இரும்பு முள்வேலி

18

சடலங்கள் கிடக்கும் வெட்டவெளிகள், இரத்தம் தோய்ந்த திடல், அழிக்கப்பட்ட வயல், இடிபாடாகிவிட்ட கட்டிடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள் இவைகளையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும். மாடு மனை தெரியும்; மக்கள் சுற்றம் தெரிவர்; விருந்து மண்டபம் தெரியும்; விழாக்கோலம் தெரியும்; பூங்கா தெரியும்; ஆங்கு உலவும் பூவையின் புது மலர்முகம் தெரியும்; கண்கள் களிநடமிடும்.

     மோனாவுக்கும் ஆஸ்க்காருக்கும் கூடப் புதுவாழ்வு பிறந்திடுமல்லவா!

     பகைவனிடமா காதல், ஜெர்மன் வெறியனிடமா காதல் என்ற பேச்சுக்கு இனி இடமில்லை அல்லவா?

     சமாதானம் ஏற்பட்டுவிட்டது; இனி ஜெர்மானியரும் பிரிட்டிஷ் மக்களும் பகைவர்கள் அல்லர்; வெவ்வேறு நாட்டினர்; நேச நாட்டினர். இனி மோனாவை ஆஸ்க்காரிடமிருந்து பிரித்து வைக்கும் பேதம் ஏது?

     கைதிகளை விடுதலை செய்து ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பிவிடும்படி உத்திரவு வந்துவிட்டது. சிறுசிறு அளவினராக அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். ஆஸ்க்கார்? அவனையும் தான் போகச் சொல்லுவார்கள் ஜெர்மனிக்கு. அவன் போய்விடுவதா! நான்! என் கதி! - என்று எண்ணுகிறாள் மோனா.

     பிரிட்டிஷ் பெண்ணை மணம் செய்து கொள்பவன் ஜெர்மனி போகத் தேவையில்லை என்றோர் விளக்கம் கிடைக்கிறது; மோனா மனதிலே ஒரு நம்பிக்கை எழுகிறது.

     ஆஸ்க்காரைத் திருமணம் செய்து கொண்டு தீவிலேயே வாழலாம்; பண்ணை வேலைகளை இருவரும் கவனித்துக் கொள்ளலாம். கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண்முன், நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோ ம் காண்பீர்! ஏதேதோ கதைத்தீர்களே முன்பு. இப்போது புரிகிறதா! நாங்கள் எந்த முறைகேடான செயலிலும் எங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; முறைப்படி திருமணம் செய்துகொண்டோ ம் என்று கூறிடலாம்; வீசப்பட்ட மாசுகூட துடைக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக் கொண்டாள் மோனா. பேதைப் பெண்! இந்த உலகம் உண்மைக் காதல் வெற்றி பெற அவ்வளவு எளிதாக அனுமதி கொடுத்து விடுகிறதா! துளியும் எதிர்பாராதிருந்த இன்னல்கள் தாக்கிடக் கிளம்பின.

     மிராசுதாரர், குத்தகைக் காலம் முடிந்துவிட்டது; இனி பண்ணையை விட்டு வெளியேறு என்று உத்திரவு பிறப்பித்தார்.

     "மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன். பாடுபட்டு, பண்ணையை நடத்தி" என்கிறாள் பாவை. "உனக்கா! ஊர் என் முகத்திலே காரித் துப்பும்! ஜெர்மானிக்காரனுடன் திருட்டுத்தனமாக தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு என் பண்ணையைக் குத்தகைக்குத் தரமுடியாது. விரைவில் வெளியேறு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் மிராசுதாரன்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை