருப்பி அடிக்க வேண்டும் .யாரும் யாரையும் அடித்தல் கூடாது .வன்முறை நன்முறை அன்று .

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக யார் எப்படி அழிந்தால் என்ன என்று நினைப்பது மனிதநேயமன்று .அணு உலை என்பது ஆபத்து என்று வளர்ந்த நாடுகள் மூடி வருகின்றனர் .ஆனால் நம் நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள் திறந்து வருகின்றனர்

அடிவயிற்றில் 
அணுக்கழிவுகள்
 
தலைமுறை
சமாதி

படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வுகள் உண்டாக்கும் ஹைக்கூ கவிதைகள் நிரம்ப உள்ளன பாராட்டுக்கள் .குறைந்த விலையில் மிக நேர்த்தியாக பதிப்பித்த அகநி வெளியீட்டுக்கும் பாராட்டுக்கள்

நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் அடுத்து எழுதும் ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .இந்த நூலில் பல ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் உள்ளன .

அகநி வெளியீடு ,எண் 3.பாடசாலை வீதி ,அம்மையப்பட்டு ,வந்தவாசி .604408. பேச  94443 60421. விலை ரூபாய் 25.