இரும்பு முள்வேலி

6

 "மகளே! இவ்வளவு குரூரமாக இருக்கிறாயே நமது வேதம் என்ன சொல்லுகிறது. பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி அல்லவா கூறுகிறது. பரமண்டலத்திலுள்ள பிதாவை நோக்கி நாம் பூஜிக்கும் பாடல் நினைவிற்கு வரவில்லையா என்று கேட்கிறார். அவளுக்கு அந்த நினைவெல்லாம் இல்லை; ஒரே ஒரு எண்ணம்தான் அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது; வெறுப்பு! ஜெர்மானியர் என்ற உடன் ஒரு கொதிப்பு! அவர்கள் அழிந்துபட வேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி. பகைவனுக்காகக்கூடப் பகவானிடம் பிரார்த்திக்கலாம். ஆனால் அந்தப் பகைவன், மனிதனாக இருக்க வேண்டுமே! ஜெர்மானியரைத் தான் மோனா, மனிதர் என்றே ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளே; மனித வடிவிலே உலவும் மிருகங்கள்; பிரிட்டிஷ் இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பிடும் கொடிய விலங்குகள் என்றல்லவா திடமாக நம்புகிறாள். அவர்களிடம் பச்சாதாபமா...! முடியுமா!!

     பால் எடுத்துக் கொண்டுபோக பண்ணை வீட்டுக்கு வந்திடும் ஜெர்மானியரில் ஒருவன், உடல் மெலிந்து கிடந்தான். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; வெளுத்துப்போன முகம். சிலவேளைகளில், அவனிடம் சிறிதளவு பச்சாதாப உணர்ச்சி தோன்றும், மோனாவின் உள்ளத்தில். ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு நொடியில் விரட்டி அடிக்கிறாள். அய்யோ பாவம் என்று எண்ணுவதா! பச்சாதாபம் காட்டுவதா! இவனுக்கா!! இளைத்திருக்கிறான். இருமிக் கொண்டிருக்கிறான்; ஆனால் இவன் யார்? இவனும் ஜெர்மானியன் தானே! மனிதகுலத்தை நாசமாக்கத் திட்டமிட்டுப் போரினை மூட்டிவிட்ட ஜெர்மன் இனத்தான் தானே!! இவனிடமா பச்சாதாபம் காட்டுவது? கூடாது! முடியாது!

     மோனாவின் உள்ளத்திலுள்ள வெறுப்புணர்ச்சி வெற்றி பெறுகிறது.

     ஜெர்மானியர் செய்திடும் அட்டூழியங்களைப் பற்றி இதழ்கள் செய்திகளைத் தந்தபடி உள்ளன. அவற்றினைப் படிக்கப் படிக்க, வெறுப்புணர்ச்சி மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது; எரிகிற நெருப்பிலே கொட்டப்படும் எண்ணெய் ஆகிறது அந்தச் செய்திகள்.

     முதியவர் வழக்கம் போலப் பிரார்த்தனையின் போது, சமாதானத்தை வழங்கும்படி பிதாவை வேண்டிக் கொள்வது கூட மோனாவுக்குப் பிடிக்கவில்லை. பிதாவே! ஜெர்மானியரைப் பூண்டோ டு அழித்தொழித்திடு; மனிதகுலத்தை ரட்சித்திடு! - என்பது போலப் பிரார்த்தனை இருந்திடின் மோனாவுக்குப் பிடித்தமாக இருக்கும். முதியவர் தமது பிரார்த்தனையில் ஜெர்மானியர் அழிக்கப்பட்டாக வேண்டும் என்பதனை வலியுறுத்தாமல் சமாதானம் வேண்டும் என்று மட்டும் கூறுகிறாரே, நியாயமா... நாட்டுப் பற்று உள்ளவர்கள் இப்போது சமாதானம் காணவா விரும்புவார்கள். போர்! போர்!! பகைவர் அழிந்தொழியும் வரையில் போர்! இதனை அல்லவா விரும்புவர்! பகைவனை அழித்தொழிக்கும் வல்லமையை ஆண்டவனே! எமக்கு அளித்திடும் என்பதல்லவா நாட்டுப் பற்று மிக்கவன் செய்திடத்தக்க பிரார்த்தனை! மோனா இது குறித்து முதியவரிடம் கேட்டே விடுகிறாள்.

     "அப்பா! உண்மையிலேயே சமாதானம் வேண்டும் என விரும்புகிறீரா?"

     "ஆமாம் மகளே! சமாதானம் நாடக்கூடாதா..."

     "நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர் வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில் போர் வேண்டும்."

     முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார். ஆனால் அவள் போக்கை மாற்ற முடியாது என்று கண்டுகொள்கிறார் போலும்! திருத்த முயற்சிக்கவில்லை; வாதிடக்கூட இல்லை.

     நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து போருருக் கொண்டு, பெரியதோர் அழிவை மூட்டிவிட்டுப் பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும்; இடையிலே இந்த உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக் கொண்டார் போலும்.

     ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான், களத்தின் நிலை பற்றி; உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப் போகிறோம்; முன்னணிப் படையினில் நான் இருக்கப் போகிறேன்; இந்தத் தாக்குதல் பகைவர்களை அழித்திடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறான். கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை