இரும்பு முள்வேலி

17

 'இரும்பு முள்வேலி'யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள், மெத்தப் பாடுபட்டு தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டவளாக!

     அவள் மீது வெறுப்புணர்ச்சிக் கொண்டோ ர் பாய்கின்றனர்.

     இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்தது; மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.

     ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக் கொண்ட அந்த இழிமகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள் போரிடுகிறாள்; அலறுகிறாள்; எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித் துரத்துகிறான். தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று பார்க்கிறாள் மோனா. ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தே விட்டது!

     நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.

     கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஒருநாள் மோனாதான் அவனைக் காப்பாற்றுகிறாள்.

     தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழி சுமத்துகிறான் காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன் முயன்றபோது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

     இனிக் களைந்தெறிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக் கொண்டு இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானியருக்கும் பிரிட்டிஷாருக்கும்; இங்கு காதலா! ஒப்புமா உலகு! ஊரோ, மோனா ஜெர்மானியனுக்குக் கள்ளக் காதலி ஆகி விட்டாள் என்று ஏசுகிறது. சபிக்கிறார்கள் - வெறுப்பைக் கக்குகிறார்கள். 'அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே கொடுத்து விட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும் நாடு தாங்கிக் கொண்டிருக்கிறதே' என்றெல்லாம் ஏசினர்.
     மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை; அவனுடைய கவலை முழுவதும், அவள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும் இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு இனம் எனும் கட்டுகளை உடைத்துக் கொண்டு பிறந்து விட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே ஆகிவிட்டது! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்துகொண்டு வாழ்ந்தாக வேண்டும். இந்தப் போர்ச் சூழ்நிலையில் நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா? சமுதாயம் ஒப்புக் கொள்ளுமா?

     தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.

     காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர், காதலால் கட்டுண்ட இருவரும்.

     விடிவெள்ளி முளைக்கிறது. பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலைகுலைந்து போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோ ம் என்ற உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர், உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை; ஜெர்மனியிலே இருக்கிறார். போர் மூட்டிவிட்ட கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர். நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் கெய்சரை விரட்ட வேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோர வேண்டும் என்று ஜெர்மன் மக்கள் துணிகின்றனர். சமாதானம் ஏற்படுகிறது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு முள்வேலிகள் அகற்றப்படுகின்றன. கவலை தோய்ந்த முகங்களிலெல்லாம் ஒரு களிப்பு பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம் நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்; ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம்; காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம்; குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம்; உருண்டோ டி வரும் பீரங்கி வண்டிகள் கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி 'மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா' - என்ற அன்பு மொழி இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை