இரும்பு முள்வேலி

13

ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.

     மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி; மறுத்திடவும் முடியவில்லை; கொடுத்திடவும் துணிவில்லை. போர் மூள்கிறது; நாளாகவாக மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்து கொண்டு வருகிறது.

     எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும்போதும் பார்க்காதிருக்கும் போதும்! அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு படுத்துகின்றன.

     வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிவிடவில்லை. ஆனால் அவன்? அவன் கண்கள் வேறென்ன பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலை மாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார் என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதாபம் காட்டத் தொடங்கி, பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது. நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே; எப்படி? எண்ணுகிறாள்; விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.

     "கேட்டாயா பெண்ணே! அக் கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின்மீது குண்டு வீசி, பச்சிளங் குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்டவன் இதைச் சகித்துக் கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காமலிருக்குமா! உடனே கிளம்ப வேண்டும்; ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்படவேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி" - என்று பதறுகிறார் முதியவர்.

     "அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வதுதான் நியாயமா! குழந்தைகள் தூய்மையின் சின்னம்! ஜெர்மன் குழந்தைகளாக இருந்தால் என்ன!" - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள் மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.

     அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். 'என் நாட்டவர் இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்' என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.

     "நீ வெட்கப்பட்டு என்ன பயன்? வேதனைப்பட்டு என்ன பயன்? எங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட்டது போன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட வேண்டும். அப்போது புரியும்" என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார் திகைத்துப் போகிறான்.

     சில நாட்கள் வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை. ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சி கொள்ள முயற்சிக்கிறாள்.

     கிருஸ்மஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும், இசை விருந்து விழாக் கோலம்.

     அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.

     வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி ஆறுதல் பெற. அவனுடைய வீட்டின் மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை பத்து வயதுச் சிறுமி இறந்து விட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது; வேதனை தாளமாட்டாமல் வந்தேன்; ஆறுதல் அளித்திட வேறு யாரும் இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ் சிறு சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர் - என்றெல்லாம் கூறிக் குமுறிக் குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.

     வேதனை நிரம்பிய இந்தச் செய்தி பற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக் கொள்கிறாள்! அவன் மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம் இதற்காகத்தானே காத்துக் கிடந்தோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த அணைப்பில் பொருள் அதுவாகத்தான் இருந்தது.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை