எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமி அவர்களுடன்
ஒரு நேர்காணல்:
அகில்
(இவர்
இந்தியாவில் மேலாண்மறைநாடு என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த படைப்பாளி.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த
38 ஆண்டுகளாக
எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளார். இவரது முதல்ச் சிறுகதை
1972 இல் வெளியானது.
பாசத்தீ, மனப்பூ, சூர்யவேர்வை, மானாவாரிப்பூ, பூமனச் சுமை, மானுடப்
பிரவாகம் உட்பட பல சிறுகதைத் தொகுப்புக்கள் எழுதியுள்ளார். இதுவரை
22 க்கும்
மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கள், 6
நாவல்கள், 6
குறுநாவல்கள் வெளியிட்டுள்ளார். மின்சாரப் பூ என்ற இவரது சிறுகதைத்
தொகுப்பு 2008
இல் சாகித்திய அகாடமி விருது பெற்றது. இலக்கியச் சிந்தனைப் பரிசை
8 தடவைகள்
பெற்றிருப்பதோடு, கோவை லில்லி தேவசிகாமணி விருது, அனந்தாச்சாரியார்
அறக்கட்டளை பரிசு, ஸ்டேட் வங்கி விருது, தமிழக அரசு விருது எனப் பல
விருதுகளையும் பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
உருவாக முக்கிய பங்காற்றியவர். தற்போது அதன்துணைப் பொதுச் செயலாளராக
இருக்கிறார். )
1.
உங்களைப் பற்றி.....?
என்னைப் பற்றிச் சொல்வதென்றால், நான் நவீன எழுத்தாளர்கள் மத்தியில்
ஒதுக்கப்பட்டவன் மாதிரி, ஒரு தலித் மாதிரி. ஏனென்று சொன்னால் நவீன
எழுத்தாளர்கள் யதாரத்த வாதமாக எழுதுவதை ஏளனமாகவும், மலிவாகவும்
பார்க்கிறார்கள். இதற்கு மத்தியில் நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்து,
அந்த குக்கிராமத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு எழுத்தாளன். நான்கு
சிறுகதைகளை எழுதியவுடன் சென்னை மாநகரத்திற்குப் போய் அங்குள்ள
தொலைக்காட்சி நிலையங்களோடு அல்லது திரைப்பட இயக்குனர்களோடு தொடர்புகளை,
உறவுகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிற எழுத்தாளர்கள் உலகிற்கு மத்தியில்
38
வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற நான் இதே குக்கிராமத்திலேயே
இருக்கிறேன். அதுமட்டுமல்ல வெறும் 5ஆம்
வகுப்பு மட்டும் படித்துவிட்டுஇ அதைத் தாண்டிய வேறு கல்வித் தகமைகள்
எதுவும் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக இருக்கிறேன். ஆக நவீன
எழுத்தாளர்களுக்குள்ளேயே என்னை ஒரு பாமரனாக கருதுகிற ஒரு மனப்பாங்கு
இருக்கிறது. இந்த மனப்பாங்கிற்கு மத்தியிலே, இவற்றையெல்லாம் நான்
பொருட்படுத்தாமல்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால்
என் கிராமத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். என் கிராமத்தை மட்டுமல்ல.
உலகத்திலுள்ள எல்லா கிராமங்களையும் நேசிக்கிறேன். கிராம மக்கள்
உழுகிறார்கள். உழைக்கிறார்கள். உணவுப் பொருட்களை விளைவிக்கிறார்கள்.
உலகத்திற்கெல்லாம் கொடுக்கிறார்கள். தாங்கள் பட்டினியாக இருக்கிறார்கள்.
அப்படி தங்களுடைய வியர்வையை உலகத்திற்கு பகிர்ந்தளித்து வாழுகிற ஒரு
தியாகக் கூட்டமாக வாழ்கிற கிராமமக்கள் இருப்பதால் அவர்களைப் பற்றி
தொடர்ந்து கதை எழுதிக்கொண்டே இருப்பது ஒரு கடமையாக, இயல்பான பணியாக நான்
செய்துகொண்டு இருக்கிறேன்.
Times Of India
என்று ஒரு
ஆங்கில ஏடு இருக்கிறது. அதில் சாய்நாத் என்ற ஒரு புகழ் பெற்ற நிருபர்
என் கிராமத்திற்கு வந்து என்னைப் பேட்டி கண்டார். ஒன்றே கால் மணிநேரப்
பேட்டியை ஒரு முழுப்பக்கத்தில் வெளியிட்டார்கள். அப்படிப் போடும்போது
அதற்கு இட்ட தலைப்பு என்னவென்றால் 'கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்ட
எழுத்தாளன்' என்று வைத்தனர். இப்படி கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்ட ஒரு
எழுத்தாளனாக கிராமத்தில் பிறந்து கிராமத்தில் வாழுகிற, ஒரு கிராமத்து
பாமரனாகவும் படைப்பாளியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளன்
நான்.
2.
உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
ஆரம்பத்தில் எனக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதை நான் கண்டுகொள்ளவில்லை
என்பதுதான் யதார்த்தம். சிறுகதை எழுதினால் எழுத்தாளன் ஆகலாம்.
இலக்கியவாதியாக பரிசுகள் பெறவேண்டும். விருதுகள் பெறவேண்டும். உயர்ந்த
இடத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று இப்படி சொல்லப்படுகிற இலக்குகளை
வைத்து நான் பேனா எடுக்கவே இல்லை. ஒரு காலகட்டத்தில் எனது குடும்பம்
வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது நான் ஐந்தாம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது படிப்பைத் தொடரமுடியாமல்
போயிற்று. படிக்க வேண்டும் என்ற உந்துதலில் நிறைய புத்தகங்களைப்
படித்தேன்.
அகிலனில் தொடங்கிஇ டாக்டர் மு.வ தொடங்கி, பல்வேறு நாவல் ஆசிரியர்களுடைய
இலக்கியவாதிகளுடைய நூல்களை எல்லாம் வாசித்தேன். ஒரு கட்டத்தில்
கொம்யூனிச இயக்கத்துடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு நிறைய
சோவியத் நாவல்களைப் படித்தேன். தமிழில் வெளிவந்த சோவியத் நாவல்கள்
அத்தனையையும் முழுமையாகப் படித்தேன். அவற்றைப் படித்த பிறகு தமிழில்
அந்தமாதிரியான படைப்புக்கள் இல்லையே என்று ஏங்கினேன். பிறகு
ஜெயகாந்தனின் 'யுகசந்தி' சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. அதைப் படித்த
போது சோவியத் நாவல்களில் கிடைத்த யதாரத்தம், வாழ்க்கையின் வெற்றி,
வாழ்க்கையை வாழ்க்கையாகவே சொல்கிற, அதற்குரிய உக்கிரத்தோடு சொல்கிற
அந்த உண்மைத்தன்மை ஜெயகாந்தன் கதைகளில் ஓரளவுக்கு இருந்தது. இந்த
சோவியத் கதைகள் என்னை வசீகரித்திருந்த ஒரு நிலையில் தான் நான் எனக்குக்
கிடைத்த ஒரு அனுபவத்தை ஒரு படைப்பாக எழுதினேன். அது சிறுகதையா? உரைநடையா?
இலக்கிய சித்தரிப்பா? அல்லது வேறுபட்ட வேடிக்கை சித்திரமா? என்று எனக்கு
சொல்லத் தெரியாது. அப்படி எந்த ஒரு முடிவோடும் நான் அதை எழுதவில்லை.
எனக்கு கிடைத்த அனுபவத்தை அப்படியே எழுதி எனக்குத் தெரிந்த ஒரே இதழான
செம்மலர் மாத இதழுக்கு அனுப்பினேன். பொதுவுடமை இயக்கம் நடத்திய
முற்போக்கு இலக்கிய இதழ் அது. அவர்கள் தான் அதை சிறுகதை என்று
வகைப்படுத்தி சிறுகதையாக பிரசுரம் செய்தார்கள். நான் முதல்முதலில்
எழுதிய உணர்வு, அனுபவம், சிந்தனை என் பெயரோடு சேர்ந்து அச்சு எழுத்தில்
பார்த்தவுடன் அது ஏற்படுத்திய புளகாங்கிதம், சந்தோசம், பூரிப்பு
உலகத்திலேயே கிடைக்காத ஒரு பெரிய புகழ் எனக்கு கிடைத்துவிட்ட மாதிரிமான
ஒரு அபூர்வமான பரவச உணர்வு எனக்குக் கிடைத்த பிறகுதான் எனக்குள்ளே ஒரு
எழுத்தாளன் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். இப்போது தொடர்ந்து
எழுதிவருகிறேன்.
3.
யாருடைய எழுத்துக்களை அதிகம் வாசிப்பீர்கள்?
நிறையப் பேருடைய நாவல்களை வாசித்திருக்கிறேன். குறிப்பாக சோவியத்
நாவல்கள் என்னை மிகுந்த வசீகரத்துடன் வசியம் பண்ணிக் கொண்டன. தமிழில்
மிகவும் நேசித்து படித்தது ஜெயகாந்தனுடைய சிறுகதைத் தொகுப்புகள்,
நாவல்கள் அவற்றோடு கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன்
இவர்களுடைய படைப்புக்கள் எல்லாமே என்னை மிகவும் செதுக்கின. என்னை
மிகவும் பண்படுத்தின. இந்த உலகில் என்னை புது மனிதனாக மாற்றின.
4.
உங்களுடைய இலட்சியம் அல்லது கனவு என்ன?
என்னுடைய கனவு என்பது மிகவும் எளிமையான ஒரு விடயம். ஆனால் கடுமையான
விடயமும் கூட. ஒடுக்குமுறையே இல்லாத ஒரு உலகத்தை, எல்லா மனிதர்களும்
பரஸ்பரம் புன்னகை ஒன்றையே பரிமாறிக்கொள்கிற, அன்பும் தோழமையும் மட்டுமே
நிலவுகிற ஒரு உலகத்தை நான் எதிர்பார்க்கிறேன். இதை மேலோட்டமாகப்
பார்த்தால் எளிமையானது. ஆழமாகப் பார்த்தால் கடுமையானது.
மனித குலம் மேன்மையடைய வேண்டும், ஒழுங்குபெற வேண்டும். இன்னும் சொல்லப்
போனால் அன்பைத் தவிர இந்த பூமியில் எதுவுமே இல்லை என்று சொல்லத்தக்க ஒரு
இனிய உலகமாக இந்த உலகம் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இது
எல்லாம் ஒரு பொத்தம் பொதுவான மனித இலட்சியம்.
ஒரு எழுத்தாளனாக எனது இலட்சியம் என்று பார்த்தால், என்னுடைய நான்
பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த கிராமத்தைப் பொறுத்தவரை
எனது கிராமத்து மக்கள் சாதி, மத, இனச் சண்டைகள் இல்லாமல் ஒற்றுமையாக
இருந்து தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை தக்க முறையில் தீர்க்கும்
விளிப்புணர்வு பெற்று ஒரு விடியலுக்கான வழியை ஒற்றுமையைத் தேட வேண்டும்
என்பது எனது இப்போதைய உடனடிக் கனவு.
5.
கிராமம் எந்தவகையில் உங்கள் எழுத்துகளுக்கு கைகொடுக்கிறது?
என் கதைகளின் அத்தனை கச்சாப் பொருளும் என் கிராமம்தான். கிராமத்தின்
பண்பாடு, கிராமத்தின் ஒழுக்கம், கிராமத்தின் ஒழுக்கமின்மை, கிராமத்தின்
அறியாமை, கிராமத்தின் அறிவு இவை எல்லாமே எனக்கு பிடித்த விசயங்கள்.
கிராம மக்கள் ஞர னச்சுரங்கம். அனுபவக்களஞ்சியம்
கிராமத்திலுள்ள உழைப்பாளிகள் மொழியையே வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்
என்று நான் நம்புகிறேன். மொழிக்கு புதிய புதிய வார்த்தைகளை கிராமத்து
மக்கள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். வார்த்தைகள் வழங்குதல் என்பது
சாதாரண விசயம் அல்ல. மகாகவி பாரதி தன்னுடைய ஆயுள் முழுக்கதான் செய்த
கவித்துவமான பணிகளுக்கு மத்தியில் தமிழுக்கு கொடுத்த வார்த்தைகள் இரண்டே
இரண்டு வார்த்தைகள் தான். அவை''புரட்சி'' ''பொதுவுடைமை'' என்ற இரண்டு
வார்த்தைகளும்தான். ஒரு மகாகவியே தான் ஆயுள் முழுக்க இரண்டு
வார்த்தைகளைக் கொடுக்க முடிகிறபொழுது ஒன்றுமே தெரியாத கிராமப்புற பாமர
உழைப்பாளி மக்கள் அனுதினமும் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் தமிழுக்கு, வளரும் தமிழுக்கு
உணர்வையும், அர்த்தத்தையும் மண்ணோடு சேர்த்து மல்லுக்கட்டி
வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கையில் கிடைக்கிற அனுபவங்களில் இருந்து
வார்த்தைகளை சேகரித்து வார்த்தைகளையும் வடிவமைத்து வழங்கிக்கொண்டு
இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வாழ்வதற்கான உணவை மட்டும் வழங்கவில்லை.
வாழ்வதற்கான உயிரை மட்டும் வழங்கவில்லை. வாழ்வதற்கான வியர்வையை மட்டும்
வழங்கவில்லை. மொழிக்கான வார்த்தைகளையும் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே என் கிராமம்தான் என் படைப்புக்களுக்கான எல்லாக் கச்சாப்
பொருட்களும். என் கதைகளும் சரி, குறுநாவல்களும் சரி. என் சிறுகதைகளும்
சரி என்னுடைய எல்லாப் படைப்புக்களுமே என் வட்டார கிராம மக்களுடைய, இந்த
என் உழவு மக்களுடைய, உழவு சார்ந்த விவசாய மக்களுடைய, உழவு சார்ந்த
தலித்து மக்களுடைய, உழவு சார்ந்த பெண் மக்களுடைய பிரச்சனைகள், பாடுகள்,
துயரங்கள், கண்ணீர்கள், கதைகள் இவைதான் என்னுடைய கதைகளின் பாடுபொருள்.
6.
உங்களுடைய இலக்கியப் பசிக்கு, உங்களுடைய கதைகளுக்கு கருவாக அமைவது
கிராமம் என்ற நிலையில்தான் நீங்கள் கிராமத்தை விட்டு வெளியேறாமல்
இருக்கிறீர்கள் என்று கருதலாமா?
நிச்சயமாக இல்லை. எந்தவொரு படைப்பாளியும் கருவுக்காக காத்திருக்கத்
தேவையில்லை. திருமணம் செய்து குழந்தைகள் பெற்று வாழ்ந்த மாக்சிம்
கார்க்கி தான் 'பிரமச்சாரியின் டைரி' என்ற நாவலை எழுதினார். ஒரு ஆங்கில
எழுத்தாளர் அடிமையின் காலத்தை ஊகித்து 'ஸ்பார்ட்டகஸ்' என்ற நாவலை
எழுதினார். ஆகவே கருப்பொருளுக்காக கிராமத்தில் வாழ வேண்டிய அவசியம்
இல்லை.
நகர்ப்புறத்திற்கு நான் போகாமல் இருப்பதற்கு காரணம் எளிய காரணம்தான்.
என்னுடைய படைப்புக்களை நான் இலக்கியப் படைப்பாகவே படைத்துக்கொண்டு
இருக்கிறேன். வணிகப் படைப்பாக நான் படைக்கவில்லை. எழுதுவதன் மூலமாக
பணத்தைச் சம்பாதித்து எனது குடும்பத்தை வாழ வைப்பது என்ற இழிந்த புத்தி
எனக்கு எப்போதும் ஏற்படவில்லை. என் படைப்பினால் வருகின்ற பணத்தை
பெற்றுக்கொள்கிறேனே தவிர பணத்திற்காக படைப்புக்களை மலினப்படுத்துவது,
சமரசப்படுத்துவது அல்லது இழிவுபடுத்துவது என்பது எனக்கு பொருத்தமாகாது.
ஆகவே என்னுடைய படைப்பின் நேர்மையை தொடர்ந்து பாதுகாப்பதற்குஇ ஒரு எளிய
வாழ்க்கை வாழ்வதற்கு கிராமம் தான் சரியாக இருக்கும்.
என் குடும்பத்துடன் நான் சென்னையில் இருந்தால் ஒரு மாதத்திற்கு
பதினைந்தாயிரம் ரூபாய் தேவை. இதே என் குடும்பம் எனது கிராமத்தில்
இருந்தால் வெறும் மூவாயிரம் ரூபாயே போதும். ஆகவே இந்த எளிமை காரணமாகவும்
என் பிறந்த கிராமத்தை விட்டு பிரிவதற்கு வேறு எந்த முகாந்திரமும்
இல்லாததாலும் நான் இங்கேயே இருக்கிறேன்.
திரைப்படத் துறைக்கோ, தொலைக்காட்சித் துறைக்கோ செல்ல வேண்டும், அவற்றில்
இடம் பிடிக்க வேண்டும் என்ற சபலமோ, சலனமோ எனக்கில்லை. கிராமம் என்பது
இயல்பான என்னுடைய வாழ்க்கையாகவும், எளிமையான ஒரு வாழ்க்கைக்கு
தேவையானதாகவும் இருக்கிறது.
7.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முக்கிய
பணியாற்றியவர்களில் நீங்களும் ஒருவர். அந்த வகையில் தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி குறிப்பிடுங்களேன்?
செம்மலர் என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழ் வெளிவந்துகொண்டிருந்த காலமது.
இப்போதும் வருகிறது. அந்தக் காலத்தில் இந்த இதழில் எழுதிக்கொண்டிருந்த
எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, கிட்டத்தட்ட
24 பேர் ஒரு
தொழிலாளர் சங்க அலுவலகத்தில் ஒன்றாகக் கூடினார்கள். தமிழ் நாடு
முழுவதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கருவாகி, உருவாகி எழுந்த இடமாக
அந்தக் கூட்டம் அமைந்தது. அந்தக் கூட்டத்தின் பின்னர் முற்போக்கு
எழுத்தாளர் அமைப்பாக அது உருவெடுத்தது. அதன் பின்னர் நான் தமிழ்நாடு
முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, குறிப்பாக மதுரைக்கு தெற்காக உள்ள
தென்தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு கிளையாக
வடிவமைத்து, கிளைகளை உருவாக்கினேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
அமைப்பின் நிறுவுநர்களில் ஒருவன் நான் என்பது மட்டுமல்ல, இப்போது
வரைக்கும் எனது மாநிலத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து
வருகிறேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்தியா ஒரு ஒடுக்கு
முறைக்குள் இருந்த காலத்தில், அவசரநிலை என்ற ஒடுக்குமுறை நிலை நீடித்த
காலத்தில், விடுதலைக்காக போராடிய தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலையில்
அடைக்கபட்டிருந்த இருண்ட ஒரு அரசியல் காலத்தில், ஜனநாயகம் அற்றுப்போன
ஒரு காலத்தில், ஜனநாயக எழுத்துக்காகவே ஜனநாயக எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து
நிற்கும் ஒரு அமைப்பாகவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
உருவானது. அது உருவானது, சிறைச்சாலையில் கிரிஷ்ணன் அவதரித்ததைப் போல.
மாட்டுத் தொழுவத்தில யேசுநாதர் அவதரித்ததைப் போல. ஒரு இருண்ட காலத்தில்
ஒளிமிக்க வாழ்க்கையின் கனவுகளோடு எழுந்தது. நெருக்கடி நிறைந்த
காலங்களில் எதிர்த்து துணிச்சலுடன் நின்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாதனை என்று சொல்வதென்றால்
அதிநவீன இலக்கியங்களால் பாதிப்புற்று யதார்த்தவாதம் சிதறுண்ட காலத்தில்
யதார்த்த வாதத்திற்காக வாதாடி, போராடி நிலைநிறுத்திய அமைப்பு இது.
அதுமட்டுமல்ல கலை இலக்கிய இரவு என்ற ஒரு பல்லாயிரம் மக்கள் திரளுகிற ஒரு
கலாச்சாரத் திருவிழாவை, பண்பாட்டு வடிவத்தை தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் வழங்கியிருக்கிறது. ஆகவே தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் எழுத்திலக்கியத்தில் யதார்த்த வாதத்திற்காகவும்,
கலைத்துறையில் தமிழ் கலை இலக்கிய இரவு என்ற முறையில் பொதுமக்களுடனும்
ஒருசேர எழுத்தாளர்களுடனும் பொதுமக்களுடனும் உறவுகொண்டிருக்கிற ஒரு
அமைப்பாகவும் ஏழைக்கு எதிராக மொழியை நிலைநிறுத்துகிற ஒரு அமைப்பாகவும்
இருந்து வருகிறது.
8.
அரசியல், ஆன்மீகம் இரண்டிலும் தங்களுக்கு உள்ள ஈடுபாடு பற்றி...?
அரசியல் ஈடுபாடு என்பது ஒரு எழுத்தாளனுக்கு மிகவும் அவசியமானது. கட்சி
அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்பது எழுத்தாளன் தீர்மானிக்கிற விசயம்.
மகாகவி பாரதியார் கூட காங்கிரஸ் மாநாட்டிற்காக சூரத்திற்கு போய் அங்கு
அப்பொழுதே நாற்காலியைத் தூக்கியெறிகிற கலாச்சாரத்தை துவக்கிவைத்தவர்
தான். மகாகவி பாரதியே ஒரு அரசியல் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு ஒரு
மகாகவியாக திகழமுடிகிறது என்று சொன்னால், எழுத்தாளன் ஒரு அரசியல்
கட்சியில் இருக்கலாமா என்றால் இருக்கலாம். அதற்கான முன்மாதிரிகள் நிறைய
இருக்கின்றன. அரசியல் கட்சியே இல்லாவிட்டாலும் கூட ஒரு சமுதாய அரசியல்
என்ற முறையில் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் சாராத எழுத்தாளன் என்று ஒரு எழுத்தாளன் தன்னை சொல்லிக் கொண்டால்
அவன் தனக்கு ஒரு அடையாளம் தொலைத்து விட்டான் என்றுதான் அர்த்தம்.
அடையாளம் உள்ள எழுத்தாளன் என்றால் அவனுக்கென்று ஒரு சமுதாய அரசியல்
வேண்டும். அது பாட்டாளி மக்கள் அரசியலாக இருக்கலாம். விவசாய மக்கள்
அரசியலாக இருக்கலாம். அல்லது நிலப்பிரபுத்துவ மக்களுக்கான அரசியலாக
இருக்கலாம். ஏதோ ஒரு அரசியலை சார்ந்துதான் எழுத்தாளன் இயங்க வேண்டும்.
ஒரு சமுதாய அரசியல் என்பது ஒரு எழுத்தாளனுக்கு அவசியம்.
மனம் சார்ந்ததுதான் ஆன்மீகம் என்று சொன்னால், எல்லா எழுத்தாளனும்
ஆன்மீகவாதிதான். ஏனென்றால், அவன் கண்ணுக்குப் புலப்படாத கனவுகளை
நோக்கித்தான் கரங்களையும், பேனாவையும், ஒட்டுமொத்த சமூகத்தையும்
இழுத்துக்கொண்டு செல்கிறவன். ஆகவே கண்ணுக்குப் புலப்படாதகனவுகளை நோக்கி
பயணப்படுகிற ஒரு எழுத்தாளன் இயல்பிலேயெ ஆன்மீகவாதிதான். அது இறையியல்
வாதி என்ற அர்த்தத்தில் அல்ல. மனம் சார்ந்த இலக்கியவாதி என்ற
அர்த்தத்தில்.
9.
சிறுகதை எழுதுவது பற்றி 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்று ஒரு
நூல் எழுதியிருக்கிறீர்கள். அந்த நூலை எழுத வேண்டும் என்ற உந்துதல்
எப்படி ஏற்பட்டது?
ஆம். அந்த நூல் இப்பொழுது வானதி பதிப்பகம் மறுபதிப்பு செய்திருக்கிறது.
அந்த நூலை நீங்கள் படித்திருந்தால் அதில் ஒரு எழுத்தாளனின் மேதமை
தெரியவே தெரியாது. பேதமைதான் தெரியும்.
ஒரு சிறுகதையை எழுதுகிறபோது என்னென்ன விடயத்தை தொட்டிருக்கலாம், மொழியை
கையாளுகிறபோது எழுத்தாளன் எப்படி தடுமாறி இருக்கிறார், அல்லது ஒரு கருவை,
ஒரு தவறான கருவை தேர்ந்தெடுக்கிறபோது அது எப்படி தவறான சிறுகதையாகப்
போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒருபடைப்பாளனின் படைப்புப் பணியில் ஏற்பட்ட சறுக்கல்கள், வீழ்ச்சிகள்,
தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் அனுபவமாக அதில் எழுதியிருக்கிறேன்.
ஏற்கனவே சிறுகதை என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? என்பது பற்றி
நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
உலக இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த எழுத்தாளர்களாக வாழுகிற படைப்பாளிகள்
திறமையான படைப்பாளிகள். கல்வியறிவில்லாத என்னைப் போன்ற படைப்பாளிகள்
அருவியோடு சேர்ந்து விழுந்த ஒரு பாறைத் துண்டு மெல்ல மெல்ல உருண்டு,
உருண்டு தானாகக் கால வெள்ளத்தோடு கண்ணாடிக்கல் ஆவதுபோல உருண்டு புரண்டு
ஒரு எழுத்தாளனாக உருக்கொள்கிற சிரமங்களை நீண்டகால தேர்ச்சியை நான்
அடைந்திருக்கிறேன். துயரங்களை அனுபவித்திருக்கிறேன். கல்விப் பின்புலம்
எதுவுமின்றி ஒரு பாமரனாக இருந்துகொண்டு படைப்பாளியாய் மாறுவதில்
இருக்கிற துயரங்களை, சில கஷ்டங்களை, அவமானங்களை நான் அறிந்திருப்பதால்
என்னைப் போலவே தடுமாறுகிற, சஞ்சலப்படுகிற குறைந்த கல்வியை உடைய
எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆக ஆசைப்பட்டால் அவர்களுக்கு உதவியாக
இருக்கட்டுமே என்று தான் என்னுடைய அனுபவங்களை, தோல்விகளை, என்னுடைய
நியாயங்களை, என்னுடைய காயங்களை, காயங்களின் ரணங்களை, ரணத்தின்
அதிர்வுகளை கட்டுரையாக பகிர்ந்துகொண்டேன்.
ஆக 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்பது என் படைப்புப்பணியில்
ஏற்பட்ட சறுக்கல்களையும், சறுக்கல்களுக்கான காரணங்களைப் பற்றியும்
என்னுடைய அனுபவங்கள் தான். சக பாடைப்பாளிகளுக்கு நான் உதவி செய்ய
வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிய நூல். என்னுடைய பலவீனங்களை
வெளிப்படுத்தினால் கூட பரவாயில்லை. அவை சகபடைப்பாளிக்கு பயன்தருமானால்
அதுவே எனக்கு திருப்தியும் மனநிம்மதியும் அளிக்கும்.
10.
படைப்பு உருவாக்க படிப்பு அவசியமா?
தேவையில்லை என்று சொல்வதற்கு நானே சாட்சி. கல்வியறிவு இல்லாத நிலையில்,
நான் ஒரு படைப்பாளியாக ஏறக்குறைய ஒரு முழுமையான வெற்றிபெற்றிருக்கிறேன்.
ஆகவே படைப்பாளியாக இருப்பதற்கு, மாறுவதற்கு கல்வியறிவு தேவையில்லை
என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால் பொதுவாக இலக்கிய சமூகத்தில் கல்விப்
பின்புலத்தோடு இருப்பவர்கள் உலக இலக்கியத்தை கல்லூரியில் கற்றுவிட்டு
வெளியே வந்து ஒரு சிறுகதையோ அல்லது ஒரு நாவலோ எழுதுவது மிகவும் சுலபமாக
இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் இலக்கியம் பற்றிப் பேசுகிறபோது ஒரு
மாக்சிம் கார்க்கியையோ வேறு ஒரு படைப்பாளியையோ சட்டென்று அவர்களால்
தொட்டுணர முடிகிறது. ஒரு கல்லூரிப் படிப்பு, கல்விப் பின்புலத்தோடு
இலக்கிய உலகத்தில் பிரவேசிக்கிறபோது இலக்கிய உலகம் சட்டென்று கதவு
திறக்கிறது. ஆனால் என்னைப் போன்ற கல்விப் பின்புலம் இல்லாதவர்கள்
இலக்கியப் படைப்பாளியாக மாறுகிறபொழுது, இலக்கிய அறிவைப் பெறுவதற்கு
முனைகிறபோது அது பெரும் மலைப் பாiறையை உருட்டி உருட்டி வடிவமைக்கிற ஒரு
விசயமாகத்தான் இருக்கிறது. மெல்ல மெல்ல அனுபவங்களின் மூலமாகவே
படைப்பாளியாக மாறவேண்டி இருக்கிறது.
ஆக ஒரு படைப்பாளியாக மிளிர்வதற்கு படிப்பறிவு தேவையில்லை என்பதை நான்
நிரூபித்து இருந்தாலும் கூட, கி.ராஜநாராயணன் நிரூபித்திருந்தாலும் கூட,
ஜெயகாந்தன் நிரூபித்திருந்தாலும் கூட படிப்பாளிகளாக இருந்து
படைப்பாளிகளாக மாறும்போது மிகவும் சுலபமாகிறது. எஸ். ராமகிருஷ்ணன்,
ஜெயமோகன், பிரபஞ்சன் போன்றவர்கள் எல்லாம் கல்விப் பின்புலத்தோடு
வந்தவர்கள். அவர்கள் வெற்றியைப் பெறுவது ஒரு எளிதாக பூப்பறிக்கிற மாதிரி
முடிகிறது. நாங்கள் பறிக்கிறபோது பூவைப்பறிக்கிற மாதிரி இல்லாமல் ஒரு
மலையைப் பறிக்கிற மாதியான பெரும் எத்தணிப்பு தேவைப்படுகிறது. ஆகவே
படைப்புக்களுக்கு படிப்பு தேவையில்லை. ஆனால் படிப்பிருந்தால்
படைப்பாளியாக மாறுவதற்கு சுலபமாக இருக்கும்.
11.
சினிமாவுக்கு கதை எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
இல்லை.
சினிமா என்பது ஒரு வலுவான ஊடகம். மிகச் சிறந்த ஊடகம். பெருவாரியான
மக்களிடம் கருத்துக்களை கொண்டுசெல்கிற மிகச்சிறந்த வாகனம். அந்தத்
துறையின் மீது எனக்கு உயர்ந்த மரியாதை இருக்கிறது. மதிப்பு உண்டு.
அந்தத் துறைக்கு வசனம் எழுதவோ, திரைக்கதை எழுதவோ அழைத்தபோது நான்
வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன்.
உதிரிப் பூக்கள் - மகேந்திரன் மற்றும் லிங்குசாமி, சுசிகணேசன், சசி
என்றும் பலரும் என்னை அழைத்தார்கள். மறுத்துவிட்டேன். திரைத்துறையின்
ஆக்க வேலைகளில் பங்கெடுப்பதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. காரணம் வேறு
ஒன்றுமில்லை. திரைத்துறை மரியாதைக்குரிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்.
சாதனம். ஆனால் அதற்குள் ஒரு எழுத்தாளன் செயற்படுகிறபோது சுயமரியாதையை
பாதுகாப்பது மிகக் கடினமாக இருக்கும். ஒரு எழுத்தாளனுக்கான சுயமரியாதையை
பாதுகாப்பது ஒரு திரைத்துறைக்குள் இயங்குகிறபோது சிரமமாக இருக்கும்
என்பது முன்னெச்சரிக்கையாகவே எனக்குள் இருக்கிறது. அதனால் உள்ளே நுழைய
அஞ்சுகிறேன். அந்தத் துறையின் மீது ஒரு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதில்
பங்கெடுப்பதில் சுயநலமாகவும் இருக்கிறேன்.
12.
சமீபத்திய திரைப்படங்களைப் பற்றி........
அதன் வளர்ச்சி பற்றி.....?
தமிழ்த் திரைப்படங்கள் நீடிப்பதே அதன் வளர்ச்சிதான். ஏனென்றால்
கார்பரேட் எனப்படும் பன்னாட்டு பகாசுர மூலதன இயக்கத்தின் முற்றுகை,
தொலைக்காட்சித் தொடர்களின் முற்றுகை இவற்றுக்கு மத்தியில் திரைத்துறை
நீடிக்கிறது என்றால் அது ஒரு தொடர் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. ஆனால்
உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் சமீபத்தில் நம்பிக்கை ஊட்டக்கூடிய
திரைப்படங்கள் சில வந்திருக்கின்றன. பசங்க, பள்ளிக்கூடம், குறிப்பாக
தங்கர்பச்சான் இயக்கிய ஒரு திரைப்படம், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல்,
கல்லூரி, சசி இயக்கிய பூ, சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களைச்
சொல்லலாம். நல்ல யதார்த்தமான சமூகப் பிரச்சினையை யதார்த்தமாகக்
கையாளுகிற தன்மை இப்பொழுது வந்திருக்கிறது. உதாரணமாக பேராண்மை,
வசந்தபாலனின் வெயில், அங்காடித்தெரு போன்ற அருமையான படங்களைச் சொல்லலாம்.
ஆனால் அவை கலைத்தரம் குறைந்த படங்களாக இருக்கின்றன.
13.
உங்களுடைய எழுத்தாள நண்பர்கள் என்று
யார்யாரைக் குறிப்பிடுவீர்கள்?
ச.தமிழ்செல்வன், கோணங்கி, உதயஷங்கர், வேல.ராமமூர்த்தி, மாதவராஜ்,
எஸ்.ராமகிருஷ்ணன்,
திருப்பூர் கிருஷ்ணன்,
ரோஜாக்குமார், ஸ்ரீராசா, வெண்ணிலா போன்று பல்லாயிரம் எழுத்தாளத்
தோழர்கள் என் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரே வரி உண்மை என்றால், வாழும்
எழுத்தாளச் சகோதரர்கள் அனைவரும் எனது நண்பர்கள்தாம்.
14)
இப்பொழுது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
தொடர்ந்து சிறுகதைகளும், நாவலும் எழுதுகிறேன். 'அக்னிவாசம்' என்றொரு
சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்திருக்கிறது. கங்கை புத்தகநிலையம்
வெளியிட்டிருக்கிறது. 'உயிர்நிலம்' என்றொரு நாவல், களம் எனது
கிராமம்தான்;. பசுமைப்புரட்சிக்கு முந்தைய விவசாய காலம்,
பசுமைப்புரட்சிக்காலம், பசுமைப்புரட்சி வீழ்த்திய விவசாயகாலம் என்று
மூன்று காலங்களையும் சொல்கிற நாவல்.
உலகத்துக்கு உணவும், உயிரும் தருகிற விவசாயி உயிரை அழித்துக்கொள்கிற ஒரு
மோசமான காலத்தின் சோகத்தை சொல்கிற நாவல்.
15)
உங்கள் படைப்புக்களில் தலித் பிரச்சனை
பற்றி?
இன்றைய இந்தியாவின் அடையாளம் இந்தியக் கிராமங்கள். இந்தியக்
கிராமங்களின் தனித்துவ அடையாளம் சாதீய ஒடுக்குமுறைகள். கிராமங்களைப்
பற்றியே படைப்புகள் எழுதுகிற என்னால் மட்டும் அந்தச் சாதீய ஏற்றத்தாழ்வு
என்னும் ராட்சசனை பார்க்காததுபோல பம்மாத்துப்பண்ண முடியுமா?
தலித் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை, குழந்தை உழைப்பாளிகள் பிரச்சனை ஆகிய
மூன்று பிரச்சனைகள் எனது படைப்புகளின் தனித்துவ அடையாளம் என்று
ஆய்வாளர்கள் ஆய்வு முடிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 'மேலாண்மை
பொன்னுச்சாமியின் படைப்புகளில் தலித் பிரச்சனைகள்' என்பது போன்ற
தலைப்புகளில் மூன்றுபேர் முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்திருக்கின்றனர்.
எனது படைப்புகளின் சுபாவமே, ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது. உயிரைவிட,
காகிதம், விரல், சிபிகள் போன்று பல்வேறு சிறுகதைகள் தலித் பிரச்சனை
பற்றியது. முற்றுகை நாவலும், மின்சாரப்பூ சிறுகதையும் மட்டுமல்ல, எனது
ஒட்டுமொத்த படைப்புகளில் பெரும்பகுதி தலித்பிரச்சனை பற்றியது. இதுவே,
என்னையறிந்தோர் - என் படைப்பை உணர்ந்தோர் –வந்தடைகிற முடிவு.
|