சுலைமா
சமி இக்பால் அவர்களுடன்
ஒரு நேர்காணல்:
எஸ். பாயிஸா அலி
1)
உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை
சுருக்கமாக முன்வைப்பீர்களா?
நான் களுத்துறை மாவட்டத்தின் தர்காநகரை பிறப்பிடமாக கொண்டவள். தற்போது
மாவனல்லையில் வசித்து வருகிறேன். எனது பதினேழாவது வயதில் தினகரன்
பத்திரிகையினூடாக எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது. அன்று தொடக்கம்
இன்று வரை முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரை, வானொலிப்பிரதியாக்கம்
எனப்பல தளங்களில் எனது எழுத்துப் பங்களிப்பை செய்து வந்தாலும் அதிகமாக
நான் சிறுகதைகளையே எழுதி வருகிறேன்.
1984-1995 வரையிலான காலப்பகுதியில்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த 'நெஞ்சோடு நெஞ்சம்
மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கான பிரதித் தயாரிப்பாளராக இருந்து
நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வழங்கியுள்ளேன். இந்நிகழ்ச்சி
மூலம் எழுத்தறிவு குறைந்தவர்களும் என்னுடைய அபிமான நேயர்களாக இருந்தமை
எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விடயமாகும். அப்படியானவர்கள் மத்தியில்
இன்றும் என் பெயர் வாழ்ந்து கொண்டிருப்பது என்னை மிகவும் திருப்தியடையச்
செய்கிறது.
2)
உங்களது சிறுகதைகள் ஜனரஞ்சகத் தன்மையாக
அமைந்துள்ளனவே இது குறித்து.......
ஆம். எனது எழுத்துக்களுக்கு பரந்து விரிந்த வாசக நேயர் வட்டம் இருப்பதை
நானும் அறிகிறேன். நான் கண்ட, கேட்ட, அனுபவித்து உருகிய சம்பவங்களை எனது
உணர்வுகளின் ஊடாக உருவம் கொடுத்து சிறுகதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த ஜனரஞ்சகத் தன்மைக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
3)
இது வரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள்
பற்றிக் கூறுங்கள்?
வைகறைப் பூக்கள் (1987),
மனச்சுமைகள் (1988), திசைமாறிய
தீர்மானங்கள் (2003), ஆகிய மூன்று
சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009)
என்ற இஸ்லாமிய சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை
வெளியீடுகளும் எனக்கு வெற்றியைத்தான் தந்தன. திசைமாறிய தீர்மானங்கள்
சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வியமைச்சினால் சிறந்த நூலுக்கான
விருதினையும், பொற்கிழியினையும் பெற்றுத்தந்ததோடு மேல் மாகாணசபை கல்வி
அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னால் மேல் மாகாண சபை
உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.
அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 100
புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
   
4)
இதுவரை கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் விருதுகள்...
எழுத்துவன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் 75 தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப்பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழு தேசிய
ரீதியில் தமிழ் முஸ்லிம் படைப்பிலக்கியவாதிகளுக்கு மத்தியில் நடாத்திய
சிறுகதைப் போட்டியில்; முதலாம் இடத்தை பெற்று முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் தங்கப் பதக்கம் வழங்கி
கௌரவிக்கப்பட்டமை மறக்க முடியாத நிகழ்வாகும். இதைத் தவிர 2008ஆம் ஆண்டு
இந்தியாவின் நர்கீஸ் சஞ்சிகையும் மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து
நடாத்திய முஹம்மத் இஸ்மாயில் - இப்ராஹிம் பீபீ நினைவு சர்வதேச இஸ்லாமிய
நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு நான்காம்
இடத்துக்கான சிறப்புப் பரிசு கிடைத்தது. (அந்த போட்டியில் கலந்து கொண்ட
சகோதரி ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு இராட்சஷியின் கதை என்ற
நாவலுக்கும் பரிசு கிடைத்தது.) அதே போன்று இந்தியாவில் அதே அமைப்புக்கள்
நடாத்திய சர்வதேச சிறுகதை, கவிதைப் போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்கு
பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. அதே போல் 2009ஆம் ஆண்டு வெளிவந்த
படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்ய தெரிவில் இறுதிச் சுற்றுக்கு
தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள்
நாவலுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்
இஸ்லாமிய இலக்கியப் பங்களிப்புகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.
2008ம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய சாமஸ்ரீ பாராட்டு
விழாவில் சாமஸ்ரீ கலாஜோதிப் பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.
5)
இப்படிப் பரிசுகளும் பாராட்டுக்களும் கிடைத்த சந்தர்ப்பங்களில் உங்கள்
மனநிலை, உணர்வுகள் எவ்வாறு இருந்தன..?
உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. பல நாடுகளையும்
சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சர்வதேசப்
போட்டிகளில் எனது படைப்புக்களுக்கும் பரிசு கிடைத்த போது எனது உணர்வுகளை
வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும்
பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம்
என்றே நான் கருதுகின்றேன்.
6)
இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் போது வீட்டுக்கடமைகள், குடும்பப்
பொறுப்புக்கள் உங்களுக்குத் தடையாக அமைகின்றதா..? ஊக்குவிப்பாக
இருக்கின்றதா..?
திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பது என்பது
கேள்விக்குரிய விடயம் தான். பொதுவாக பல பெண் எழுத்தாளர்கள் திருமண
வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்தி விடுவதுண்டு. ஆனால் என் நிலை
இதற்கு மாறாக அமைந்து விட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும்
உற்சாகப் படுத்துவதும் என் வெற்றிக்குத் துணை நின்று உழைப்பதும் என்
கணவர்தான். எனது எழுத்து முயற்சிகளில் எனது கணவரின் பங்களிப்புப்
பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் என்ற ஒரு
பதிப்பகத்தையும் ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியீடு செய்து
கொண்டிருக்கிறார்.
எனது குழந்தைகள் சிறிய வயதாக இருக்கும் போது வீட்டுக்கடமைகள் எனது
எழுத்துக்கு சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தினாலும் தடையாக அமையவில்;லை.
என் கணவர் பிள்ளைகள் எல்லோருமே எனக்கு ஊக்கம் தரக் கூடியவர்களாக
இருக்கிறார்கள்.
7)
உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகையில் உதவியது..?
ஒரு எழுத்தாளனை வாசகர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தி அவனை
ஊக்குவித்து அவனின் வளர்ச்சிக்குத் துணை நிற்பது ஊடகங்களே. இந்த வகையில்
எனது முயற்சிகளுக்கும் ஊடகங்கள் பெரிதும் உதவியது. உதவிக்
கொண்டிருக்கின்றன. இலங்கையில் வெளிவந்த, வெளிவருகின்ற அத்தனை
பத்திரிகைகளும், வார இதழ்களும், மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை
என்பன எப்போதும் என் வளர்ச்சிக்கு உதவும் ஊடகங்களாகும்.
8)
உங்களுக்குப் பின் உங்களது எழுத்துப்பணி தொடரப் போகின்றதா..? அல்லது...
எனக்குப் பின் இத்துறையில் ஈடுபட என் வாரிசுகள் ஆர்வமாக
இருக்கின்றார்கள். எனது மூன்று பிள்ளைகளும் கலையார்வம், எழுத்தார்வம்
மிக்கவர்கள். எனது மூத்த மகள் இன்சிராஹ் இக்பால் பூ முகத்தில் புன்னகை
என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இப்புத்தகம் வாசகர்
மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாக இருக்கின்றது. எனது இளைய மகள்
இன்சிபா இக்பாலும் அழகாக சிறுகதைகள் எழுதக் கூடியவர். பல சிறுகதைப்
போட்டிகளிலும் கலந்து தேசிய ரீதியிலும் பரிசு பெற்றுள்ளார். சின்ன மகன்
அஷ்பாக் அஹமட் ஓவியத் துறையில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். வெகு
விரைவில் வெளி வர இருக்கின்ற எனது 'நந்தவனப் பூக்கள்' என்ற சிறுவர்
இலக்கிய நூலுக்கு இவரே அட்டைப் படத்தையும் சித்திரங்களையும்
வரைந்துள்ளார்.
9)
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது
உங்களது வாசிப்புத் தளத்தை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். சிறந்த
பயனுள்ள எழுத்துக்களை எழுதுங்கள். இஸ்லாமிய வரம்புகளை மீறாத முறையில்
சமூகத்தின் மேம்பாட்டுக்காக எழுதுங்கள்.
sfmali@kinniyans.net
|