உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் கவிஞர்.
வதிலைபிரபா
அவர்களுடன்
ஒரு நேர்காணல்:
நந்தவனம் சந்திரசேகரன்
1)
கவிதை உங்களுக்கு எப்படி வந்தது?
சுமார்
11 வயதிலிருந்தே வாசிக்கத் தொடங்கிய எனக்கு கவிதை வந்தது சற்று
ஆச்சரியம்தான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல்
படிக்கும்போதும் கூட கவிதை சற்று தூரம்தான். விருப்பப் பாடமாக
creative
writing எடுத்து
படிக்கும்போதுதான் கவிதை எழுதணும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை
வாசிப்பில் மட்டும் என்னோடு பயணித்த கவிதைகள் என்னுள் ஏற்படுத்திய
எதிர்வினையாய் - எழுத்து வடிவில் காணக் கிடைத்தது.
மெல்ல மெல்ல கவிதை கை வந்தது. எனது நோட்டுப் புத்தகத்தில் பத்திரமாக
வைத்திருந்த மயில் பீலிகள் போல் கவிதைகள் அடைகாக்கப் பட்டிருந்தன என்று
சொல்லலாம்.
ஹைக்கூ, புதுகவிதை, நவீனம் என எனது கவிதைகளின்
அணிவகுப்பும்,நீண்டுகொண்டே இருக்கிறது. 'மகாகவி' இதழை 1996
- இல் தொடங்கியவுடன் ஒரு கவிதை இதழாகவே வெளிக்கொணர்ந்தோம். பாரதியின்
தாக்கம் என்னுள் முழுமையாகவே வியாபித்திருந்தது. தொடர்ந்து
சிற்றிதழ்களில் அமைப்பு ரீதியான பங்களிப்பில் ஈடுபட்டதும் - அதிகமான
சிற்றிதழ்களில் எழுதியதும் என்னில் படைப்பாற்றலை அதிகப் படுத்தியது
எனலாம்.
2)
எத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதி வருகிறீர்கள்?
கடந்த 25 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இதுவரை சுமார் 250
கவிதைகளுக்கு மேல் எழுதியாகி விட்டது. 'தீ' எனும் ஹைக்கூ தொகுப்பும், 'குடையின்
கீழ் வானம்' எனும் கூட்டுத் தொகுப்பும் வெளியிட்டு உள்ளேன். விரைவில் 2
கவிதை தொகுப்பும், ஒரு கட்டுரை, ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியிட உள்ளேன்.
ஒரு படைப்பை எழுதியவுடன் உடனே இதழ்களுக்கு அனுப்புவது எனது வழக்கமான
ஒன்று. சிற்றிதழ்கள்தான் என் கவிதையின் ஊற்றுக்கண்.
3)
புதுக்கவிதை - நவீனக்கவிதை என்ன வேறுபாடு?
எது புதுசா இருக்கிறதோ அதுவே சிறந்த கவிதை என்பார் கந்தர்வன். கவிதை
இயல்பாய் முடிய வேண்டும். கவிதையின் போக்கில் கவிதை இருக்க வேண்டும்.
ஒருபோதும் கவிஞன் கவிதையில் ஆதிக்கம் செய்யக் கூடாது. இல்லையெனில் அது
வெறும் பிரசாரமாகிவிடும் என்பார் கவிக்கோ. அப்துல் ரகுமான்.
இலக்கணம் பிசகாமல் இருப்பது மரபுப் பாக்கள். புதுக் கவிதைகளில்
கவித்துவம் மிகுந்திருக்கும். ஆனால் தற்போது நவீனம் எப்படி புரிந்து
கொள்ளப்படுகிறது என்பதுதான் கவலை தருகிறது. தன்னை அறிவு ஜீவியாக
காட்டிக்கொள்ள - மற்றவர்களிடமிருந்து தனக்கு தனித்துவம்
வேண்டுமென்பதற்க்காக புனையப்படுகிறதோ என்கிற கவலையும் இருக்கிறது.
எழுத்துக்களின் அர்த்த ஜாலங்களாக புதுக்கவிதை இருக்கிறது. சொற்களின்
மாய ஜாலங்களாக நவீனக் கவிதை இருக்கிறது. மக்களுக்கான இலக்கியம் என
புதுக்கவிதை பெரும்பாலும் புனையப்படுகிறது. மக்கள், சமூகம் தாண்டி
கலைக்கான இலக்கியமாக நவீனக்கவிதை புரிந்து கொள்ளப்படுகிறது.
பெரும்பாலும் இயல்பாகவே புதுக் கவிதைகள் புனையப் படுவதும் உண்டு. படிமம்,
குறியீடுகள், உத்திமுறைகள் என - இசங்களின் கட்டமைப்பில் மிரட்டும்
நவீனக் கவிதைகளும் உண்டு.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் அபயக் குரல் ஒலிக்கிறதோ -
எங்கெல்லாம் தனது அடையாளங்களுக்கென கலகக் குரல் வெளிப்படுகிறதோ,
எங்கெல்லாம் தனது இருப்புக்கான போர்க்குரல் ஓங்கி ஒலிக்கிறதோ,
ஈழமாகட்டும், பாலஸ்தீனமாகட்டும் ஈரப் பிசுபிசுப்போடு, தூசிகளையும்,
துயரங்களையும் தாங்கியதான கருமேகம் சூழ்ந்த மண் மீதான உரிமைக்குரல்
எங்கெல்லாம் ஒலிக்கிறதோ - அந்தக் குரல்களிலிருந்து வெளிப்படும்
படைப்புகள்தான் என்னைப் பொறுத்தவரை நவீனப் படைப்புகளாகும்.
நவீனத்தின் முதல் வெளிப்பாடே விடுதலைக்கானதாகத்தான் இருந்திருக்கும்.
அது மீறலின் மறுபெயராகவும் இருந்திருக்கலாம். 'நடந்து செல்வதிலிருந்து
பறப்பது' என்கிற நவீனம் என்பதுபோல.
போஸ்ட்-மாடர்னிசமோ, சர்ரியலிசமோ, மேஜிக் ரியலிசமோ, எக்சிஸ்டென்சியலிசமோ,
சிம்பாலிசமோ, ஆப்டிமிசமோ, இமேஜிசிசமோ இப்படி இருக்கிற நூற்றுக்கும்
மேற்பட்ட இசங்கள் உடனடியாக உருவாகவில்லை.
இவை சுயம்பும் அல்ல. தமிழில் தற்போது குழு மனப்பான்மையை உருவாக்கும்
விதமாக நவீனப்படைப்புகள் உள்ளன.
உடல்மொழி சார்ந்த படைப்புகள் கூட ஒரு விளம்பர நோக்கில் படைக்கப்படும்
படைப்புகளாகவே உள்ளன. உடல்மொழி வாசனை கவிச்சியடிக்கிறது. நவீனம் என்றால்
என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களின் கையில் நவீனம் சிக்கி பழமையான
தோற்றத்தை தருகிறது.
புதுக்கவிதை புரிந்துகொள்ளவும், நவீனக் கவிதை அறிந்துகொள்ளவும்
படைக்கப்படுகிறது என்பதான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வலி
மிகுந்த படைப்புகள் நவீனக் கவிதைகளில் அரிதாகிக்கொண்டு வருகிறது.
நவீன இதழ்கள் என்று சொல்லிக்கொண்டு, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய ஒரு
சில இதழ்களின் வட்டத்திற்குள் நவீனம் முழிபிதுங்கிக் கிடக்கிறது.
'புதுக்கவிதையின் தொடர்ச்சியே நவீனக் கவிதை' என்பதைப் புரிந்து
கொள்ளாதவர்களின் நிலையிது.
4)
நல்ல கவிதை என்பது யாது?
ஒரு நல்ல கவிதை என்பது ஒருபோதும் வாசகனையோ அல்லது வெகு மக்களையோ
அந்நியப்படுத்திடாத ஒன்றாகும். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என
எத்தனையோ ஜீவநதிகளின் நுட்பமான பிரச்சினைகளின் மையமாக தமிழகம் இன்றும்
இருக்கிறது. 'கங்கை நதிப்புரத்துக் கோதுமைப்பண்டம், காவிரி வெற்றிலைக்கு
மாறுகொள்வோம்' என்ற மகாகவி பாரதியின் கனவு இன்றளவும் ஒன்றுபட்ட
இந்தியாவின் கனவாக இருக்கிறது. எந்த ஒரு கவிதை, காலம் தாண்டியும்
உயிரோட்டமாக இருக்கிறதோ அதுவே நல்ல கவிதை என்பது என் கருத்து.
5)
திருக்குறளின் இன்னொரு வடிவம் ஹைக்கூ என்கிறார்களே! இது சரியா?
திருக்குறளின் இன்னொரு வடிவம் ஹைக்கூ. இது பொருந்தாத ஒன்று. இரண்டடி
வெண்பா குறள், 7 சீர்களைக் கொண்டது.
இது முற்றிலும் அறநூல். ஆனால் ஹைக்கூ என்பது 3
அடிகளைக் கொண்டதாக இருக்கிறது.
5-7-5 என 17
அசைகளை கொண்டது. இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. 2
-ஆம் அடியின் முடிவில் அல்லது 3
-ஆம் அடியின் ஆரம்ப நிலையில் திடீரென்ற
ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி விடுவது இதன் சிறப்பு.
குறள் வாழ்வியல் நெறிகளைக் கொண்டதாகிறது. ஒழுங்கு முறைகளை
அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. அதன்வழி நடக்கவேண்டும். ஹைக்கூ இயற்கை
சார்ந்ததாகவும் - பல நுட்பங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.
ஒரு நல்ல ஹைக்கூ என்பது படைப்பாளன் 10
வாசகன் இருவரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். இது இதன் தனிச் சிறப்பு.
வாசகனுக்கு படைப்பாளனின் அனுபவத்தை விட முற்றிலும் புதிய வேறொரு
அனுபவத்தைத் தரவேண்டும்.
ஆனாலும் குறளின் சிறப்பை நாம் மறுதலிக்க முடியாது. இரண்டு அடிகளில்
இவ்வளவு விசயங்களா? என வியந்து பார்ப்போரின் எண்ணிக்கை அளவிட முடியாதது.
அதனால்தான் இதை 'உலகப் பொதுமறை' என்கிறோம்.
6)
கவிதையின் அடுத்த நிலை எப்படி இருக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
கவிதையின் அடுத்த நிலை.. கடிகார முட்களில் தொங்கிக் கொண்டு காலத்தின்
பக்கங்களை வேகமாகப் புரட்டிக் கொண்டிருப்பவர்களின் கைகளில்
கவிதையிருக்கலாம். ஆனாலும் கருத்துச் செறிவு குறையாமல், புதிய புதிய
பொருட் செறிவோடு கவிதையிருக்கும். பாடுபோருட்களின் காட்சி மாறலாம்.
பாடுபொருட்களுக்குப் பஞ்சமிருக்காது. கவிதையின் தேவை அதிகமிருக்கலாம்.
அப்போது அநேகமாக கவிதையின் அடுத்த நிலை அதிநவீன தொழில் நுட்பங்களின்
பிடியில் மின் கவிதைகளாக வலம் வரலாம். ஈ.புக்ஸ் போன்று ஈ.கவிதைகளும்
வரலாம். மரபு - புதுக்கவிதை - நவீனக் கவிதை தாண்டிய நுட்பக் கவிதைகள்
கவிதையின் திசைவழி சுட்டும்.
vathilaipraba@gmail.com
|