இரும்பு முள்வேலி

14

ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொள்கின்றனர். இங்கு ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக் கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி; காமவெறியால் அல்ல, கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த்தெறியும் காதலின் தூய்மை தந்திடும் வலிமை காரணமாக. இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும் போர், கப்பிக் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் ஜெர்மனி-பிரிட்டன் என்ற நாட்டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா, எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக் கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப் பிணைத்துவிட்டது.

     கீழே ஏதோ பேச்சுக் குரல் கேட்ட முதியவர், தள்ளாடி தள்ளாடி வந்து பார்க்கிறார், ஜெர்மானியனுடன் தன் மகள் குலவுவதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்! "அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு ஜெர்மானியனை! விபச்சாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே! இந்தக் கள்ளக் காதல் காரணமாகத்தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப் பாவம் உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுச் சித்திரவதை செய்யாதா! அண்ணன் உயிர் குடித்த அக்ரம ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபச்சாரி..." - முதியவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட பிறகுமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப் பற்றி முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டுவிட்டிருந்தனர். மோனா இனி அவர்களிடமிருந்து தப்ப முடியாது. 'அவள் பாதகி! காதகி! விபச்சாரி' என்று கூவிடும் அந்த ஊர் முழுதும். திரும்பிப் பார்த்தாள். ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக் கொண்டாள்; அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர் மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்து விட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள், சுட்டுவிடுவது போல பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை. முதியவர் இறந்துவிட்டார்.

     ஊரே அவளைத் தூற்றுகிறது; பண்ணையாட்கள் அவளிடம் வேலை செய்வது இழிவு என்று கூறி விலகிக் கொள்கிறார்கள்.

     அப்பனைச் சாகடித்தவள்!

     ஜெர்மானியனுடன் குலவினவள்!

     கெட்ட நடத்தைக்காரி!

     காம சேட்டைக்காரி!

என்றெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கமுடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக் கொள்வார்களா! இனத் துரோகி! நாட்டுத் துரோகி! பெண் குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும் தான் கொண்டு போயிருப்பான்! இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா பறிகொடுத்தாள் மனமொப்பி.

     பண்ணை முழுவதும், முதியவர் மோனாவுக்கே சொந்தமாக்கி வைத்திருந்தார். தூற்றுவோர் தூற்றட்டும் என்று எண்ணிக் கொண்டு மோனா பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்!

     மோனாவும் ஆஸ்க்காரும் பல நாட்கள் சந்திக்கக்கூட இல்லை.

     அவர்கள் இருவரும் கள்ளக் காதல் நடத்திக் கொண்டிருந்தனர்; அதனை ஒருநாள் முதியவர் கண்டு பிடித்துவிட்டார் என்று ஊர் பேசிற்று; நடைபெற்றதோ ஒருகணம் தோன்றி அவர்கள் இருவரையும் பிணைத்துவிட்ட காதல் உணர்ச்சி. அதனை அவள் விளக்கிடத்தான் முடியுமா. ஊரே தூற்றுகிறது, அவளை விபச்சாரி என்று.

 

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை