இரும்பு முள்வேலி

12

 போரினில் ஈடுபட்டு இதயம் இரும்பாகிவிடும் நிலையிலே கூட, மனிதத்தன்மை பளிச்சிட்டுக் காட்டத் தவறுவதில்லை என்பதற்கான சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோனாவுக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக ஜெர்மானியர் அனைவருமே கொடியவர்கள் என்ற எண்ணம் தகர்ந்துபோய் விடுகிறது.

     அவர்களிலேயும் நல்லவர்கள் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.

     ஜெர்மானியர் எல்லோருமே கொடியவர்கள் என்றால் இவ்வளவு நல்லவனான ஆஸ்க்கார் எப்படி அந்த இனத்திலே பிறந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மோனாவின் மனமாற்றம் வேகமாக வளர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்ததோ, வெறுப்புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வொரு நாளும் 'பிதா'வை வேண்டிக் கொண்டிருக்கிறார், கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.

     ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால் தாக்கப்பட்டு, குற்றுயிராகி ஒரு ஜெர்மன் போர் வீரன், ராபி இருந்த 'குழிக்கு' அருகே துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை இப்படி இம்சைப்படவிடக்கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடி சென்று துடித்துக் கிடந்த ஜெர்மானியனை தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த 'குழி'க்கு இழுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின் குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.

     ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர் வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிபட்டு; ஒரு பிரிட்டிஷ் போர்வீரன் ஜெர்மன் குண்டடிபட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம் தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன் குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில் கிடக்கிறார்கள்.

     பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிபட்ட இருவரையும் விட்டுவிட்டு.

     ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

     கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக்கடியாரத்தைக் கொடுக்கிறான் ஜெர்மானியனிடம். 'நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால், இதனை என் தங்கையிடம் சேர்த்து விடு' என்று கூறிவிட்டு ராபி இறந்துவிடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக் கொள்கிறான்.

     அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன்! விவரம் தெரிந்துகொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை ஆஸ்க்காருக்கு அனுப்பி வைக்கிறான். 'ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு. அதுதான் ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு' என்று.

     ஆஸ்க்கார் இந்தத் தகவலையும் கைக்கடியாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம் பாகாய் உருகிவிடுகிறது.

     கடும்போர் நடைபெறும் களத்திலே கூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!

     ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர்; மற்றவர் பிரிட்டிஷ்.

     அவர்கள் வெட்டிக் கொள்ளவில்லை. சுட்டுக் கொள்ளவில்லை; ரணப் படுக்கையிலே வீழ்ந்து விட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றனர்.

     இந்த மனிதத் தன்மை தான் இயற்கையானது.

     போர், இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.

     ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளிக் கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது போர்! ஏன் தான் போர் மூட்டிக் கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.

     மோனா ஒரே சமயத்தில் இரண்டு போர் முனைகளில் ஈடுபட வேண்டி நேரிட்டுவிட்டது.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை