இரும்பு முள்வேலி

10

ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச் சுடப் பதில் கொடுத்துவிட்டோ ம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்க வேண்டும்? இல்லையே! போகிறவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள், தவறாகப் பேசிவிட்டோ ம் என்றெண்ணி வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்? தவறு செய்துவிட்டாய் என்று கூறுவதுபோலிருக்கிறது.

     மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். 'இது இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம் செல்ல முடியாது. அதனால், இதனைத் தாங்கள்..."

     ஆஸ்க்கார் கெஞ்சும் குரலில் பேசுகிறான்; மோனா கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள்; 'என்னால் முடியாது; இதனை எடுத்துக் கொண்டு போய்விடு' என்று. அவன் போய் விடுகிறான்; ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!

     'கிடக்கட்டும் இங்கேயே, எனக்கென்ன' என்றுதான் மோனா எண்ணிக் கொள்கிறாள். அன்று பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறியவில்லை! முடியவில்லை! ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்தது போலும்.

     மாலையில் யாருமறியாமல் சென்று லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத் தூவிவிட்டு வந்து விடுகிறாள்.

     மோனா, "ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும், குழந்தை குட்டிகள் உள்பட" என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறை மீது மலர் தூவுகிறாள்! எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற காரியமா இது! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை எழுப்பிவிட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித் தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக் கொண்டது!

     ராபியின் வீர தீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப்பதக்கத்தை மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.

     வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது! கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக! அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப் பதக்கம் பற்றிய விவரம் கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித் தரப்பட்டது இந்தப் பதக்கம் என்பதனை அறிந்ததும் ஆஸ்க்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா காட்ட வேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான், பாராட்டுதலுக்குரிய வீரன் என்று!!

     என்ன விந்தை இது! கப்பிக் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி எங்கே போய்விட்டது.

     தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா வெறுப்பை காட்ட முடியவில்லை, எவ்வளவோ முயன்றும்!

     தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப்பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப் பேசுகிறான் ஜெர்மானியன் ஆஸ்க்கார்!

     கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண் சிமிட்டுகிறதே!!

     மோனாவிடம் ஏதோ ஓர் மாறுதல் தோன்றி விட்டிருக்கிறது என்பது முதியவருக்குத் தெரிகிறது. விவரம் புரியவில்லை.

     பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது பற்றியும், அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக்கேட்ட முதியவர் கொதித்துச் சபிக்கிறார். 'ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்' என்று. 'ஏனப்பா இப்படி பகை உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச் சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா?' என்று கேட்டுவிடுகிறாள் மோனா! முதியவர் திகைக்கிறார். 'மகளே! என்ன இது! இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்?' என்று கேட்கிறார்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை