இரும்பு முள்வேலி

15

வெறுப்புணர்ச்சிக்கும் மனிதத் தன்மைக்கும் நடைபெறும் கடும்போர், உள்ளத்தை உலுக்கிவிடத் தக்கது. பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்களை மூட்டிவிடக் கூடியது என்பது 'இரும்பு முள்வேலி' போன்ற ஏடுகள் மூலம் விளக்கப்படுகின்றன.

     ஆனால் இதிலே எடுத்துக் காட்டப்படும் 'மக்கள் மனப்போக்கு' எளிதிலே மாற்றப்படுவதில்லை. மூட்டிவிடப்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள மக்களில் பெரும்பாலோரால் முடிவதில்லை.

     வெறுப்புணர்ச்சி சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும் போதும் மோனா போல் ஒருவரிருவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் - என்றாலும் வெறுப்புணர்ச்சியின் பிடியில் தம்மை ஒப்படைத்துவிட்ட மக்கள், 'மோனா' போன்றவர்கள் மீது சீறிப் பாய்வர்.

     மோனா, பிரிட்டிஷ் இனம்; ஆஸ்க்கார், ஜெர்மன் இனம்; இருந்தால் என்ன? காதல் அவர்களைப் பிணைக்கிறது! அதிலே என்ன தவறு என்று எண்ணிட முடியவில்லை, வெறும் புணர்ச்சி கொண்ட மக்களால்.

     எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.

     பெர்ல் பக் எனும் உலகப் புகழ் பெற்ற ஆசிரியர், தமது படைப்புகளில், இது போன்ற உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.

     மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்து கொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக் கொள்ளச் செய்திட வேண்டும் என்பதாகும்.

     மற்றோர் 'முனை'யைக் காட்டுவது போல, பெர்ல் பக் ஒரு கதையைத் தீட்டி அளித்துள்ளார்.

     ஜப்பானியர்களுக்கும் அமெர்க்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம். இரண்டாவது உலகப் போர்! இட்லர் மூட்டிவிட்ட போர்!

     ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு; அது போன்றே ஜப்பானியருக்கும்.

     இது 'தேசிய உணர்ச்சி' என்ற மதிப்புப் பெற்றுவிட்டிருந்த நேரம்.

     அவனும் மனிதன் தான்! - என்று பேசுவதே தேசத் துரோகம்!

     அவன் ஜப்பானியன். ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று ஆக்கப்பட்டுவிட்டிருந்த சூழ்நிலை.

     அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஒரு அமெரிக்கன், கடலோரம் கிடத்தப்பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.

     அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ, உயிருக்கு மன்றாடுகிறான்!

     டாக்டரின் கடமை என்ன? விபத்திலே சிக்கி உயிர் துடித்துக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவது! இனம், ஜாதி, எனும் எதனையும் கவனிக்கக்கூடாது; நோயாளி - டாக்டர் என்ற தொடர்பு மட்டுமே அதுபோது தெரியவேண்டும்.

     வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான். அமெரிக்கன் பிழைத்துக் கொள்கிறான்.

     எந்த அமெரிக்கனைக் கொல்வது, 'தேசியக் கடமை' என்று கொள்ளப்பட்டிருக்கிறதோ, அந்த அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!

     மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்ய வேண்டியதை மறந்து!

     இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே. தன் மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக் கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை