இரும்பு முள்வேலி

19

ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்கமாட்டார்கள்; தங்கும் இடமும் தரமாட்டார்கள்; தொழிலும் நடத்த விடமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது. மோனாவின் மனம் உடைந்து விடுவது போலாகிவிட்டது. ஆஸ்க்கார் கூறினான்: "கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன் என்றாலும், பிரிட்டனில் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர் மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப்பிடித்தார்கள். நான் தவறேதும் செய்தவன் அல்ல என்பதும் ஜெர்மனியில் கெய்சர் மேற்கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன் என்பதையும் நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர். அப்போதே எனக்கு உறுதி அளித்தார்கள், 'போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும்' என்பதாக. இப்போது அதை நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று வாழ்ந்திடலாம்; போர்க்காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும். இல்லறம் எனும் நல்லறத்தின் இன்பம் பெறுவோம்; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டுவிட்ட இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும்" என்றான். இசையென இனித்தது அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று, பிரிட்டிஷ் தொழில் நிலையம் அனுப்பி வைத்த பதில் கடிதம். 'வேலை இப்போதைக்கு இல்லை! போர் முடிந்து விட்டது என்றாலும் ஜெர்மானியர்கள், பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில் தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானியனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும்' கடிதம் இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே உலகே சிக்கிவிட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! போர் எங்கே நின்றுவிட்டது! "சமாதானம் மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர் நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு. மோனா! போர் நடந்தபடி இருக்கிறது. இதோ பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்!" ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட்டாள்! நிலைமையை அறிந்து கண்கலங்கினாள்.

     அமெரிக்கா, இனவெறி அற்ற இடம்; யாரும் சென்றிடலாம்; தாயகமாகக் கொண்டிடலாம் என்ற செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம் போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இனபேதமற்ற சமுதாய நெறி தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. 'எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ஒரு வசதியுமின்றி புகுந்துகொண்டு நாட்டுக்குப் பாரமாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனை குறுக்கிட்டது.

     பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம ஏழை! ஆஸ்க்காரோ 'கைதி'யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்யமுடியும்? அமெரிக்காவை மறந்துவிட வேண்டியதுதான். அது பொருள் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு அங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது? வாழ இடம்? வாழ வழி?

     தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார்: "மோனா நீ மட்டும் சம்மதித்தால், நாம் நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து, போர் கிளறிவிட்ட பகை உணர்வை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால், நாம் இருவரும் அங்கு சென்று வாழ்ந்திடலாம். அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வை தன் வாழ்வு என்பவர்கள். உன்னைக் கண்டால் பூரித்துப் போவார்கள்! போகலாமா!" என்று கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும் இடமே எனக்குத் திருஇடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார் தன் அன்னைக்கு. பதில் வந்தது, இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவது போல.

     'எப்படியடா மனம் துணிந்தது, நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருவளைக் காதலிக்க? அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை, பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல் கண்ணை மறைக்கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன் தானா நீ? நாட்டை விடப் பெரியவளோ உன்னை மயக்கிவிட்ட கள்ளி' என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி அந்தக் கடிதத்தில்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை