இரும்பு முள்வேலி

11

அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.

     மோனா, முதியவர் மனதில் குடியேறிவிட்டாளோ?

     முதியவர், மோனா மனதிலே இடம் பெற்று விட்டாரோ!

     முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனாவுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த மனப்பான்மை இதுபோல முதியவருக்கும் அமைந்து விட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?

     ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர் உள்ளத்திலே மூண்டுகிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக் கொண்டிருக்கிறது.

     அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளிவருகின்றன. மோனா அதைப் படித்துப் பார்க்கிறாள். ஏற்கனவே மெள்ள மெள்ள அவள் உள்ளத்திலிருந்து கலைந்து கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.

     எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப்புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக் கண்ட நாள் தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள் முதல்.

     ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன் தப்பிச் செல்ல முயற்சிக்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!

     அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத் தலைவர்கள் சிலர் விருந்துண்டு களிநடமாடுகின்றனர்.

     வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டுவிடுகிறான்.

     ஒரு குண்டு! ஒரு அலறல்! ஒரு பிணம்! பிறகு கைதட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! - இப்படித்தான் நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்க வேண்டும். அதுபோல நடக்கவில்லை.

     உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படை வீரனை, அந்த ஜெர்மானியன் பிடித்து மேலிடம் ஒப்படைக்கக்கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டுவிடாதபடி மறைந்து கொள்ள வழிசெய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ் வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!

     பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்! பயங்கரமான பழி வாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான்; இரக்கம் காட்டுகிறான்; பகைவனுக்கே துணை செய்கிறான்.

     இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.

     'புரிகிறதா அப்பா, எந்த இனத்திலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதோ இந்த ஜெர்மானியன் நல்லவனல்லவா?' என்று கேட்கிறாள், முதியவர் மனதில் மூண்டுள்ள வெறுப்புணர்ச்சியைக் குறைத்திடலாம் என்ற எண்ணத்துடன்.

     முதியவர் அதற்குத் தயாராக இல்லை.

     "இவன் நல்லவனாக இருக்கலாம் மகளே! ஆனால், என் மகன் உயிரைக் குடித்த குண்டு வீசியவன், இவனுடைய மகனாக இருந்திருந்தால்... மகளே! ஜெர்மானியரில் நல்லவர் என்று ஒரு பிரிவும் உண்டா? வெறியர்கள்! அழிந்துபட வேண்டியவர்கள்! மனித குல விரோதிகள்!" என்று முதியவர் பேசுகிறார்.

     அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை மோனாவினால்; அந்த இடத்தை விட்டுச் செல்கிறாள்.

     முதியவர் காண்கிறார்! என்னமோ நேரிட்டுவிட்டிருக்கிறது! என் மகளின் மனதிலே ஓர் மாறுதல் புகுந்துவிட்டிருக்கிறது. என்ன காரணம் இந்த மாறுதலுக்கு? என்றெண்ணித் திகைக்கிறார்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை