செங்கைஆழியான் அவர்களுடன் ஒரு நேர்காணல்:
அகில்
1).
ஈழத்தின் மிக முக்கியமான புனைகதை இலக்கியப் படைப்பாளியான உங்களது ஆக்க
முயற்சிகளை நன்கு புரிந்து கொள்வதற்கு உங்களது ஆளுமையின்
உருவாக்கப்பின்னனி பற்றி அறிவது மிக அவசியமானதெனக் கருதுகின்றேன்.
அங்கிருந்து உங்களது நேர்காணலைத் தொடங்குவோம்.
என்
தாயின் உதரத்திலிருந்து இந்த மண்ணில் விழுந்தபோது நான் பிரித்தானிய
ஆதிக்கக்தின் அடிமைக்காற்றினைத் தான் சுவாசித்தேன். இலங்கை மண்ணைவிட்டு
அவர்கள் வெளியேறுவதற்கு அன்று இன்னமும் நான்கு ஆண்டுகள் இருந்தன. இன்று
நான் அறுபத்தொன்பது அகவையில் காலடி வைத்திருக்கும்போது, ஈழத்தின்
அரசியல் சமூக பொருளாதார விடயங்களில் பல்வேறு மாறுபாடுகளை எதிர் கொண்ட
காலப்பகுதிகளில் வாழ்ந்து அனுபவித்த நினைவுத்தடங்கள்
குதூகலப்பதிவுகளாகவும். மாறாத துயர வடுக்களாகவும் எஞ்சி நிற்கின்றன.
என்னை உருவாக்கிய அல்லது உருவாக்கும் முக்கிய காரணியாக விளங்குவது சமூக
வரலாறே ஆகும். நான் வாழும் காலத்தில் வாழும் சமூகத்தின் பல்வேறு
தளங்களிலான முரண்பாடுகள் எனது ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய பங்கினை
வகிக்கின்றன. நேரத்திற்கு அடிமையாக நான் என்றும் இருந்தவனல்லன்.
காலத்தையும் நேரத்தையும் நான் எப்போதும் என் வசத்தில் வைத்திருந்தமையால்
இன்று பல துறைகளிலும் உயர நேர்ந்திருக்கின்றது. ஒவ்வொரு
சந்தர்ப்பத்தையும் நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.
என் ஆளுமை உருவாக்கத்தின் அடுத்த காரணர் என் தந்தையாhர் கந்தையாவாவார்.
என் தந்தையார் யாழ்ப்பாணம் பெரிய கடையில், முன்னர் விளங்கிய சொக்கட்டான்
வடிவச் சந்தைக் கட்டடத்தில் நிலத்தில் சாக்கு விரித்து வெற்றிலை, பாக்கு,
புகையிலை என்பனவற்றைப் பரப்பி வியாபாரம் செய்தார். அந்த அடிமட்ட
நிலையிலிருந்து வந்தவன் நான். செங்கைஆழியானுடைய இன்றைய இலக்கினை
அடைவதற்கு அவன் எவ்வளவு தூரம் உழைத்திருக்கின்றான் என்பது என்னுடன்
பழகிய சிலருக்கு நன்கு தெரியும். நான் வந்த பாதையைச் சொல்ல எப்போதும்
வெட்கப்பட்டவனல்லன். என் இளவயதின் நடவடிக்கைகளுக்கு என் குடும்பத்தில்
எவரும் தடைக்கற்களாக இருக்கவில்லை. என் கல்வி தடைப்படாது என் தந்தை
பார்த்துக் கொண்டார். பாடசாலைக்குத் தேவையான சகலவற்றையும் முகம்
சுழிக்காது பணக்கஷ;டம் இருந்தாலும் வாங்கித் தந்தார். அந்நிலமை
பல்கலைக்கழகம் வரை தொடர்ந்தது. மாலை வரை விளையாட்டு. நேரம் கிடைக்கும்
போது ஊர் சுற்றுதல். எவ்வித தடைகளும் எனக்கு இருக்கவில்லை. அவர் என்னைப்
பொறுத்த வரையில் ஓர் அற்புதமான மனிதராக விளங்கினார். நான் கைநிறைய
உழைத்தபோது கூடத் தனக்கென எதுவும் என்னிடம் அவர் கேட்டதில்லை. நான்
குடும்பத்தில் எட்டாவது பிள்ளை. கடைசிப்பிள்ளை. செல்லப்பிள்ளை. அம்மா,
அக்கைமார், அண்ணன்மார் அனைவரும் என் உயர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தனர்.
என் குடும்பப்பின்னணி என் ஆளுமையை உருவாக்கியது. உழைப்பு, முயற்சி,
கிடைக்கும் சொற்ப நேரத்தையும் பயனுள்ள விதத்தில் செலவிடும் பிடிவாதம்
இவைதாம் என் வெற்றியின் காரணிகள்.
2).
நீங்கள் இதுவரை சுமார் எத்தனை சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள்
மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்?
எண்ணிக்கைகளைச் சரி வர நினைவிலெடுத்துக் கூறுவது தற்போது சிரமம். சுமார்
180 சிறுகதைகள் வரையில்
எழுதியிருப்பேன். அவை இதயமே அமைதி கொள், யாழ்ப்பாணத்து இராத்திரிகள்,
இரவு நேரப்பயணிகள், கூடில்லா நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும், குந்தி
இருக்க ஒரு குடிநிலம், வற்றாநதி என்ற சிறுகதைத் தொகுதிகளாக
வெளிவந்துள்ளன. இன்னுமொரு தொகுதிக்குரிய சிறுகதைகள் உள்ளன. 45
நாவல்கள் வரையில் எழுதியிருப்பேன். 15
குறுநாவல்கள் வரையில் எழுதியுள்ளேன். நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல்
தொகுதி என்பன தமிழகத்தில் வெளிவந்துள்ளன. ஏனையவை ஈழத்தில்
வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் வரை அச்சுருவில் வெளிவர இருக்கின்றன.
கட்டுரைகள் பல துறைகளிலும் எழுதியுள்ளேன்.
என்னைப்போல சமகால எரியும் பிரச்சினைகளைத் தம் படைப்பகளில் பதித்தவர்கள்
மிகக் குறைவு என்பேன். ஒரு சமூகவியல் ஆவணங்களாகவும், வரலாற்று
ஆவணங்களாகவும் என் புனைகதைகள் அமைந்துள்ளன. புனைகதை சார்ந்த
தொகுப்புக்களாக 40 உம், அவை சாராத
தொகுப்புக்களாக 8 உம் வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கையைக் கொண்டு செங்கை
ஆழியான் நிறைய எழுதுகிறார் எனக் கூறுகிறார்கள். தமிழக எழுத்தாளர்களுடன்
ஒப்பிடும் போது நான் ஒன்றும் பெரிதாக எழுதிக் குவித்துவிடவில்லை.
என்னால் எழுதாமலோ படிக்காமலோ இருக்க முடியாது. கிணறு இறைக்க இறைக்கத்
தான் ஊறும். கற்பனை வறட்சியும் கால பயமும் பல எழுத்தாளர்களது பேனாக்களை
மூடி வைத்துள்ளன. அதற்கு நான் என்ன செய்வது?
3).
உங்களுக்குள் ஒரு படைப்பாளி உருவெடுத்ததை நீங்கள் எந்தக்காலப்பகுதியில்
உணர்ந்தீர்கள்? அத்துடன் உங்களைச் சுய மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதில்
முன்னேற்றம் பெறுவதற்காக நீங்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டீர்கள்
எனவும் கூறமுடியுமா?
இக்கேள்வியின் முதற்பகுதி சற்றுச்சிக்கலானது. நான் குழந்தையாக இருக்கும்
போதே என் தாயார் பல்வேறு கதைகளை எனக்கு ஒவ்வொரு நாளும் கூறுவார்.
எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்கள் படிக்கும்போது எனது தாய் மாமன்
அருளம்பலம் புராண இதிகாசக் கதைகளைச் சுவையோடு எடுத்துரைப்பார். இந்த
அனுபவம் அனைவருக்கும் உரியது தான். ஆகவே சிறு வயதிலிருந்தே கதை கேட்கும்
ஆவல் என்னுள் உருவானது. பாடசாலை நாட்களில் அதிர்ஸ்டவசமாக
எங்களுக்குக்கிடைத்த ஆசிரியர்கள் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக அமைந்தனர்.
ஏரம்பமூர்த்தி மிக முக்கியமானவர் ஈழத்துறைவன் என்ற புனைப்பெயரில்
அறியப்பட்டவர். மறுமலர்ச்சி எழுத்தாளர் சங்கத்தை வரதரோடு ஆரம்பிப்பதி;ல்
ஆரம்பத்தில் முக்கியம் வகித்தவர். அவர் வகுப்;;பிலேயே ஒரு நூலகத்தை
ஆரம்பித்து நல்ல இலக்கிய நூல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
கம்யுனிஸ்ட் கார்த்திகேசன் எங்களுக்கு ஆசிரியராகக் கிடைத்தார்.
அவரிடமிருந்து சமூக அமைப்பியலைப் புரிந்து கொண்டேன். இலக்கியத்தில்
ஆர்வம் கொண்ட ஓர் இலக்கியக் கூட்டம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரில்
அன்றிருந்தது. கவிஞர் சோ.பத்மநாதன், து.வைத்திலிங்கம், செம்பியன்
செல்வன், அங்கையன் கயிலாசநாதன், முனியப்பதாசன் என அப்பட்டியல் நீளும்.
எனது அண்ணர் புதுமைலோலன் அக்காலத்தில் சிறுகதை எழுத்தாளராக விளங்கினார்.
அவர் வாங்கிப்படிக்காத சஞ்சிகைகளே இல்லை எனலாம். இவை அனைத்தும் என்னுள்
ஆழப்பதிந்து ஒரு படைப்பாளியாக என்னை உருவாக்கியதாக நினைக்கின்றேன்.
நிறைய எழுதினேன். இராஜ அரியரெத்தினம், சிற்பி போன்ற படைப்பாளிகளும்
சஞ்சிகை ஆசிரியர்களும் எனது எழுத்துக்களுக்குச் சரியான தடமமைத்துத்
தந்தனர்.
எனது எழுத்துக்களை நானே சுயமதிப்பீடு செய்ய முற்பட்ட காலம் வீரகேசரியின்
பரிசு நாவலான காட்டாறு வெளிவந்த காலமாகும். நான் எழுதிய நாவல்களில்
அற்புதமாகவும் தனித்துவமானதாகவும் அது அமைந்ததை உணர்ந்தேன். என் மனதில்
ஆழப்பதிந்த காயங்களை அந்த நாவல் இறக்கி வைத்தது. நானும் எனது நாவல்களும்
ஒரு சுய மதிப்பீடு தான். சிறுகதைகளில் நான் மல்லிகையில் எழுதிய செருப்பு
என்னைச் சிந்திக்க வைத்தது. சுயமதிப்பீடு செய்ய வைத்தது. எவருமே
சிந்திக்காத எழுதாத கோணமும் பார்வையும் அதில் விழுந்திருந்தன. இவை
இரண்டும் என் இன்றைய படைப்புக்களில் திருப்பங்களை ஏற்படுத்தின. இவை
இரண்டும் என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய 'அக்சிடெண்ட்'டுகள் என்பேன்.
செங்கைஆழியான் ஈழத்தின் தலை சிறந்த புனைகதைப் படைப்பாளி என்ற இலக்கிய
ஆணவம் அல்லது தலைக்கனம் எனக்குண்டு.
4).
செங்கை ஆழியான் என்ற உங்கள் புனைப்பெயர் பற்றி?
பல்கலைக் கழகக் காலத்தில் புனைப்பெயரை வைத்துக் கொண்டேன். சிவப்பு
நிறத்தில் பிடிப்பும் அக்கொள்கையில் வாஞ்சையும் இருந்தன. அதனால் சிவப்பு
நிறத்துடன் புனைப் பெயரை அமைத்துக் கொண்டேன். மற்றைய காரணம் விஸ்னு மீது
எனக்குப்பக்தி இருந்தது. அவர் சிவந்த கைகளை உடையவர். ஆழியில்
சமுத்திரத்தில் உறைபவர் செங்கை ஆழியான்.
5).
உங்களது முதல் எழுத்துமுயற்சி எது?
எனக்கு அப்போது பதினேழு வயது நடந்துகொண்டிருந்தது என நினைக்கிறேன்.
கல்கண்டு என்ற ஒரு சிறுவர் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.
தமிழ்வாணன் அதன் ஆசிரியராக இருந்தார். அப்பத்திரிகை ஓரு பக்கக் கதை
என்ற பகுதியை வெளியிட்டு வந்தது. அப்பகுதியில் வெளிவந்தால் அந்த ஒரு
பக்கக்கதைக்கு ஒரு ரூபா பரிசு. முதன்முதல் நானும் ஒருபக்கக் கதை ஒன்று
எழுதியனுப்பினேன். அது தெரிவாகிக் கல்கண்டில் வெளிவந்தது. நான் எழுதிய
முதல் கதை அது. எனக்கு மகிழ்ச்சி. காலகதியில் அதை மறந்து போனேன்.
கல்கண்டில் எனது முதலாவது சிறுகதை (ஒரு பக்கக்கதை) வெளிவந்த மகிழ்ச்சி
கரைவதற்கிடையில் இன்னோர் மகிழ்சிசியான இலக்கியச் சம்பவம் நிகழ்ந்தது.
கண்ணன் பத்திரிகை ஒரு தொடர்கதைப்போட்டி வைத்தது. அதில் நானும் 'ஆறுகால்
மடம்' என்றொரு தொடர்கதையை எழுதி அனுப்பி வைத்தேன். இது மகா துணிச்சலாக
இப்போது நினைத்தால் எனக்குப் படுகிறது. அப்போட்டியில் முதலாம் பரிசை
ஜெயராமன் என்பவரின் 'மஞ்சள் பங்களா' என்ற கதை பெற்றதாக நினைவு. போட்டி
முடிவை அறிந்ததும் நான் கதை அனுப்பியதை மறந்து போனேன். நான்கு
வாரங்களின் பின்னர் கண்ணன் ஆசிரியர் 'ஆர்வி' ஒரு கடிதம் அனுப்பி
வைத்தார். அதில் 'தங்கள் தொடர்கதை கிடைக்கப்பெற்றோம். மிகச்
சிறப்பாகவுள்ளது. எனினும் போட்டியென வந்தால் ஒன்றிற்கே பரிசு
உரித்தாகும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.' என
எழுதியிருந்தார். பங்கு பற்றிய அனைவருக்கும் வழமையாக அப்படித் தான்
எழுதியிருப்பார் என எனக்குத் தெரிந்தது. எனினும் என் கதை தெரிவுக்கு
எடுக்கப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி இருந்தது. இந்தக் காலத்தில்
எப்பத்திரிகையின் ஆசிரியர் அவ்வாறு நடந்து கொள்வார்?
6).
உங்களுடைய சிறுகதைகள் பெரும்பாலும் 'ஓஹென்றி'யின் பாணியில் அமைந்த
கதைகளாக உள்ளன
என்று நினைக்கிறேன். அந்த வகையில் உங்களது சிறுகதைகளின்; உருவ உள்ளடக்கம்;
பற்றிக் கூறுங்கள்?
சரியாகச் சொன்னீர்கள். எனது ஆரம்பகாலச் சிறுகதைகள் பொதுவாக தொடக்கம்
வளர்ச்சி முடிவு என்ற கட்டடைப்பினைக் கொண்டிருக்கின்றன. ஒர்
இடத்திலிருந்து அல்லது ஒரு சம்பவத்திலிருந்து தொடங்கி வளர்ந்து ஒரு
வியப்பான அல்லது எதிர்பார்க்காத முடிவினைக் கொண்டமைவனவாக இருந்தன.
பொதுவாக நல்ல சிறுகதைகளின் உள்ளடக்கத்தை நோக்கும்போது அவற்றின்
தொடக்கமும் வளர்ச்சியும் முடிவும் வாசகனை கவர்ந்து விடுவனவாகவுள்ளன.
ஆனந்தனின் தண்ணீர்த்தாகம், இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம்,
கனகசெந்திநாதனின் ஒருபிடி சோறு என்பன வாசகனை அப்படியே கதையோடு ஊன்ற
வைத்து சிறுகதையின் இறுதியில் வாசகனை நிமிர்ந்து அமரவைத்துவிடும்.
இப்பாணியில் என்னால் எழுதப்பட்ட அனைத்துச் சிறுகதைகளிலும் சிலவற்றினை
எடுத்துக்கொள்வோம். எனது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இதயமே அமைதி
கொள்'ளிலுள்ள அனைத்துச் சிறுகதைகளும் இத்ததைகையவை. 'கேவலம் நாய்கள்'
என்றொரு சிறுகதை இத்தொகுதியிலுள்ளது.
மைத்துனர்கன் இருவர் சச்சரவுப்பட்டுக் கொள்கிறார்கள். கதையின் முடிவில்,
வழக்கமாகச் சண்டையிடும் அயல் வீட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து தம்
ஆள்புலத்துள் பிரவேசித்த பிறிதொரு நாயைக் கடித்து விரட்டுகின்றன. அதனைப்
பார்த்த மைத்துனர்களின் மனம் மாறுவதாகக் கதை முடிகின்றது. மனநிலை
பாதிக்கப்பட்ட மகனைத் தன் மரணத்தின் பின்னர்; பாதுகாக்க, எவருமில்லை
என்று துயருறும் ஒரு வயோதிபத் தாய்க்கு இயற்கையில் நிகழும் ஒரு சம்பவம்
தெளிவைக் கொடுக்கின்றது. இறகு ஒடிந்து நிலத்தில் விழுந்த காகம் ஒன்றை
ஏனைய காகங்கள் கூடிக் கொத்திச் சாகடிக்கின்றன. 'இயற்கையின்
கர்ப்பத்'தில் இந்த உள்ளடக்கத்தைச் சித்திரித்துள்ளேன். பலரின்
மனங்களைக் கவர்ந்த சிறுகதை. வயோதிபர்களின் துயரங்களை முன்னிறுத்தி
நான்கு சிறுகதைகள் என்னால் படைக்கப்பட்டடுள்ளன. திக்விஜயம், சிப்பியும்
முத்தும், யாககுண்டம், கங்குமட்டை என்பனவாம். மனைவி இறந்ததும் தன்
இறுதிக் காலத்தைத் தம் மூன்று பிள்ளைகளுடன் மாறி மாறி வாழ்ந்து
கழிக்கலாம் என்று திக்விஜயம் மேற்கொள்ளும் கனகசபை மாஸ்ரர் ஏமாற்றத்தோடு
இறுதியில் தனித்து வாழத் தன் வீட்டிற்கே திரும்பி வருகிறார் என்பதைத்
திக்விஜயம் கூறுகின்றது. எல்லாவகையிலும் தன் மனைவியே உயர்ந்தவள்
என்றெண்ணிப் பெருமையுடன் வாழும் சின்னத்தம்பியர் ஒருகட்டத்தில் தன் மகள்
ஞானத்தின் உயர்ந்த மனப்பான்மையை உணர்கின்றார். சின்னத்தம்பியருக்கு
இன்னொரு பெண்ணுடன் தொடர்புள்ளது என்று பிறர் கூறக்கேட்ட அவர் மனைவி
அன்னம் கதறிக் குமுறி நடந்து கொண்டமுறைக்கும், அவ்வாறான ஒரு நிலை
ஏற்பட்டபோது அவர் மகள் ஞானம் அதனை நம்பாது, 'எனக்கு அவரைத் தெரியும்'
என்று அலட்சியமாக ஒதுக்கிவிடும் தன்மையையும் காண்கிறார். அன்னத்தைச்
சிப்பியாகவும் ஞானத்தை முத்தாகவும் அச்சிறுகதையில் சித்திரித்திருந்தேன்.
அன்புமணியின் மலரில் நான் எழுதிய நல்லதொரு சிறுகதை 'யாக குண்டம்'
என்பதாகும். பிள்ளைகளால் சரி வரப் போஷிக்கப்படாத சாம்புத்தாத்தா
முதியோர் இல்லமொன்றில் அடைக்கலம் புகுகிறார். நினைவோடை உத்தியில்
இக்கதைவளர்கின்றது. கதையின் நிறைவில் தன் சடலத்தைக் கூடப்பிள்ளைகளிடம்
ஒப்படைக்க வேண்டாமெனச் சாம்புத் தாத்தா கேட்டுக் கொள்கின்றார்.
இச்சிறுகதையை மிக விதந்து மூத்த எழுத்தாளர் சு. இராஜநாயகன் மலரில்
விமர்சனம் எழுதியிருந்தார். 'இச்சிறுகதையை எங்காவது ஓர்
ஓதக்குப்புறத்தில் இருக்கும் வயோதிபர் இல்லத்தில் இங்குள்ள எல்லோரையும்
கூட்டி வைத்து வாசித்துக் காட்டுங்கள். யாராவது ஒரு வயோதிபர் அவர் மலடு
ஆகவிருந்தால் கூட, கண்ணீர் விடவில்லை என்றால் செங்கை ஆழியான் மட்டுமல்ல
அவரை ஒத்த மற்றையோரும் எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்' என்று
முடித்திருந்தார். இச்சிறுகதை 1970
இல் அன்புமணியின் மலரில் வெளிவந்தது. இச்சிறுகதையை 1972
களில் நான் கலைமகளுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். இச்சிறுகதை பற்றி
இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் இவ்விடத்தில் நான் தெரிவிக்க வேண்டும்.
'ஈழத்துச்சிறுகதைகளைத் தமிழ்நாட்டவர் புரிந்து கொள்ள வேண்டுமானால்
நிச்சயம் அடிக்குறிப்பு தேவை' என்ற கருத்தினைக் கலைமகள் ஆசிரியர் கி.
வா. ஜகந்நாதன் தெரிவித்திருந்தார்;. அதன் பின்னர் நிலமை முற்றிலும்
மாறிவிட்டது. பூமிப்பந்தெங்கும் யாழ்ப்பாண மக்கள் பரவிவிட்டார்கள்.
அவர்களின் பரந்த சந்தை வாய்ப்பிற்காகத் தமிழகப் பத்திரிகைகள்
ஈழத்தெழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பிக் கேட்டுப் பிரசுரித்து
வருகின்றன.
ஈழநாடு பத்தாண்டு நிறைவுச்சிறுகதைப் போட்டியில் எனது 'கங்கு மட்டை'
முதலாம் பரிசினைப் பெற்றது. அதுவம் ஒரு வயோதிபரின் மனத்துயரங்களைச்
சித்திரி;ப்பதாக அமைந்தது. ஆனால் அதனை நான் எழுதிய உத்தியும், எடுத்துக்
கொண்ட பரந்த களமும் விரிந்த காலமும் (ஒரு சம்பவம் அன்று. முழு வாழ்க்கை)
வித்தியாசமான உருவ உள்ளடக்கத்தைக் கொண்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில்
கூறுகின்றேன். தொடக்கம் - வளர்சி – முடிவு என்ற வகையில் இதயமே அமைதி
கொள் என்ற தொகுதியில் உச்சிப்பொழுது, விளைபூமி, ராசாத்தி, வேள்வித் தீ
முதலான சிறுகதைகளை எழுதியுள்ளேன். தகுந்த மாப்பிள்ளை கிடைக்கவில்லை எனக்
கன்னிப் பருவத்தில் திருமணங்களைத் தட்டிக் கழித்துவிடுகின்ற ஒரு பெண்,
முதிர் கன்னி வயதில் எவ்வகையான மாப்பிள்ளளையாயினும் சரியென
ஒப்பக்கொள்கின்ற மனநிலையை உச்சிப் பொழுதில் சித்திரித்தேன். விளைபூமி
ஒரு சிக்கலான சமூக விமர்சனம். சாதியத்தால் சமூகத்தில் தாழ்வாகக்
கருதப்படுபவை கல்வி உயர்வால் தகர்க்கப்படும் என்தை வேள்வித் தீ
சுட்டுகின்றது, இறுதியில் வாசகனை நிமிர்ந்து உட்கார வைக்கும் முடிவுகள்
கொண்ட சிறுகதைகள் அதாவது திடீர் திருப்பங்களுடன் முடிவுறும் சிறுகதைகளை
ஓ ஹென்றி பாணிச்சிறுகதைகள் என்பர்.
7).
உங்களுடைய பெரும்பாலான சிறுகதைகள் யாழ்ப்பாண மக்களி;ன் பல்வேறு
துயரங்களையும் பண்பாடுகளையும் பேசுவனவாக அமைந்துள்ளன என்று கருதலாமா?
ஒரு படைப்பாளி தான் வாழ்கின்ற சமூகத்தைவிட்டு தன் படைப்புக்களை
எழுதிவிட முடியாது. கற்பனை என்று கூறிக்கொண்டாலும் அல்லற்படும் மக்களின்
துயரங்களும் தான் வாழும் சமூகத்தின் கலாசார மாற்றங்களும் யதார்த்தமாக
அவன் படைப்புகளில் வந்துவிடும். தன் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும்
சம்பவங்களை அவற்றிற்கான விடைகளுடன் இறக்கி வைக்கும் இடமாக எழுத்து
அமைந்து விடுகின்றது. என் சிறுகதைத் தொகுதிகள் இதுவரை ஐந்து
வெளிவந்தள்ளன. யாழ்ப்பாண இராத்திரிகள் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள
பெரும்பாலான சிறுகதைகள் நீங்கள் சொன்னமாதிரி யாழ்ப்பாண மக்களின்
துயரங்களைப் பேசுவன. யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை எனது சிறுகதைகள்
பேசும்போது போராட்ட காலத்தில் அவர்களின் நிலமைகளையும் அதனை அவர்கள்
எதிர் கொள்கின்ற சவால்களையும் சேர்த்தே நோக்க வேண்டியுள்ளது. மண்ணில்
சரியும் விழுமியங்கள், கங்குமட்டை, நிம்மதியாகச் சாகவாவது விடுங்கள்,
விடியாத இரவும் ஒரு மனிதனும், கறுப்பியைக் காணவில்லை முதலான சிறுகதைகள்
அத்தகையன. அவமாகச் செத்துப் போவதால் நட்டஈடு கிடைக்கும் என்பதால் எமது
விழுமியங்களையே தூக்கியெறியும் யாழ்ப்பாணத்துக் குடும்பங்கள் சில
மண்ணில் சரியும் விழுமியங்களில் சித்திரிக்கப்படுகின்றன.
சிறுகதை என்பது ஒரு அரை மணி ஒரு மணி நேரத்திற்குள் வாசித்து
முடிக்கப்பட வேண்டும் என்பார் எட்கார்ட் அலன்போ. சிறுகதை என்பது ஒரு
சாளரத்தின் ஊடாகப் பார்க்கும் பார்வை போன்றது என்பார் புதுமைப்பித்தன்.
ஒரு சம்பவத்தை அல்லது ஒரு சுவையைச் சித்திரிப்பது சிறுகதை என்பர். ஒரு
சம்பவத்தைமட்டும் சித்திரிப்பது சிறுகதை என்பாரும் அதே வேளை
முழுவாழ்க்கையையும் கூட ஒரு சிறுகதையில் சித்திரித்துவிட முடியும்
என்பாருமுளர். முழவாழ்க்கையையும் ஒரு மைய உள்ளடக்கத்தின் ஊடாக
நனவோடையில் ஒரு சிறுகதையாகச் சித்திரித்து வெற்றி கண்டவர் உளர்.
அவ்விடத்தில் சிறுகதை பெயருக்கேற்ப சிறிய வடிவமாக இருக்க வேண்டும் என்ற
விதியைக்கடந்து விடுகின்றது. ஹெமிங்வேயினுடைய கடலும்; கிழவனும் என்ற
நோபல் பரிசு பெற்ற நாவல் ஒரு நீண்ட சிறுகதையே. வாஷிங்டன் இர்வின்
என்பாரின் றிப்வான் விங்கில் ஒருவனுடைய முழு வரலாற்றையும் விபரிக்கும்
சிறுகதையாகும். அவ்வாறே எனது கங்குமட்டை என்ற சிறுகதை அமைந்துள்ளது.
சின்னாச்சிக் கிழவரின் நனவோடையூடாக அவரினதும் அவர் தங்கையுடையதுமான முழு
வாழ்க்கையும் இச்சிறுகதையில் கூறப்படுகின்றது. தந்தைக்கு, மனைவிக்கு,
தங்கைக்கு, பிள்ளைகளுக்கு அடங்கி வாழ்ந்து பழகிவிட்ட சின்னாச்சிக்கிழவர்
ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிடுவதை மையக்கருவாக
இச்சிறுகதை கொண்டுள்ளது. இது ஈழநாடு பத்தாண்டு நிறைவுச்
சிறுகதைப்போட்டியில் முதலாம் பரிசில் பெற்ற சிறுகதைகளில் ஒன்று. ஈழநாடு
தொகுதியாக வெளியிட்ட பரிசுக்கதைகளில் இடம் பிடித்துக் கொண்டது.
யாழ்ப்பாண இராத்திரிகள் என்ற சிறுகதை, பத்து வருடங்களுக்குப் பிறகு
குலசிங்கம் யாழ்ப்பாணத்தக்குத் தாய் சகோதரங்களைக் காண வருகின்றான்.
யாழ்ப்பாணத்தின் போர்க்காலச் சூழலில் வறுமையோடு வாழ்கின்ற
குடும்பங்களில் ஒன்று. யாழ்பாணத்தில் துயரங்களோடும் கஷ்டங்க ளோடும்
வாழ்கின்ற பெற்றாரையும் சகோதரங்களையும் கவனியாது வெளிநாடு களில்
வாழ்கின்ற பிள்ளைகளில் குலசிங்கம் ஒருவன். யாழ்ப்பாணத்திற்கு
வருவதற்காகக் கிளாலியில் தங்கி நிற்பவர்களில் ஒருவனாகக் குலசிங்கம்
இருக்கிறான். மச்சாளை மணம் செய்துகொண்டு திரும்பும் சுயநலத்தோடு
யாழ்ப்பாணம் வருகின்றான். யாழ்ப்பாணத்து நிலமை தெளிவாகின்றது. வள்ளம்
ஏறிக் கடலைக்கடந்து வீட்டிற்கு வருகின்றான்.
'அம்மா பத்து வரியத்துக்குப் பிறகு வந்திருக்கிறன்.'
அம்மா எதுவும் பேசவில்லை.
'எங்க ஒருத்தரையும் காணவில்லை?'
'ஆரைக்கேக்கிறாய் தம்பி?'
'தம்பிமாரை தங்கச்சிமாரை..'
'அவர்கள் எவருமிங்கில்லை. வயிறு ஒன்றிருக்கிறதே? மூத்தவளை ஒருத்தன்
விரும்பிக் கேட்டான். சோத்தைக் குடுத்துவிட்டன். பொடியன் இப்ப
சயிக்கிலில் விறகு இழுத்துச் சீவிக்கிறான். மற்றத் தங்கச்சி அனாதை
மடத்தில தொண்டு செய்து வயித்தைக் கழுவுகிறாள். தம்பி ஒருத்தன் வீட்டை
விட்டு ஓடிப்பொய்விட்டான். எங்;கயெண்டு தெரியாது. கடைசித் தம்பி ஷெல்
பட்டு எப்பவோ செத்துப்போனான். நான் இங்கை இருக்கிறன்.'
குலசிங்கம் துடித்துப்போய் எழுந்திருந்தான்.
'அம்மா ஏன் இதையெல்லாம் எழுதவில்லை?'
'உனக்கெழுதி என்ன புண்ணியம் தம்பி? உனக்குக் கடிதம் எழுத முத்திரைக்குக்
காசிருந்தால் ரெண்டு றாத்தல் பாண் வாங்கி ஒரு நேரம் சாமாளிச்சிடுவம்.'
'அம்மா பத்து வரியத்துக்கப் பிறகு வந்திருக்கிறன்..'
'சரி ரெண்டு நாள் இருந்துவிட்டுப் போ..'என்கிறாள் அம்மா
.
யாழ்ப்பாணத்து இராத்திரிகள் சிறுகதை வீரகேசரியில் வந்தபோது, இப்படியும்
பிள்ளைகள் உள்ளனரா எனப் பலர் கேட்டனர். பெற்றாரும் சகோதரங்களும்
யாழ்ப்பாணத்தில் இடரோடு வாழ வெளிநாட்டில் குடி வெறியோடு வாழ்கின்ற
பிள்ளைகளை அடையாளம் காட்ட நேர்ந்தது. கடும் பிரச்சினையான காலத்தில் பணம்
அனுப்பினால் யாழ்ப்பாணத்துக்கு வராது போய் விடும் என்று தம்மைத்தாமே
ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்த இளைஞர் பலரை எனக்குத் தெரியும். 'இப்ப காசு
அனுப்பினால் வீணாகச் செலவழித்து விடுவீர்கள். தங்கச்சிமாருக்கு பாங்சில
போட்டு வாறன். கலியாணத்தக்கு அனுப்புறன்' என்று ஏமாற்றிய தம்பிமாரையும்
எனக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தின் துயரங்களை வைத்து நிறையவே
எழுதியிருக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக்கோலங்களை எனது சில சிறுகதைகள் சிறப்பாக
எடுத்துக்காட்டியுள்ளன. குந்தி இருக்க ஒரு குடிநிலம் என்ற எனது
சிறுகதைத் தொகுதியில்; அவ்வாறான சிறுகதைகள் சில இடம் பிடித்துள்ளன.
வெறிச்சம் சஞ்சிகையில் யாழ்ப்பாணம் பாரீர் என்ற தலைப்பில் இச்சிறுகதைகள்
வெளிவந்தன. ஆடுகால் துலா, ஆவுரோஞ்சிக்கல், வேலிப்பொட்டு என்பன அவையாகும்.
நமது நாளாந்த வாழ்க்கையில் ஆடுகால் துலா மிக முக்கியமானது. கிணற்றில்
வாளியால் அள்ளிக் குளிக்கின்ற சுகம் தனி என்பார்கள். பழைமையை விரும்பிப்
புதுமையை ஏற்க மறுக்கும் வயோதிபர் ஒருவரின் மனவுணர்வை ஆடுகால் துலா
விபரிக்கின்றது. தலைமுறை இடைவெளி வேறுபாட்டினை இச்சிறுகதை
சித்திரிக்கின்றது. அதேபோல நமது கலாசாரத்தில் உறவுகளின் மிகநெருக்கமான
உறவையும் இணைப்பையும் காட்டும் அடையாளம் வேலிப்பொட்டு ஆகும்.
அக்காலத்தில் வேலிப்பொட்டு வகித்த பிணைப்பை இச்சிறுகதை அலசுகின்றது.
யாழ்ப்பாண வீதியோரங்களில் இன்று சிசிலமடைந்து காணப்படும் துரவுகளும்
ஆவுரோஞ்சிக் கற்களும் நாம் இழந்து கொண்டிருக்கின்ற எங்களது பெருமைகளைக்
கூறிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான ஒரு துரவையும் ஆவுரோஞ்சிக் கல்லையும்
காப்பாற்ற ஒரு முதியவர் படும் அவஸ்தையை ஆவுரோஞ்சிக்கல்லில்
விபரித்துள்ளேன்.
8).
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் உங்களுடைய சில சிறுகதைகள்
வன்னிப்பிரதேசக் களங்களை அடிநாதமாகக் கொண்டு அமைந்தன. அதற்கு
முக்கியமான காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா?
நான் இலங்கை நிர்வாகசேவையில் 1971
இல் இணைந்து கொண்டேன். காரியாதிகாரியாக, உதவி அரசாங்க அதிபராக, மேலதிக
அரசாங்க அதிபராக என ஏறத்தாழ முப்பது வருடங்கள் வன்னிப்பிரதேசங்களில்
கடமையாற்றியுள்ளேன். என் கடமைக்காலத்தில் பெரும்பகுதி வன்னிப்பிரதேசக்
குடியேற்றக்கிராமங்களிலும் வன்னிக்காட்டு;ப்பிரதேசங்களிலும் தான்
கழிந்தன. அக்காலங்களில் நான் சந்தித்த சுதேச வன்னி மக்கள்,
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து குடியேறிய குடியேற்றவாசிகள்,
சிங்களக் குடியானவர்கள், முஸ்லீம்மக்கள், மலைநாட்டிலிருந்து அகதிகளாக
ஓடி வந்து வன்னியில் காடுவெட்டிக் குடியேறிய மக்கள், அவர்களின் ஏழ்மை,
எளிமை, அப்பாவித்தனம் அனைத்தும் என்னை சிந்திக்க வைத்தன.
அப்பட்டாளி மக்களின் வாழ்க்கை என் எழுத்துக்;களுக்குக் கருவாகியது.
அவர்களின் துயரங்கள் என்னில் ஏற்படுத்திய காயங்கள் என்னை எழுதத்
தூண்டின. அந்த அப்பாவி மக்கள் உத்தியோகத்தர்கள், புதுப்பணக்காரர், நிலம்
உடையோர்களால் சுரண்டப்படுவதைக் காண நேர்ந்தது. ஏழைக்குடியேற்றவாசிகள்
தம் வயல்களுக்கு நியாயாமாக நீர் பெறுவது கஷ்டமானது. நிலமற்ற ஒருவன்
தனக்கென ஒரு துண்டுக் காட்டை வெட்டிக் கொளுத்தி நிலமாக்கிக் கொள்வது
பெரும் பிரச்சினையாகவிருந்தது. நகரத்தில் வாழ்ந்துபழக்கப்பட்ட எனக்கு
இத்தகைய காட்டுக்கிராமங்களின் வாழ்க்கை புதிய அனுபவமாக அமைந்தது. நான்
நினைக்கின்றேன் எந்தவொரு படைப்பாளிக்கும் இத்தகைய மூன்றுதசாப்த கால
வன்னி அனுபவம் கிடைத்திருக்காதென. கிடைத்தாலும் என்னைப்போல
எழுத்தாக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.
எனது வன்னிப்பிரதேசச் சிறுகதைகளுக்கு முழுமையாகக் களமமைத்துத் தந்தது
மல்லிகைச் சஞ்சிகையாகும். செங்கை ஆழியானை மல்லிகை எழுத்தாளன் என்று
கருதுமளவிற்கு எனது பெரும்பாலான சிறுகதைகள் மல்லிகையில் வெளிவந்துள்ளன.
வன்னிப்பிரதேசக் கதைகள் தொடராகவே மல்லிகையில் வெளிவந்துள்ளன. அறுவடை,
வல்லூறுகள், அறுகுவெளி, முதலிப்பழம், உப்பங்கழி, காட்டுத்தேன்,
பாலைப்பழம், விளாமரம், யானைக்காடு, விரால் மீன், ஒரு கிராமத்தின்
பன்னீராயிரம் நிர்வாண வயிறுகள், விடியவில்லை முதலானவை வன்னிப்பிரதேசச்
சிறுகதைகளாகும். வயலிற்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் பன்றிகளை
அறுவடை செய்யவிடும் ஏழை விவசாயின் சோகத்தை அறுவடையில் சித்திரித்தேன்.
இது தாமரையிலும் மல்லிகையிலும் வெளிவந்தது. 1985 ஜூலை மாதத்தில்
தமிழகத்தில் வெளி வந்த சிறுகதைகளில் சிறந்ததென இலக்கியச்சிந்தனை தெரிவு
செய்து பரிசில் வழங்கியது. 'அற்றது பற்றெனில்' என்ற வானதி வெளியிட்ட
சிறுகதைத் தொகுதியிலும் இடம் பிடித்தது. நெற்றி வியர்வை சிந்தித் தான்
தனக்கென வெட்டிக்கொளுத்திக் கழனியாக்கிய நிலத்தை கள்ள உறுதி காட்டி
சுவிகரித்துக் கொள்ளும் அவலத்தை வல்லூறுகள் சித்திரி;த்தன. காட்டு
வாழ்க்கையின் இனிமையையும் அழகையும் காட்டு விலங்குகளையும்
பயங்கரத்தையும் முதலிப்பழம், பாலைப்பழம், விளாமரம், யானைக்காடு,
காட்டுத்தேன் முதலான சிறுகதைகள விபரித்தன. தன்படுவான் உப்பைப்
பொதுமக்கள் அள்ளி எடுக்க விடாது சட்டத்தைக்காட்டி அபகரிக்கும் ஒருசில
அதிகாரிகளின் மோசடிமை உப்பங்கழியில் காட்டியுள்ளேன். பொதுவாக வன்னிப்
பிரதேசச் சிறுகதைகளான பன்னீராயிரம் நிர்வாண வயிறுகளும் ஏனையவும் அப்பாவி
மக்கள் அவர்கள் அறியாமலேயே சுரண்டப்படுவதைச் சித்திரித்துக்
காட்டுகின்றன.
9).
பின்வந்த காலங்களில் குறிப்பாக
1980களின்
பின் போராட்ட கால அவலங்களைக் கருவாகக் கொண்டனவாக உங்களுடைய பல
சிறுகதைகள் அமைந்தன. அவை உண்மையில் ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் மிக
முக்கியமானவை எனக்கருதுகின்றேன். தங்களை முழுமையாக அடையாளம் காட்டிய
சிறுகதைகள் அவை. ஆவணமாகும் சிறுகதைகள் எனவும் கொள்ளலாம் இல்லையா?
ஈழத்துச் சமூகப் பொருளாதார அரசியலில் 1977
களில் முகிழ்ந்து 1980 களில் பெரு
விருட்சமாக அடர்ந்துவிட்ட இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் ஈழத்து
இலக்கியத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. பேரினவாதத்தின்
இராணுவ அடக்கு முறைகளும் இனக்கலவரங்களும் ஆரம்பத்தில் சிறுபான்மைத்
தமிழரைப் பாதிக்கத் தொடங்கி, இன்று இலங்கை எங்கும் வாழும் மக்களின்
மரணங்கள் மலிந்த பூமியாக இலங்கையை மாற்றிவிட்டது. இனத்தின் அடையாளம்
பேணலிற்கான ஆள்புலப்போராட்டமாக மாறிவிட்ட நிலையில், சவால்களை எதிர்
கொண்ட மார்க்சிய எழுத்தாளர்கள் தம் கருத்து நிலைகளை மாற்றி, அன்றைய
சமூகப்பிரச்சினையின் குவிமையத்தை அடையாளம் கண்டு, அதற்கு வடிவம்
கொடுக்க வேண்டியவர்களாகிவி;ட்டனர்.
யுத்தச்சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வியல் நெருக்கடிகளை
இலக்கியமாகப் பதிவு செய்கின்ற கடப்பாடு சிறுகதையாசிரியர்களுக்கு
ஏற்பட்டபோது, மூத்த எழுத்தாளர்களின் பேனாக்கள் இறுக மூடிக்கொண்டன.
இளைஞர் பேராட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்துத் தெரிவிக்க நேரின்,
அவற்றின் விளைவாக எதிர்கொள்ள வேண்டிய அபாயம் எச்சரிக்கை செய்தது.
இக்கால கட்டத்தில் ஈழத்தமிழர் சமூகத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள்
விரும்பியோ விரும்பாமலோ நடந்தேறிவிட்டன. பேரினவாதத்தின் விளைவான
இனக்கலவரங்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விளைவான அவலங்கள்,
இந்திய, சிங்கள இராணுவத்தின் உயிர், சொத்து அழிப்பு நடவடிக்கைகள், அகதி
வாழ்க்கையின் தாங்கொணாத்துயரங்கள், பிறந்த மண்ணைவிட்டு
வெளிநாடுகளுக்கான புலம் பெயர்வு, வடமாகாணத்திலிருந்து முஸ்லீம்களை
வெளியேற்றிய சங்கதி, கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கும்
முஸ்லீம்களுக்குமான கலவரங்கள், இவ்வளவு பிரச்சினைகளுக்குமிடையில்
சமூகத்தைத் தொடர்ந்து பாதிக்கும் சாதியத்தின் அடக்கு முறை வடிவங்கள்;,
பெண்ணடிமைத்தனம், கல்விப் பாதிப்புகள், வறுமை, உளப்பாதிப்புகள்,
போக்குவரத்து தொலைத் தொடர்புகளின் தடைகள் அனைத்தும் இக்கால கட்டத்துப்
படைப்பாளிகளின் இலக்கியக் கருக்களாக மாறிவிட்டன.
இவற்றினை ஒதுக்கிவிட்டு காதல், குடும்ப உறவுகள் பற்றிப் பேசிக்
கொண்டிருக்க என்னால் முடியவில்லை. உண்மையில் இக்கால கட்டத்தில்
ஈழத்துச்சிறுகதைகளில் இவ்வாறான அம்சங்களை உள்ளடக்கிய சிறுகதைகள் விரல்
மடித்து எண்ணக்கூடிய அளவிற்கே வெளிவந்துள்ளன. போராட்டத்தின் விளைவாக
அமைந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் அவலங்களையும் இலக்கியப்
பதிவுகளாக்கவும், இப்படி வாழும் சமூகம் எப்படி வாழவேண்டும் என்ற
உணர்வுக் கருத்தைச் சமூகச் செய்திகளாகவும் எனது போராட்ட காலச்
சிறுகதைகளில் பதிக்க விரும்பினேன். 1983
களிலிருந்து இவ்வகையான பல சிறுகதைகள் என்னால் எழுதப்பட்டன. அவை
எழுதப்பட்ட காலகட்டத்து சமூக நிலைப்பாட்டையும், என் கருத்தியல்
நிலைப்பாட்டையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.
எனது போராட்டகாலச்சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும், இரவு நேரப் பயணிகள் என்பன
அவையாகும். எங்கள் அரிய சொத்தான வீடுகளைக் கைவிட்டு மூன்று இலட்சம்
மக்கள் கூடில்லா நத்தைகளாகவும் ஓடில்லாத ஆமைகளாகவும் கொட்டும் மழையில்
இடம் பெயர்ந்த மானிட சோகத்தை கூடில்லாத நத்தைகள் சித்திரி;த்துள்ளன.
குறியீடாகப் பலவற்றை இச்சிறுகதையில் கூறியுள்ளேன். நான் பல்கலைக்கழகப்
பதிவாளராக இருந்தபோது இந்தியாவிலிருந்து வந்த பெண் நிருபர் ஒருத்தி,
இந்திய இராணுவத்தின் யாழ்ப்பாணச் செயற்பாட்டை நியாயப்படுத்தியபோது,
பிரம்படியில் இந்திய இராணுவம் நடாத்திய அட்டூழியங்களை அழைத்துச் சென்று
காட்டினேன். இந்திய இராணுவத்தின் மறுபக்கத்தை அப்பெண் புரிந்து கொண்டாள்.
அதனை வைத்து நான் எழுதிய சிறுகதைதான் 'நாணயத்தின் இருபக்கங்கள்'
என்பதாகும். யுத்தகாலத்தில் தெற்கே எங்களுக்கான ஒரே நம்பிக்கையான
போக்குவரத்து நக்ரோமா கப்பலாகும். குடல் குலுங்க வாந்தி எடுத்தபடி நாம்
தெற்கே பயணப்பட்ட அவலத்தை நக்ரோமா என்ற சிறுகதை விபரிக்கின்றது. என்ன
உறவு, அரவங்கள், ஓநாய்கள், வெளவால்கள், எங்கள் பூமி, மார்க்கண்டேயர்,
கனலும் புனலும், மறைகாள், பொய்ப்பிஞ்சு, சீனவெடி, அலைகடல் தாண்டி
முதலான சிறுகதைகள் போராட்ட கால மக்களின் பல்வேறுபட்ட அவலங்களைப்
பேசுகின்றன.
மல்லிகையில் 'இரவுநேரப் பயணிகள்' என்ற பொதுத்தலைப்பில் நான் எழுதிய
சிறுகதைகள் பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. சமகால நிகழ்வுகளையும்
அவலங்களையும் ஆவணப்படுத்தச் சிறுகதைகள் உதவுகின்றன என்று கூறும்போது அவை
வெறும் கருத்துக்களோடு மட்டும் படைக்கப்படக் கூடாது. அவை
சிறுகதைக்குரிய உருவம், உள்ளடக்கம், பாத்திரவார்ப்பு, உத்தி
என்பனவற்றோடு கலையழகு கொண்டதாகவும் அமைய வேண்டும். அவ்வகையில்
இரவுநேரப்பயணிகள் என்ற எனது சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் எனது
வழமையான சிறுகதைப் பண்புகளிலிருந்து வேறுபட்டவை. மெஜிகல் றியலிசம்
உத்திச்சிறுகதைகள் சில. தீடீர் திருப்பத்துடன் நிறைவு பெறும் ஓ ஹென்றிப்
பாணிச்சிறுகதைகள் சில. இச்சிறுகதைகளில் மிருகங்கள், பட்சிகள் என்பன
பாத்திரங்களாக வரும். இதனால் இச்சிறுகதைகள் குறியீட்டுச் சிறுகதைகளாக
அமைகின்றன. பொதுவாக இச்சிறுகதைகள் அனைத்தும் தமிழ் மக்கள் படுகின்ற
அவலங்களையும், அந்த அவலங்களைச் சந்திப்பதால் வன்மம் பெறுகின்ற
உள்ளங்களையும் சித்திரிக்கின்றன.
தெருவிளக்கு, ஊரியான் பாதை, விறகு, தாயும் குஞ்சுகளும், கஞ்சிப்பொழுது,
எங்கட கிராமம், இரவுப்பூச்சிகள், சிறுபிள்ளை வேளாண்மை, புடையன் குட்டி,
மோதிர விரல், மேற்கும் கிழக்கும், ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்,
குந்தி இருக்க ஒரு குடிநிலம், மனிதம் என்பன இவ்வகைப் படைப்பக்களாகும்.
மின்சாரம் யாழ்ப்பாணத்திற்கு முற்றாகத் தடைப்பட்டிருந்த காலத்திலும்
மண்ணெண்ணெய் அரிதாக இருந்த காலத்திலும் இருண்டு கிடந்த
யாழ்ப்பாணத்திற்கு ஓளிதந்தவை சிக்கனவிளக்குகளும் குப்பி
விளக்குகளுமாகும். பதினைந்தாம் நூற்றாண்டை நினைவுபடுத்தும் தெரு
விளக்குககள் வீதிச்சந்திகளில் யாழ் மாநகர ஆணையாளரால் மாட்டப்பட்டன. தான்
இரவில் படிப்பதற்காகப் பெரும் பிரயத்தனம் பட்டு சிக்கன விளக்கொன்றைச்
செய்வித்துக் கொண்ட ஒரு சிறுவன் அதனைத் தெருவிளக்காக வீதியில் மாட்டிய
சேவையைத் தெருவிளக்கில் எழுதியுள்ளேன். இச்சிறுகதை ராவய
சிங்களப்பத்திரிகையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
ஆனையிறவுப்பாதை போக்குவரத்துக்குத் தடைப்பட்டபோது தெற்கே செல்வதற்கு
நமக்கு உதவிய ஊரியான் கொம்படிப் பாதைகளில் இரவுகளில் பயணப்பட்டு நம்
மக்கள் அனுபவித்த துயர்களை ஊரியான் பாதை சிறுகதை விபரிக்கின்றது.
வற்றுக்கடல் ஊடாக இரண்டு காளை மாடுகளை யாழ்ப்பாணத்திற்கு மருமகனுக்காக
சிவசம்பர் கொண்டு வருகிறார். ஹெலி சுட்டுக் கலைக்க சிவசம்பரும்
எருதுகளும் தெறிகெட்டு ஊரியான் தீவுகளில் ஒதுங்குகிறார்கள். சிவசம்பர்
தனது எருதுகளைத் தேடிச் செல்கிறார்.
'முத்துக்கறுப்பன் நிலத்தில் சரிந்து கிடப்பதும் அதன் அருகில் விழிகளில்
நீர்கோர்க்கச் சிவலை நின்றிருப்பதும் தெரிந்தது. 'ஐயோ'என்று சிவசம்பர்
அலறினார். சென்றியில் நின்றிருந்த பண்டாராவுக்குத் திடீரென விழிப்பு
வந்தது. சினைப்பரின் தொலை காட்டியூடாகக் கடல் நிரேரியை அளவிட்டபோது,
எதிர்த்தீவின் கரையில் நின்றிருந்த ஒரு 'புலி'யின் தலை தெரிந்தது. அது
ஒரு எருதின் அருகில் நின்றிருப்பதும் தெரிந்தது. 'கொட்டியா' என்றபடி
சினைப்பரின் விசையை இழுத்தான்' என ஊரியான் பாதைக் கதை நிறைவு
பெறுகின்றது.
ஊரியான் பாதையும் தடைப்பட்டபோது கிளாலிப்பாதை திறந்தது. இரவுநேரப்
பயணங்களின் அவலங்கள் தொடர்ந்தன. ஒரே வள்ளத்தில முழுக்குடும்பமும்
சென்றால் எவருமே மிஞ்சமாட்டார்கள் என்ற நினைவால் இரண்டு வள்ளங்களில்
பிரிந்து செல்லும் ஒரு தாயை 'தாயும் குஞ்சுகளும்' சிறுகதை
சித்திரிக்கின்றது. கஞ்சிப்பொழுது, இரவு நேரப்பூச்சிகள் ஆகிய இரண்டு
சிறுகதைகளும் விலங்குகளை வைத்துக் குறியீடாக எழுதிய கதைகளாகும். எங்கட
கிராமம், புடையன் குட்டி என்பன தீடீர் வியப்பான விருப்பம் கொண்ட
மெஜிக்கல் றியலிஷச் சிறுகதைகளாகும். மோதிரவிரல் சிறுகதை முடிந்த பின்னரே
ஆரம்பமாகின்றது. ஷெல்லடிகளுக்கும் ஹெலிச் சூடுகளுக்கும் இடையே
கிளாலிக்கடலைக் கடந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய அவலங்களைச் சந்திக்க
விரும்பாத வெளிநாட்டிலிருந்து வந்த யாழ்ப்பாணத்துப் பையன் கிளாலியைக்
கடக்காமல் திரும்பிச் செல்ல, மேலைத்தேய மருமகள் ஒருத்தி தன் மாமன்
மாமியைச் சந்திக்கக் கிளாலிக்கடலைக் கடக்கிறாள் என்பதை மேற்கும்
கிழக்கும் விபரிக்கின்றது.
ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும் முற்றிலும் வித்தியாசமான சிறுகதை.
மல்லிகை, சுபமங்களா, மேலைத்தேயத் தமிழ்ப்பத்திரிகைகள், ராவய
சிங்களப்பத்திரிகை என்பனவற்றில் வெளிவந்தது. ஷெல்துண்டுகளைப்
பொறுக்குவதற்காகச் ஷெல்லடிக்காகக் காத்திருக்கின்ற ஒரு; ஏழைச்சிறுவனைப்
பற்றிய கதை. சுஜாதாவால் குமுதம் அவார்ட் பெற்ற சிறுகதை. இவ்வாறான
சிறுகதைகளை ஈழத்தவர்களைத் தவிரப் பிறரால் எழுத முடீயாதெனப்
பாராட்டப்பட்ட கதை. சர்வதேச தரம் வாய்ந்த சிறுகதை என டொமினிக் ஜீவாவால்
விதந்துரைக்கப்பட்ட சிறுகதை. போராட்ட கால அவலங்களை கலாபூர்வமாக
என்னைப்போல எவரும் சிறுகதைகளில் எழுதவில்லையெனக் கூறிக்கொள்வதில்
பெருமைப்படுகின்றேன். புனைகதைகளை யதார்த்தபூர்வமாக படைப்பதற்குச்
சிறந்த அவதானிப்பு தேவை. பாத்திரங்களின் மன உணர்வுகளைப் புரிந்து
கொள்ளும் பக்குவம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அக்களத்தில் சாட்சியாக
வாழ்கின்ற அனுபவம் தேவை. பத்தாண்டுகளுக்கு மேல் கிளிநொச்சியில் உதவி
அரசாங்க அதிபராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளேன்.
ஒவ்வொரு கிழமையும் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் சயிக்கிலிலும்
மண்ணெண்ணெய் ஸ்கூட்டரிலும் சங்குப்பிட்டிப்பாதை, ஊரியான் பாதை, கிளாலிப்
பாதைகளில் இரவு வேளைகளில் மக்களோடு மக்களாகப் பயணப்பட்டிருக்கின்றேன்.
இத்தகைய சவாலான அனுபவம் வேறு எந்த எழுத்தாளனுக்கும் கிடைத்திருக்க
வாய்ப்பில்லை. என் மூன்றாம் கட்டச்சிறுகதைகளின் வெற்றிக்கு இந்த அனுபவம்,
அவதானிப்பு, தேடல், அவற்றை உள்வாங்கி கலாபூர்வமாக வெளிப்படுத்தும் திறன்
என்பன காரணமாக அமைந்தன. இது சுயமெச்சற் புராணமன்று. உண்மை.
10).
இன்றைய உங்களது சிறுகதைகள் உங்களது வாழ்க்கை நினைவுத்தடங்களை இரை
மீட்பனவாக அமைந்துள்ளன என நம்புகின்றேன். அது சரியா?
மிகவும் சரியான கணிப்பு. 66 வருட
வாழ்க்கை அனுபவம் எனக்குள்ளது. அந்தக்காலத்தில் எனக்குக்கிடைத்த
அனுபவங்களும் வாழ்க்கை வசதிகளும் இக்கால எம் பிள்ளைகளுக்குக்
கிடைப்பதில்லை. இன்று நாம் பல போராட்டங்களையும், தாங்கொண்ணாத
துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறோம். நாம் வாழ்ந்த காலம் அமைதியும்
சமாதானமும் நிலவிய காலம். ஆகவே அக்காலத்தை இரை மீட்பது புதியதொரு
அனுபவமாக இருக்கின்றது. தன்மையில் கதாசிரியன் தன்னை முதன்மைப்படுத்திக்
கதையாடல் புரிவது தமிழுக்குப் புதிதன்று. பல எழுத்தாளர்கள் ஏற்கனவே தம்
நினைவுத்தடங்களை எழுதிப்போயுள்ளனர். குறிப்பாக லா.ச. ராமாமிர்தம்
எழுதிய சிந்தாநதி இவ்வகைக்கு தக்க உதாரரண மாகும். அடிவளவுப்புளியமரம்,
சைவக்காரஆச்சி, குஞ்சிஅம்மா, அளவெட்டிமாமி, பால்குடிச்சிறுவன், ஒரு
தேவதை, வேலணை அக்கா, ஆசைக்கொரு அண்ணன், ஐந்து வயதுச்சிநேகிதி, ஜெயில்
கார்ட் அத்தான், மலட்டுப்பலா, ஐயாவின் நேசம் முதலான சிறுகதைகள்
இவ்வாறானவை. இவை அனைத்தும் என் நினைவுத்தடங்களை இரை மீட்பனவாகவுள்ளன.
ஒரு புனைகதை ஆசிரியன் படைக்கின்ற எழுத்துக்களில் அவனை எங்காவது
ஓரிடத்தில் அடையாளம் காணமுடியும். அவன் வாழ்வின் ஒரு துளி அனுபவம்
அல்லது வாழ்வுப் பகுதி அங்கிருக்கும். என் எழுத்துக்கள் அதற்குப்
புறநடையல்ல.
11).
நீங்கள் பல நகைச்சுவைக் கதைகள், விஞ்ஞானக்கதைகள் எழுதியுள்ளீர்கள்.
அவைகளைப் பற்றிக் கூறுங்கள்.
கதாசிரியர்களின் இயல்பான வசன நடையில் நகைச்சுவைப் பண்பு கலந்திருப்பதைக்
காணமுடியும். தனியே நகைச்சுவையைப் பிரதானமாகக் கொண்டு சிறுகதைகள்,
உரைச்சித்திரங்கள் எழுதியவர்கள் உள்ளனர். சமூகத்தின் அறியாமையையும்,
சமூகத்தில் சிலரின் அடாவடித்தனமான நடத்தைகளையும் பார்க்கும்போது அவர்களை
எள்ளி நகையாட நகைச்சுவை அவசியமாகின்றது. கறுப்பியைக் காணவில்லை,
ஊர்பார்க்க வந்த யானைகள், கிராமத்துக்குள் புகுந்த மாயமனிதன், மாணவரும்
மாடுகளும் என்பன நான் எழுதிய நகைச்சுவைப் பண்பு நிறைந்த சிறுகதைகளாகும்.
முட்டைக்கோழியொன்றைத் தொலைத்துவிட்டு ஆச்சி படும் அவஸ்தைகளைக்
கறுப்பியைக் காணவில்லை சிறுகதையில் சித்திரித்துள்ளேன். இக்கதை மூலம்
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுத் தகவல்கள் விபரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
பாடசாலைக்கும் ஒவ்வொரு கறவைப் பசு வழங்குவதாக மந்திரி
அறிவித்த்திருந்தார். அவ்வாறான வழங்கில் யாது நிகழும் என்பதை மாணவரும்
மாடுகளும் விபரிக்கின்றது.
அறிவியற் கதைகள் புனைகதை வரலாற்றில் முதன்மை பெற்றிருக்கின்றன. இன்றும்
விஞ்ஞானக் கதைகளுக்கு மேலைத்தேச இலக்கியத்தில் முதன்மை
கொடுத்துள்ளார்கள். நம்ப முடியாதவாறு விபரிப்பது மந்திரதந்திரக்கதைகள்.
நம்பகத் தன்மையோடு விபரிப்பன அறிவியற்கதைகள். சேதுபந்தனம்,
கண்ணுக்குத்தெரியாத தளை, என்னைத்தேடி, அபகமப், நிசப்த நகரம், பிரபஞ்ச
இரகசியம், தண்ணீர் தண்ணீர், ஓ வெள்ளவத்தை என்பன நான் எழுதி கலைமகள்,
கலைக்கதிர், நுண்ணறிவியல், அறிவுக்களஞ்சியம் ஆகிய பத்திரிகைகளில்
வெளிவந்தவையாகும். குந்தியிருக்க ஒரு குடிநிலம் என்ற தொகுதியிலும் இடம்
பிடித்துள்ளன.
12).
உங்களுடைய 'ஓ வெள்ளவத்தை' சற்று வித்தியாசமான சிறுகதையாகும். அதன்
நம்பகத் தன்மை எப்படி?
விஞ்ஞானரீதியான சிறுகதைகளில் ஓரளவு நம்பத்தகுந்த சங்கதிகள் இருக்கும்.
சுனாமிக்குப் பிறகு தென்னிலங்கையைத் தாக்கப்போகின்ற பெரும் இயற்கை இடர்
புவிநடுக்கமாகும். இப்பொழுது வெள்ளவத்தைப்பிரதேசத்தில் கட்டப்படும்
மாடிகள் 3.5 றிச்டர் புவிநடுக்க
அலைகளுக்கே தாக்குப்பிடிக்கக் கூடியன. இந்த அளவிற்கு மேல் புவிநடுக்கம்
ஏற்படில் வெள்ளவத்தைக் கட்டிடங்கள் தகர்ந்து விடும். இப்பொழுது
தென்னிலங்கையிலும் மலைநாட்டிலும் 2
றிச்டர் அளவில் புவிநடுக்க அலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலைநாட்டின்
மகாவலி நீர்த்தேக்கங்கள் 4 றிச்டர்
அளவிற்கு மேல் புவிநடுக்க அலைகள் ஏற்படில் நீர்த்தேக்கங்களைக்
காப்பாற்ற முடியாது. இது அறிவியல் உண்மைகள். புவியியலாளன் என்ற வகையில்
இந்தத் தகவல்களை வைத்து நான் எழுதிய சிறுகதை தான் ஓ வெள்ளவத்தை ஆகும்.
இது ஒரு எச்சரிக்கையே.
13).
கணையாழியில் 'செருப்பு' என்றொரு சிறுகதை எழுதியிருந்தீர்கள். அது
பலராலும் சிறப்பாகக் கூறப்பட்டது. எழுத்தாளர் சிற்பி கூட அதனை
விதந்துரைத்திருந்தார். அச்சிறுகதை பற்றிக் குறிப்பிடுங்கள்?
அச்சிறுகதை முதலில் மல்லிகையில் தான் பிரசுரமாகியிருந்தது. எனது
சிறுகதைகளில் பெரும்பாலானவை இலங்கையிலும் அதேவேளை
தமிழ்நாட்டுப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அதில் ஏதோ
தவறிருப்பதுபோலப் பேசிக்கொள்பவர்களும் உள்ளனர். என்னைப் பொறுத்தளவில்
பரந்த வாசகர் கூட்டத்தை அடைவதற்குத் தமிழகத்தில் வெளிவருவது அவசியம்.
அவை தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் எழுத்தாளனைக்
காவிச்செல்லும்.
'செருப்பு' சிறுகதை உண்மையில் பலராலும் பராட்டப்பட்ட சிறுகதை. அண்மையில்
கூட, தமிழகத்திலிருந்து பிரகாஷ் என்பவர், தான் நடாத்த இருக்கின்ற புதிய
சஞ்சிகைக்குச் சிறுகதை கேட்டபோது, தான் கணையாழியில் இருந்தபோது
செருப்புச் சிறுகதையை வெளியி;ட்டதாக நினைவுபடுத்தினார். அண்மையில்
மலைநாட்டிலிருந்து ஒரு அன்பர், பெயர் நினைவு வர மறுக்கிறது, வயோதிபம்,
செருப்புச்சிறுகதையைப் பாராட்டியிருந்தார். செருப்பு சிறுகதை
பாரம்பரியச் சிறுகதை மரபுக்கு வேறுபட்டது. திடீரென செருப்பு ஒன்றின்
வாரறுந்துவிடுகின்றது. அந்தநிலையில் ஒருவன் படும் அவஸ்தையை அச்சிறுகதை
சித்திரிக்கிறது. சிறப்பாக அமைந்துவிட்ட சிறுகதைப்படிமம் அது.
14).
ஈழத்தின் சிறுகதை வரலாற்றினைக் குறித்து விரிவான நூல் ஒன்றை
எழுதியிருக்கிறீர்கள். அம்முயற்சி பற்றியும், ஈழத்தின் சிறுகதை உலகு
பற்றியும் குறிப்பிடுங்களேன்?
நமது இலக்கிய இருப்புக்களைச் சரிவரத் தேடி எடுத்துக் கொண்டுவரவேண்டும்
என்பதை ஒரு இலக்கியக் கடமை என நான் நினைத்தேன். இருப்பை அறிந்த பின்னரே
வளர்ச்சி பற்றிச் சிந்திக்க வேண்டும். இருப்பை அறியாமலேயே மதிப்பீடும்
விமர்சனங்களும் நிறைய வெளிவந்துள்ளன. ஈழத்துச்சிறுகதை வரலாறு என்ற நூலை
ஆக்குவதற்கும் தகவல் திரட்டுவதற்கும் அனைத்துச்சிறுகதைகளையும் கூடியவரை
படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக் கொண்டேன். 400
க்கு மேற்பட்ட
சிறுகதைப் படைப்பாளிகளையும் 275
வரையிலான சிறுகதைத் தொகுதிகளையும், பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும்
வெளியான சுமார் எண்ணாயிரம் வரையிலான சிறுகதைகளையும் தேடிப் படிக்க
வேண்டியிருந்தது. அது இலேசான காரியமன்று. அதன் பின்னரே ஈழத்துச்சிறுகதை
வரலாற்றை எழுதினேன்.
மதிப்பீடு என்பது அவரவர் சுவை சார்ந்த விடயமாகும். ஒரு துறைக்குத் தம்
பங்கினைச் செய்தவர்களை அடையாளங்காணாது விடுவதும் அவர் தம் படைப்பை பதிவு
செய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகுமென்பது எனது கருத்தாகும்.
அச்சிறுகதைகளைப் படிக்காமலேயே மதிப்பீட்டுக்கருத்துக்கள் கூறப்பட்டு
வந்துள்ளன. ஈழத்துச்சிறுகதை வரலாறு என்ற எனது நூல் கூடியவரை
பூரணமானதாகப் பதிவு செய்திருக்கின்றதெனக் கருதுகின்றேன். இந்நூல்
ஈழத்துச்சிறுகதை வரலாற்றை மட்டும் கூறுகின்றது என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். ஈழத்தின் சிறுகதை வளர்ச்சியைத் தொட்டுக்காட்டியுள்ளபோதிலும்
பூரணமாக ஆராயவில்லை. ஈழத்தின் சிறுகதை வளர்ச்;சியை இன்றைய இலக்கிய அளவு
கோல்களைக் கொண்டு மதிப்பீடு செய்து எழுதவேண்டும். மரத்தடியில் சொரிந்து
கிடக்கின்ற ஓராயிரம் சருகுகளிடையே அரிதாகக் கிடைக்கின்ற பத்து இருபது
கனிகள் போல ஈழத்தின் படைப்புகள் தேறும்.
ஈழத்தின் சிறுகதை உலகு வளர்ச்;சி அடையவில்லை எனக் கூறிவிடமுடியாது.
உலகின் உன்னதமான சிறுகதைகளாக அடையாளம் காணப்படடவற்றிற்கும் தமிழ்
நாட்டின் உன்னதமான சிறுகதைகளாக அடையாளம் காணப்பட்டவற்றிற்கும் ஈழத்தின்
உன்னதமான சிறுகதைகள் என அடையாளம் காணப்படுபவை ஒன்றும் குறைந்தவையல்ல.
ஒப்பீட்டு ரீதியாக இவை மதிப்பிடப்பட வேண்டும். ஈழத்தின் சிறுகதை
முன்னோடிகள் கற்பனை ரதத்திலேறி சஞ்சரிக்கின்ற சிறுகதைகள் ஏராளமாக
எழுதியுள்ளார்கள் என்றாலும், தாம் வாழ்கின்ற சமூகத்தின்
பிரச்சினைகளையும் தீர்வுகளையும் சமூகப்பொறுப்போடு பல தரமான சிறுகதைகளில்
சித்திரித்துள்ளனர் என்பதை மறுத்தற்கில்லை. சமூகத்தின் எரியும்
பிரச்சினைகள் அவர்கள் சிறுகதைகளில் வெளிவந்துள்ளன. குடும்ப உறவுகளின்
ஊடலும் கூடலும் மிக நளினமாக அவர்கள் சிறுகதைகளில் பரவியிருக்கின்றன.
வாழ்க்கையில் நம்பிக்கையையும் திருப்தியையும் ஊட்டக்கூடிய செய்திகள்
அவர்கள் சிறுகதைகளில் பொதிந்திருக்கின்றன. அவர்கள் சிறுகதைகளில்
சொல்லிய விடயங்களிலும் சொல்லாத சங்கதிகள் பல தொக்கி நிற்கின்ற திறனைக்
காணலாம். நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்தாது வாழ்க்கையில் ஒரு
பிடிமானத்தினை அவை சுட்டி நிற்கின்றன. இலக்கியத் தேடலும் கலையழகும்
ஆங்காங்கு விரவியுள்ளமை மறுப்பதற்கில்லை. அவர்கள் சமூகத்தினைப் புரிந்து
கொண்டு சமூகத்திற்காக எழுதினார்கள்.
1930 – 1949 காலகட்டத்திலேயே
ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் என அடையாளம் காணத்தக்க சில சிறுகதைகள்
எழுதப்பட்டுள்ளன. ஆனந்தனின் தண்ணீர்த்தாகம், சம்பந்தனின் துறவி,
சி.வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம்,
அ.செ. முருகானந்தனின் வண்டிச்சவாரி, கனக செந்திநாதனின் ஒரு பிடி சோறு,
தாழையடி சபாரெத்தினத்தின் குருவின் சதி, சு.வே.யின் பாற்காவடி முதலான
சிறுகதைகள் தேறவில்லையா? 1950 – 1960
களில் முற்போக்குக் காலகட்டத்தில் வரதரின் கற்பு, வ.அ. இராரெத்தினத்தின்
தோணி, எஸ். பொன்னுத்துரையின் தேர், என்.கே. இரகுநாதனின் நிலவிலே
பேசுவோம், டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், சிற்பியின் கோயில்
பூனை, அ.முத்துலிங்கத்தின் பக்குவம், மு. தளையசிங்கத்தின் தேடல்
முதலானவை தேறவில்லையா? 1961 – 1983
காலகட்டத்தில் நந்தியின் அசுரனின் தலைகள்,
செங்கை ஆழியானின் செருப்பு, முனியப்பதாசனின் ஆத்மிகத்தேர்தல்,
செ.யோகநாதனின் சோளகம், செம்பியன் செல்வனின் சர்ப்பவியூகம், க.
பரராஜசேகரத்தின் வியாபாரம், தெளிவத்தை யோசெப்பின் பொட்டு, கோகிலா
மகேந்திரனின் சடப்பொருள் என்று நினைப்போ? முதலான சிறுகதைகள் தேறவில்லையா?
1983 – 2000 காலகட்டத்தில்
நந்தியின் கேள்விகள் உருவாகின்றன, செங்கைஆழியானின் ஷெல்லும் ஏழு இஞ்சிச்
சன்னங்களும், செ. யோகநாதனின் சரணபாலாவின் பூனைக்குட்டி, தெளிவத்தை
யோசெப்பின் பந்து, கோகிலா மகேந்திரனின் மனதையே கழுவி. தி. ஞானசேகரனின்
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின்
யாழ்ப்பாணம், க. தணிகாசலத்தின் பிரம்படி, சட்டநாதனின் குமிழ்,
ரஞ்சகுமாரின் கோசலை, உமா வரதராஜனின் அரசனின் வருகை, ஓட்டமாவடி
அறபாத்தின் விருட்சம், எஸ். ஏச். நிஃமத்தின் அடையாள அட்டையும் ஐந்து
ரூபாவும் என்பன உன்னதமான சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கனவல்லவா? இவ்வாறு
இன்னமும் பல படைப்பாளிகளை இனங்காணலாம்.
போராட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டு பங்காளிகளாகவும் விளங்கிச்
சிறுகதைகள் படைக்கின்ற பல எழுத்தாளர் இருந்தனர். முற்போக்குக் காலத்தின்
ஆரம்ப எழுத்துக்கள் போன்று குறித்த கருத்தியலை வலியுறுத்துவதற்காக
எழுதப்பட்ட பிரச்சாரச் சிறுகதைகளாக அவை அமைந்துவிடுகின்றன. அவற்றின்
தேவையும் அதுதான். இந்த அணிக்கு வெளியே பல எழுத்தாளர்கள் உள்ளனர்.
இன்று பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற பல சிறுகதைகளில் சிறுகதைகளுக்குரிய
செப்பம் இல்லை. அழுக்குகளோடு பிறந்த சிசுக்களாகவள்ளன. பத்திரிகைகளும்
சஞ்சிகைகளும் கூட அவற்றினைச் செப்பனிடுவதில் அக்கறை கொள்வதில்லை. ஒரு
இராஜஅரியரெத்தினம் போல, ஒரு எஸ். டி. சிவநாயகம் போல, ஒரு கலைச்செல்வி
சிற்பி போல, ஒரு கைலாசபதி போல பத்திரிகைகளுக்கு வருகின்ற எழுத்துக்களை
யாரும் திருத்துவதில்லை. அவ்வாறே பிரசுரத்திற்குக்
கொடுத்தவிடுகின்றார்கள். எழுத்துலகில் காலடி எடுத்து வைப்பவர்களை
தக்கவாறு வழிகாட்ட வேண்டியது பத்திரிகை ஆசிரியர்களின் கடனாகும். அவை
நுட்பமாகச் செப்பனிடப்பட வேண்டும்.
15).
உங்களுடைய படைப்புக்களை ஜனரஞ்சக எழுத்துக்கள் எனச் சிலர் கூறுகிறார்களே?
இது ஒரு நல்ல கேள்வி. ஜனரஞ்சக எழுத்துக்கள் என்பதற்குப் பல விளக்கங்கள்
உள்ளன. நிறைய வாசகர்களால் வாசிக்கப்படுகின்ற எழுத்துக்கள்,
சுயமானபடைப்புகள், வாசகர்களின் மலினமான உணர்வுகளுக்கு அதாவது செக்ஸ்,
கிரைம், கிளுகிளுப்பு போன்றவற்றிற்குத் தீனிபோடுகின்ற எழுத்துக்கள்,
குமுதத்தில் வருகின்றவைபோல ஒரு பக்கக்கதைகள், விகடனில் வருகின்றவை
மாதிரி நிமிடக்கதைகள் இவை அனைத்தும் ஜனரஞ்சக வகைக்குள் அடங்கும்.
ஈழத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் வாசகனின் விருப்பிற்குத் தீனி
போடுகின்றவர்களல்லர். பணத்திற்காக எழுதுகின்றவர்களல்லர். ஆரம்பத்தில்
இருந்தே இலக்கியம் வாசிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு
நம்பிக்கையுண்டு. நான் யாருக்காக எழுதுகின்றேனோ அவர்களை அவை இலகுவில்
சென்றடைந்து விடுகின்றன. பத்துப் பன்னிரண்டு பேருக்காக எழுதுபவன்
நானல்லன். என்னுடைய நாவல்களினதும் ஏனைய படைப்புகளினதும் விற்பனை அளவைக்
கண்ட ஒரு சில மதிப்பீட்டாளர்கள் செங்கைஆழியானின் எழுத்துக்கள் ஜனரஞ்சகப்
படைப்புக்கள் எனக் கூறிவிடுகின்றனர். இந்த மாயை நேற்று இன்று
ஏற்பட்டதன்று. செங்கை ஆழியானுக்கு மட்டும் ஏற்பட்டதன்று. மார்க்சிய
அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இவை யாருக்காக
எழுதப்பட்டனவோ அவர்களில் ஒரு சிலரைக் கூட அடையாவிட்டாலும், தம் அணியைச்
சேர்ந்தவர்களின் எழுத்துக்கள், எண்ணிக்கையில் குறைவான எழுத்துக்கள்,
தாம் கருதுகின்ற மிகச்சிறிய பத்திரிகைகளில் வெளிவந்த எழுத்துக்கள், தம்
பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டவை என்பதால் அவற்றினை இலக்கியத்
தரமானவையாக ஏற்றுக்கொண்ட மனப்பான்மை கைலாசபதியிலிருந்து, சிவத்தம்பி
உட்பட, முற்போக்கு எழுத்தாளர் எனக் கூறிக்கொண்டு இன்று எழுத்திலிருந்து
ஒதுங்கி பழைய தம் படைப்புகளை இரை மீட்கும் ஒரு சிலரின் பார்வையில்
ஈழத்தின் எழுத்தாளர்கள் பலரும் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் தாம். இவர்கள் தம்
அணியைச் சாராதவர்கள் எவரின் படைப்புகளையும் வாசிப்பதில்லை எனத்திடமாகக்
கூறுவேன். நான் எழுதிய செருப்பு, கஞ்சித் தொட்டி, ஷெல்லும் ஏழு
இஞ்சிச்சன்னங்களும் என்பன ஜனரஞ்சக எழுத்துக்களா? கணையாழியில் பரிசு
பெற்ற குறுநாவல் யாழ்ப்பாணத்துக்கிராமம் ஒன்று, கணையாழியில் வெளிவந்த
இன்னொரு குறுநாவல் சாம்பவி, கலைமகள் பரிசுக் குறுநாவல் மீண்டும் ஒரு
சீதை என்பனவற்றினை இவர்கள் படித்திருப்பார்களா? எனது காட்டாறு, மரணங்கள்
மலிந்த பூமி, ஓ அந்த பழைய அழகிய உலகம், ரௌத்திர பூமி போன்றன சாதாரண
படைப்புகளா? நான் நிறைய எழுதுகின்றேன் என்பதால் வாசகனால்
வாசிக்கப்படுகின்றேன் என்பதால் ஜனரஞ்சக எழுத்தாளன் என்றால்
எண்ணிக்கையில் தமிழகப்படைப்பாளிகளான ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கல்கி,
இந்துமதி, நீலபத்மநாதன் முதலானோரின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தைக் கூடத்
தொடவில்லை. ஈழத்தில் நான் தொடர்ந்து இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
இறைக்க இறைக்கத் தான் கிணறு ஊறும். கற்பனை வறண்டு, காலத்திற்குப் பயந்து
தம் பேனாக்களின் மூடிகளைத் திறக்காதவர்கள், அவர்களின் வார்த்தையாடல்கள்
இவையாகத் தான் இருக்கும். இலக்கியத்தின் தரத்தினை நிர்ணயிக்கும் ஆற்றல்
என் போன்ற மூத்த எழுத்தாளர்களுக்கேயுண்டு. யாழ்ப்பாணப்பல்கலைக்
கழகத்தின் அதிதி விரிவுரையாளராக பலகாலம் பணியாற்றியிருக்கிறேன்.
படைப்பிலக்கியம், ஆய்வு நூலாக்கம், தொகுப்பாக்கம், பாடநூலாக்கம் எனப்
பல்பரிமாண முயற்சிகளில் ஓயாது ஈடுபட்டுழைக்கின்றேன். இந்த இலக்கினை
அடைவதற்கு நான் செலுத்திய அயராத உழைப்பு சொற்பமல்ல. சந்தர்ப்பம் எனக்கு
மட்டுமுடையதன்று. அனைவருக்கும் உரியதே. எவரும் அதற்குத் தடையாகவில்லை.
இன்றைய உலகின் சவால் கல்விப் புலமையே. நேரத்தின் பெறுமதியை அறிந்தவன்
நான். அதனால் ஈழத்துப் படைப்பாளிகளில் வசதியாக இருப்பவன் ஆதலால் பலரின்
கண்டிப்புக்;கு உட்பட்டுள்ளேன். செங்கை ஆழியானின் படைப்புக்களைக்
கொச்சைப்படுத்த அந்த வாக்கியம் அவர்களுக்கு உதவுகின்றது. இலக்கியம்
வாசிக்கப்பட வேண்டும்.
16).
உங்களுடைய பதிப்பு முயற்சிகள், பதிப்பகம் பற்றி கூறுங்கள்?
மிக ஆரம்ப காலத்தில் இருந்தே பதிப்பகம் பற்றிய கனவு எனக்குண்டு.
பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்து கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும்,
காலத்தின் குரல்கள் என்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபோது 'பல்கலை
வெளியீடு' என்ற பதிப்பகத்தை நிறுவியிருந்தேன். பின்னர் மகளின் பெயரால்
ரேகா பதிப்பகம் என்றொரு பதிப்பகம் வைத்திருந்தேன். பின்னர் என்
அதிர்ஸ்ட மனைவியின் பெயரால் கமலம் பதிப்பகத்தை கொண்டுள்ளேன். என்னைப்
பொறுத்த வரையில் பதிப்பகத்துறை எனக்கு சிரமமானதாகவோ நட்டத்தைத்
தருவதாகவோ இல்லை. ஏனெனில் என் நாவலோ, சிறுகதைத் தொகுதியோ
வெளிவந்திருப்பதாகச் செய்தி பரவியதும் ஒரு மாதத்திற்குள் 300
பிரதிகள் வரை விற்பனையாகிவிடும். முதலீடு வந்துவிடும். இன்று புத்தக
பதிப்புத் தொழில் சாத்தியமானதாகவில்லை. விலைகொடுத்து வாங்கி
நூல்களைப்படிப்பவர்களின் கவனக் கலைப்பான்களாக தொலைகாட்சிவந்து விட்டது.
இல்லங்களில் 10 சதமானவர்கள் கூட
கதை நூல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக
விற்பனையாளர்கள் இப்பொழுது ஒத்தபடி 40 சதவீதக் கழிவு கேட்கிறார்கள்.
100 ரூபா புத்தகத்தை விற்க 40 ரூபா கேட்கிறார்கள். பதிப்பகங்கள் நடந்த
மாதிரித்தான்.
17).
ஒரு நாவல் ஆசிரியர் என்ற வகையில் சுந்தரராமசாமி, ஜெயமோகன், கோணங்கி
ஆகியோரின் பரீட்சார்த்த நாவல்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
நாவல்கள் என்ற பெயரில் சுந்தரராமசாமி, ஜெயமோகன். கோணங்கி என்போர்
பரிசோதனைப்படைப்புக்களை எழுதியுள்ளனர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில
குறிப்புகள், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கோணங்கியின் எழுத்துக்கள் ஆகிய
பரிசோதனைப் படைப்புகளை நாவல் என்ற பெயரில் எழுதித் தந்துள்ளனர்.
உண்மையில் கூறுவதாயின் இவை நாவல்களேயல்ல. இவர்களது நாவல்களில்
யதார்த்தப் பண்பு இருக்காது. 'மனம்போன போக்கில் கிறுக்கி வைத்ததை
வாசகர்கள் மீது சுமத்துகின்ற மனப்பாங்கு இருக்கின்றது. தமிழில் இதுவரை
வெளிவந்திருக்காத நாவல் இலக்கியத்துடன், இலக்கணரீதியாக ஒப்பிட்டுக் கூற
முடியாத தான்தோன்றித்தனமாய் தன்னை வடிவமைத்துக் கொண்டு
வெளிவந்திருக்கிறது' என த. ராசு போன்றோர் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில
குறிப்புகள் பற்றிக் குறிப்பிடுவர். சுந்தரராமசாமி துதி பாடுவோர் தமக்கு
விளங்கியதாகக் கூறிப்போற்றிக் கொள்வர். நிர்வாணமாக நிற்கும் அரசன் தான்
கண்களுக்குத் தெரியாக ஆடை அணிந்திருப்பதாகச் சொல்வது போலவும் அதனை
நம்பிக்கொள்வது போலவும் நடிக்க வேண்டும். விஷ்ணுபுரமும் இந்தக்
கருத்துக்குச் சோடை போனதல்ல. இப்படைப்புகளைப் புரிந்து கொள்வதற்கு
ஆசிரியர் கூடவே இருந்து விளக்கம் தந்தால் தான் முடியும். இவை தமிழ்
நாவல் துறையில் வந்திருக்கும் பரிசோதனைகளாயின், நாவல் என்ற சம்பிரதாய
அமைப்புக்கு அப்பாற்பட்டவையாயின் அதில் எமக்கு உடன்பாடே. ஆனால் நாம்
நல்ல இலக்கிய நாவல்கள் என்று கருதுவனவற்றிற்கு அப்பால் சிறப்புடையனவாக
வற்புறுத்துவார்களாயின், தமிழிலக்கியத்தில் நாவலுக்கு அடுத்ததாக ஒரு
புதிய இலக்கியத் துறை வரும்போது, (அறிமுகமாகும் போது), அத்துறையின்
ஆரம்ப முயற்சிகளாக இந்நாவல்கள் நிச்சயம் இடம் பெறும்.
18). இதுவரை வெளிவந்த
நாவல்களில் இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்கள் என்று எவற்றைக்
கருதுவீர்கள்?
தமிழில் வெளிவந்திருக்கும் இலக்கியத்தரமான மிகச்சிறந்த நாவல்களாகவும்,
நாவல் இலக்கியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆக்கவுறுப்புக்களைச் சிறப்பாக்
கொண்டமைந்தனவாகவும், அமையாவிடத்தும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று
வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன. சொரிந்து
கிடக்கின்ற ஏராளமான சருகுகளிடையே நாவல்மலர்களாக எஞ்சியிருப்பவை
வ.ரா.வின் சுந்தரி, கல்கியின் அலையோசை, சுந்தர ராமசாமியின் ஒரு
புளியமரத்தின் கதை, ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், சிதம்பர
ரகுநாதனின் பஞ்சும் பசியும், நீல பத்மநாதனின் பள்ளிகொண்டபுரம்;, சா.
கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு,
கு.சின்னப்பபாரதியின் தாகம், சு. சமுத்திரத்தின் சத்திய ஆவேசம்.
தி.ஜானகிராமனின் மோகமுள், பொன்னீலனின் கரிசல், அசோகமித்திரனின்
பதினெட்டாவது அட்சரக்கோடு போன்ற இலக்கியத் தரமான நாவல்களை பெருமைப்படும்
வகையில் நாம் பெற்றுள்ளோம். ஈழத்தில் டானியலின் கானல், செங்கைஆழியானின்
காட்டாறு, தி.ஞானசேகரனின் குருதிமலை, செ.யோகநாதனின் கிட்டி என்பன
குறிப்பிடத்தக்கவை.
19). மார்க்சிச
விமரிசகர்களின் போக்கு பற்றிய உங்கள் கருத்து...?
மார்க்சிச விமசகர்கள் மார்க்சிய கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு எழுதிய
எழுத்தாளர்களை அவர்கள் படைத்தது இலக்கியமே இல்லை என்று ஒதுக்கிவிடவில்லை.
அவர்களின் கணிப்புக்கு அவை உட்படுத்தவில்லை. இவர்கள் கணிக்காததால் அவை
இலக்கியம் இல்லை என்றும் ஆகிவிடவில்லை. சிவத்தம்பி ஒரு காலத்தில்
தூக்கிப்பிடித்த மார்க்சிச எழுத்தாளர்களை இன்று மீள் விமர்சனநிலை முகம்
சுழிக்க வைத்துள்ளது. நான் பவள விழா மலரில் எழுதியவற்றை உங்களுக்கு
நினைவூட்ட விரும்புகிறேன். 'நவீன இலக்கியத்தில் பேராசிரியரின் விமர்சனப்
பார்வை ஈழத்துப் படைப்பாளிகளுக்கு (அதாவது மார்க்சிஸ்ட்
படைப்பாளிகளுக்கு) முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளன. டானியல், டொமினிக்
ஜீவா, ரகுநாதன் அகியோரை புனைகதை இலக்கியத்தின் உச்சங்களாக்க முயன்ற
பேராசிரியர் இன்று டானியலை அவருடைய கானல் நாவலுடனும், ரகுநாதனை அவரின்
நிலவிலே பேசுவோம் சிறுகதையுடனும், மட்டுப்படுத்திவிட்டார். மூத்த
எழுத்தாளர் அகஸ்தியரின் படைப்புகளை அவை மார்க்சியப் பார்வை கொண்டனவாக
இருந்தும் இலக்கிய வரம்பிற்குள் சேர்க்காது ஓதுக்கிவிட்டார்.
நாவாலாசிரியர் கணேசலிங்கத்தின் ஆரம்ப நாவல்களான நீண்டபயணத்தையும்,
செவ்வானத்தையும் ஏற்கும் பேராசிரியர் ஏனையவை மறு வாசிப்பிற்குரியவை எனக்
கணிப்பிட்டுள்ளார்.'
20).
யாழ்.இலக்கிய வட்டம் பற்றியும், அதன் செயற்பாடுகள்
குறித்துச் சொல்லுங்கள்?
யாழ் இலக்கிய வட்டத்தின் மூலகர்த்தா இரகசிகமணி கனகசெந்திநாதன் ஆவார்.
இன்று அதன் தலைவர் நான். மூலகர்த்தாவோடு யாழ்வாணன், செம்பியன்செல்வன்,
நான் இணைந்திருந்தோம். வரதர், சச்சிதானந்கன், சு.வே, சொக்கன். கே.வி.
நடராஜன், இ.நாகராஜன், கல்வயல் குமாரசாமி, காரை சுந்தரம்பிள்ளை, சிற்பி.
குறமகள், கவிஞர் கந்தவனம், புத்தொளி சிவபாதம் என ஒரு எழுத்துலக
ஜாம்பவான்கள் அதில் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களில் பலர் இன்றில்லை.
அதனைக் கட்டிக்காக்கின்ற பணி என் தலை மீது சுமந்துள்ளது. யாழ் இலக்கிய
வட்டம் ஈழத்து இலக்கிய உலகின் ஒரு வலுவான அமைப்பாகும். அதன் சாதனைகள்
பல. அதனை வீறுகொண்ட இளம் எழுத்தாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக
ஆவன செய்து வருகின்றோம். நூல் வெளியீடுகளைப் பொறுத்தளவில் இது வரை
இலக்கிய வட்டம் 90 க்கு மேற்பட்ட
நூல்களை வெளியிட்டுள்ளது. கே.வி. நடராஜனின் யாழ்ப்பாணக்கதைகளுடன் அது
தன் பிரசுரப் பணியை ஆரம்பித்தது. சு.வே. யின் மண்வாசனை, கனக
செந்திநாதனின் வெண்சங்கு, இ.நாகராஜனின் நிறைநிலா, யாழ்ப்பாணனின்
அமரத்துவம், செம்பியன் செல்வனின் அமைதியின் இறகுகள், சர்ப்ப வியூகம்,
செங்கை ஆழியானின் மரணங்கள் மலிந்த பூமி உட்பட சில நூல்கள், கவிஞர்
ஐயாத்துரை கவிதைகள், கந்தவனத்தின் கவிதைகள் என்பன நினைவிலுள்ள சில
நூல்கள், யாழ் இலக்கியவட்டம் வெளியிட்டது. சுதந்திரன் சிறுகதைகள் யாழ்
இலக்கிய வட்டம் வெளியிட்ட பெரிய அளவிலான நூலாகும். 102
ஈழத்து எழுத்தாளர்களின் சுதந்திரன் கதைகள் இதிலடங்கியுள்ளது. ஈழத்தின்
எழுத்தாளர்களின் நலனைப் பேணுகின்ற சங்கமாக இது விளங்கி வருகின்றது
21).
இலக்கிய வரலாற்றில்
சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது கணிசமானதொன்றாகவே காணப்படகின்றது.
அந்த வகையில் கலைச்செல்வியில் தொடங்கிய உங்கள் எழுத்துப் பயணம் இன்று
மல்லிகை, ஞானம் வரை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் அன்றைய
ஈழத்துச்சிற்றிதழ்களின் போக்கு குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசரி, ஈழநாடு, சுதந்திரன், வீரகேசரி,
தினகரன், சிந்தாமணி முதலான பிரபல பத்திரிகைகள் இலக்கிப் பணி ஆற்றி
வந்தன, தொடர்ந்து சில ஆற்றியும் வருகின்றன. ஆனால் சிற்றிதழ்கள்
ஆக்கவிலக்கியத்துறைக்குக் காலத்திற்குக் காலம் ஆற்றிய பணி
அளவிடமுடியாதது. சிற்றிதழ்கள் என்பதற்கு எழுதா மறையாகச் சில இலக்கணங்கள்
உள்ளன. குறுகிய ஆயுளைக் கொண்டது. பண வளம், விடய வளம், அவற்றினைத்
தொடர்ந்து வழங்கும் ஆற்றல் உள்ள படைப்பாளிகள் இன்மையால் இடை வயதில்
செத்துவிடுகின்றது. ஒரு குறித்த நோக்கிற்காக ஆரம்பித்தல், ஒரு இலக்கியக்
குழவின் குரலை நிலை நிறுத்த ஆரம்பிக்கப்படுதல், ஒரு சில ஆரோக்கியமான
இலக்கியக் குரல்களை அடக்குவதற்காக அல்லது கொச்சைப் படுத்துவதற்காக
ஆரம்பித்தல், மலின இலக்கியமன்றி கனதியான இலக்கியத்தை மக்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்காக ஆரம்பித்தல், தாம் எழுதி வைத்திருக்கும்
விளங்காத படைப்புகளை, ஏனைய பத்திரிகைகள் மறுதளித்த எழுத்துக்களைப்
பிரசுரிப்பதற்காக ஆரம்பித்தல், இலக்கிய இசங்களைப் பற்றி எழுதி
எழுதுபவனையும் மழுங்கடிக்கச் செய்ய ஆரம்பித்தல் இவ்வாறு கூறிக்கொண்டே
போகலாம். ஆனால் ஈழத்தில் வெளிவந்த சிற்றிதழ்கள் கனதியான இலக்கியப்
பங்களிப்பினைச் செய்துள்ளன. ஈழத்தின் முதலாவது சிற்றிதழ் வரதரின்
மறுமலர்ச்சி ஆகும். அதன் இலக்கியப்பணி ஒரு சகாப்தமாகவே இன்றும்
கருதப்படுகின்றது. கலைச்செல்வி இன்னொரு கனதியான சிற்றிதழ்.
என்னைப்போன்ற படைப்பாளிகளை இனங்கண்டு உயர்த்திவிட்டது. அதன் பின்னராகவோ
முன்னராகவோ விவேகி, அமிர்தகங்கை, வசந்தம், சமர், அலை, ஆனந்தன், அல்லி,
பாரதி, எரிமலை முதலான பல ஏடுகள் வெளிவந்துள்ளன. குறுகிய காலப் பணியுடன்
தம் ஆயுளை நிறைவு செய்து கொண்டன. மல்லிகை ஒன்று தான்
40 வருடங்களையும்
கடந்து வெற்றி நடைபோடும் சிற்றிதழ். அதன் நீண்ட ஆயுள் சிற்றிதழ் என்ற
இலக்கணத்தைக் கடந்து விட்டது போலப்படுகின்றது. அதற்காக அதனை வியாபார ஏடு
என வகுத்துவிட முடியாது. ஞானம் இன்று ஈழத்தில் சிறப்பாக வெளிவரத்
தொடங்கியுள்ளது.
85 இதழ்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. கனதியான
இலக்கியத்தினதும் இளம் படைப்பாளிகளினதும் தளமாக அது விளங்குகின்றது.
இந்தக் கணணியுகத்தில் உலகெங்கும் சிற்றிதழ்களின் வருகை முதன்மை
பெற்றிருக்கின்றது. தமிழகத்தில் ஒன்றிரண்டு படைப்பாளிகள் சேர்ந்து தம்
கருத்துக்களை முன் வைக்கவும் எதிராளியின் கருத்துக்களை மறுதளிக்கவும்
சிற்றிதழ்களைத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் ஏராளமான
சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆக்க இலக்கியத்தோடு வசை
இலக்கியம் நன்கு வளர்ச்சி கண்டிருக்கின்றது.
22).
எழுத்தாளர் என்றவகையில் நீங்கள் படைப்பு
முயற்சியில் ஈடுபடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் மல்லிகை சிறுகதைகள்,
சுதந்திரன் சிறுகதைகள் என்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் அல்லது
குறிப்பிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளைத்
தொகுக்கும் பாரிய பணியையும் ஆற்றிவருகிறீர்கள். அந்தவகையில் உங்களுடைய
தொகுப்பு முயற்சிகள் பற்றி குறிப்பிடுங்கள்?
1930 இலிருந்து
1958 வரை வெளிவந்த ஈழகேசரியின் இலக்கியப்பங்களிப்பு
குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. 500 உக்கு மேற்பட்ட சிறுகதைகளில்
53 ஐ தொகுத்து ஈழகேசரிச் சிறுகதைகள் என்ற தொகுதி வெளிவந்தது. ஈழத்து
முன்னோடிச்சிறுகதைகள் என்னால் தொகுத்து வெளிவந்தது.
109 சிறுகதைகளின்
தொகுப்பாக சுதந்திரன் சிறுகதைகள் வெளிவந்தது. மல்லிகைச் சிறுகதைகள் என
இரண்டு தொகுப்புகள் என்னால் தொகுக்கப்பட்டு மல்லிகைப்பந்தல் வெளியிட்டது.
அதே போலச் சிங்களச்சிறுகதைகள் என்னால் தொகுக்கப்பட்டன. சம்பந்தன்
சிறுகதைகள், புதுமைலோலன் சிறுகதைகள், முனியப்பதாசன் சிறுகதைகள்,
தையிட்டி இராஜதுரையின் அகதி; அரிசி, தேவன் - யாழ்ப்பாணத்தின் சிறுகதைகள்,
சிரித்திரன் சுந்தரின் கார்ட்டூன் உலகில் நான் எனப் பல தொகுதிகள்.
ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த சிறுகதைகள்
799 சிறுகதைகளில்
124 சிறுகதைகள் நூலாக வெளிவந்தன. மறுமலர்ச்சி வெளிவந்த காலம் ஒரு பொற்காலம்
தான். இரண்டாண்டுகள் அந்த ஆரோக்கியமான இதழ்கள் வெளிவந்தன. மறுமலர்ச்சி
இதழ்களைப் பாராமலேயே விமர்சகர்கள் அவ்விதழ் குறித்தும் படைப்பாளிகள்
குறித்தும் பேசத் தொடங்கியிருந்தனர். ஆதலால் அவற்றிலுள்ள சிறுகதைகளைத்
தொகுத்து வெளியிட விரும்பினேன். அத்தொகுதி வெளிவந்த பின்னர் மறுமலர்ச்சி
பற்றிய சிந்தனை சற்று மாறுபட்டது.
நமது இலக்கிய இருப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு.
அதற்கான வாய்ப்பும் வசதிகளும் எனக்குள்ளன. மறுமலர்ச்சிச்சிறுகதைகளை
வெளியிட விரும்பியபோது, அவ்விதழ்களைச் சேகரித்து வைத்திருக்கும்
பண்டிதர் பஞ்சாட்சரசர்மாவின் மகன் கோப்பாய் சிவம் அந்த இதழ்களைத்
தந்துதவினார். இலங்கையில் அவரிடம் மட்டுமே மறுமலர்ச்சி இதழ்கள் உள்ளன.
அடுத்து என்னிடம் அவற்றின் போட்டோ ஸ்ரட் பிரதிகள் உள்ளன.
மறுமலர்ச்சியில் வெளிவந்த
52 சிறுகதைகளில்
25 தெரிந்தெடுத்து
இத்தொகுதியை வெளியிட்டேன். அக்கால கட்டத்தின் சிறுகதை இருப்பினை அறிய
இவை உதவின. கு.பெரியதம்பி என்ற சிறுகதைப்படைப்பாளியை இத்தொகுதி தான்
இனங்காட்டியது. மஹாகவி ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதையும்
இத்தொகுதி எடுத்துரைத்தது. மறுமலர்ச்சிக் கவிதைகளை பேராதனைப்
பல்கலைக்கழக விரிவுரையாளர் சுதர்சன் வெளியிட்டுள்ளார். மறுமலர்ச்சி
இதழ்களை அப்படியே மீண்டும் வெளியிட்டால் என்ன என்ற சிந்தனை கோப்பாய்
சிவத்திற்கு உதித்துள்ளது.
அதேபோல சுடர் என்றொரு சஞ்சிகை கோவை மகேசனால் வெளியிடப்பட்டது. ஈழத்தின்
இன்றைய முன்னணிப் படைப்பாளிகள் அதில் தான் எழுதியுள்ளனர். கோவை மகேசனின்
தம்பியாரிடமிருந்து அந்த இதழ்களைப் பெற்று முழுமையாக வாசித்து
வைத்துள்ளேன். ஒரு தொகுப்பு வெளியிட வேண்டும். எழுத்துப்பணிக்கு அப்பால்
ஈழத்தின் ஏனைய படைப்பாளிகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும்
செயற்பாடு அவசியமெனக் கருதுகின்றேன்.
23). ஈழத்து இலக்கிய
உலகில் புலம் பெயர் இலக்கியங்கள் குறித்து உங்களது கணிப்பு யாது?
ஈழத்து இலக்கிய உலகில் புலம் பெயர் இலக்கியங்கள் காத்திரமான பங்கினை
வகிக்கின்றன. ஈழத்தில் வாழ்வது பாதுகாப்பில்லையென்ற பயத்தினால் சிலரும்,
பொருள் தேடும் நோக்கினோடு சிலரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களில் ஈழத்தின் உன்னதமான எழுத்தாளர்களும் அடங்கினர். கனடாவிலும்
ஜேர்மனியிலும் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நோர்வேயிலும் அதே போன்று
வேறு நாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்த கையோடு அவர்கள் எழுதிய
ஆக்கங்கள், தமது மனக்காயங்களைப் படைப்புகளில் இறக்கி வைத்து வடிகால்
காணும் ஈழம்சார் படைப்புகளாக உயிர்த்துடிப்போடு விளங்கின.
புலம் பெயர் இலக்கியங்கள் இரு வகையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஆரம்ப
கால இலக்கியங்கள் ஈழம் பற்றிய புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் இருந்தன.
ஈழத்தில் தம் அனுபவங்களையும் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவை பேசின.
பின்னர் அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளரின் குறிப்புகளாக
இருந்தன. ஈழத்தின் துயரங்களை, இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில்
வாழாமல் பதிவு செய்ய முடியாது. இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான்
கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின்
தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ்
நாட்டின் அப்ளாஸைப் பெறப்போகிறீர்கள்? அவை ஈழத்துத் தமிழ்
இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள். இது எஸ்.பொன்னுத்துரை,
வி.கந்தவனம், குறமகள், அரவிந்தன், ஷோபா சக்தி, ஜெயபாலன், சேரன், ஆழியாள்
முதலான புலம்பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
ஈழத்து எழுத்துக்கள் புலம் பெயர் படைப்பாளிகளின் சர்வதேசத்தளத்திற்கும்,
இடப்பெயர்வில் எதிர்கொண்ட பலதரப்பட்ட அனுபவத் துயரங்களுக்கும்,
அவர்களின் மனக்காயங்களின் பாசாங்கற்ற மொழிக்கும் ஈடு கொடுக்க முடியாதவை
தான். ஈழத்து எழுத்துக்கள் கால பயத்துக்கு உட்பட்டவை. அவற்றில் ஈழத்துச்
சமூக வாழ்வின் அவலங்கள் சித்திரிக்கப்பட்டாலும் களத்தின் உண்மை
நிலமைகளைப் பூரணமாகப் பேசத்தயங்குகின்றன. ஆனால் புலம் பெயர்
படைப்பாளிகளுக்கு பூரணமான எழுத்துச் சுதந்திரம் இருக்கின்றது.
உயிருக்குப் பயந்து இந்த மண்ணைவிட்டு அகன்றாலும் உயிர் வாழ்தலுக்கான
உத்தரவாதம் அந்நாடுகளில் இருக்கின்றது. எதையும் எப்படியும் அவர்களால்
எழுதிவிட முடிகின்றது. ஈழத்து எழுத்தாளனின் கரங்கள் கண்ணுக்குத்
தெரியாத தளையினால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறான தளையை
ஈழத்துப்படைப்பாளி தனக்குத் தானே இட்டுக் கொண்டுள்ளான்.
ஈழத்தில் பிறந்து எழுத்தாளர்களாக மாறியவர்கள்; பலர் ஏதோ தாங்கள்
ஈழத்தில் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பேட்டிகளிலும்
மற்றும் உரையாடல்களிலும் பொய் கூறி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும்
ஏமாற்றி வருகின்றனர். தமது வெளிநாட்டு இருப்புக்கு இவ்வாறான காரணத்தைத்
தாமாகக் கற்பித்து திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்கள் இலங்கையில்
தமது தலைகளுக்கு மேல் கத்திகள் ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கற்பித்துக்
கொண்டுள்ளார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடியது பொருளாதாரக்
காரணங்களுக்காகத்தான். இலக்கியப்படைப்பாளிகள் அல்லாதோரிலும்
50 சதவீதமானோர் பொருள் தேடி வெளிநாடுகளுக்கு ஓடி அதற்குக் காரணமாக ஈழத்தின்
அவலத்தைக் காரணமாக் காட்டிவர்கள் தாம். யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்புக்கு ஓடிய டொமினிக் ஜீவாவும் இக்காரணங்களைத் தான் கூறுகிறார்.
ஈழம் யுத்த பூமி தான். வாழ முடியாத நாடு அல்ல. இது மரணங்கள் மலிந்த பூமி
தான். ஆனால் இது நாம் பிறந்து திரிந்து வாழ்ந்த மண். இந்த மண்ணின்
காற்றைச் சுவாசிப்பதிலும் கிணற்று நீரை அள்ளிக் குடிப்பதிலும்
இருக்கின்ற ஆனந்தம் வேறெங்குமில்லை. எங்கள் அவலங்களை உங்கள்
இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்.
புலம் பெயர் படைப்பாளிகளில் புனைகதைத்துறையில் சோபாசக்தி கவனத்தைக்
கவர்ந்த படைப்பாளியாகவுள்ளார். அவர் மனம் ஈழத்தில் கண்டுள்ள
கடுங்காயங்கள் அவரின் படைப்புக்களின் ஆத்மாவாகவுள்ளன. சாதிய
அடக்குமுறைகளையும், அகதி வாழ்வின் மனநிலைப்புலம்பல்களையும், போர்,
புகலிடம், தேசியவாதம் என்பனவற்றை விமர்சிக்கும் படைப்புகளாகவுள்ளன. அவர்
புனைகதைகளில் பயன்படுத்தும் மொழி பாசாங்கற்ற மொழியாகும். தேடிப் பெற்ற
வார்த்தைகள் அல்ல. தாமாக விழுந்த வார்த்தைகள். இவற்றினால் பலரின்
கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக தமது புனைகதைகளிலும்,
வார்த்தைகளிலும் சமூகத்தின் ஒரு பகுதியினரை கே. டானியல் போலத் தூக்கி
வீசுவது படைப்பாளியின் சமநிலைத் தளும்பலாகப் படுகின்றது. 'உலகத் தமிழ்
இலக்கியத்துக்கு ஈழத்தவர்கள் தலைமை தாங்குவார்கள்' என்ற பேராசிரியர்
கா. சிவத்தம்பியின் கூற்று ஏற்றதாக மாறலாம். ஏனெனில் ஈழத்துப்
படைப்பாளிகள் சவால்களுக்கிடையில் வாழ்கின்றனர்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற புதிய படைப்பாளிகளில்; பலர் இன்று
தாம் வாழ்கின்ற நாட்டில் தாம் அனுபவிக்கும் துயரங்களை
எழுதிவருகின்றார்கள். முழுமையாகப் புலம் பெயர் எழுத்துக்களைப்
படிக்கின்ற வாய்ப்பு ஈழத்தவர்களுக்கு இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டே
ஆகவேண்டும். ஆனால் படிக்கக்கிடைத்த படைப்புக்கள் எங்களுக்குப்
பரிச்சயமில்லாத களமாகவுள்ளன. அதனால் அவை நெஞ்சைப் பிடித்துக்
கொள்கின்றன. அதே வேளை அவை கனேடிய தமிழ் இலக்கியமாகவும், ஜேர்மனிய தமிழ்
இலக்கியமாகவும், பிரான்சிய தமிழ் இலக்கியமாகவும் அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கியமாகவும் உள்ளன. புலம் பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற
பரம்பரையுடன் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வருவது அந்தந்த
நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக
அமையும். அவர்கள் தமிழில் எழுதப்போவதில்லை.
24). உங்களுடைய
புதிய இலக்கிய முயற்சிகள் எப்படியிருக்கிறது?
நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவன். திட்டமிட்டவாறு இலக்கியம்
படைக்க முடியாது. அது காலச் சூழலைப் பொறுத்தது. எனினும் கைவசம் மனதில்
சில எழுத்துத்திட்டங்களுள்ளன. ஈழத்துச்சிறுகதை வரலாறு எழுதியது போல
ஈழத்து நாவல் வரலாறும் எழுதவேண்டும். அதன் பின்னர் ஈழத்தின் புனைகதை
வளர்ச்சி கணிக்கப்பட்டு எழுதப்படவேண்டும். சமகால ஈழத்தின் நிலையை
நாவலாக எழுத வேண்டும். ஈழத்துப் புனைகதைப் படைப்பாளிகள் தொடரை
மல்லிகையில் எழுதி முடிக்க வேண்டும். அன்புக்குரிய நண்பர் டொமினிக் ஜீவா
எனக்கு ஒரு கட்டளையிட்டுள்ளார். எனது சுயவரலாற்றைச் சுவைபட
எழுதவேண்டுமென்று. இவை இலக்கியப்புலம் சார்ந்தவை. கல்விப்புலத்தில்
நிறைவேற்றவேண்டிய எழுத்துப்பணிகள் சிலவுள்ளன. இந்த நோக்கங்களின்
நிறைவேற்றம் என் கையிலி;ல்லை என்பதும் எனக்குத் தெரியும்.
25). கடந்த ஆண்டு
சாஹித்ய இரத்தினம் விருது பெற்றமை பற்றி...?
இலக்கியத்துக்குக் கிடைத்த வாழ்நாள் விருது. ஒருவருக்குத் தான் ஒரு
வருடம் கிடைக்கும். 2009 எனக்குத் தரப்பட்டது. விருதும் பெறுமதி
வாய்ந்த பணப் பரிசிலும் தரப்படடன. மகிழ்வாக இருந்தது.
26). ஈழத்தில் குறிப்பாக
யாழ்ப்பாணத்தில் இலக்கிய கூட்டங்கள் மற்றும் இலக்கிய நிகழ்வுகள்
எப்படியிருக்கிறது?
ஈழத்தின் சமூக அரசியல் முரண்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் நம்பகமற்ற
சூழல் படைப்பாளிகளையும் கலைஞர்களையும் இலக்கிய நிகழ்வுகள் நடாத்தத்
தயக்கத்தைத் தந்துள்ளன. முன்னர் யாழ்ப்பாணத்தில் மல்லிகை டொமினிக் ஜீவா
அடிக்கடி ஏதாவது இலக்கியச் சந்திப்புகளை நடாத்துவார். முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகள் போன்றிருக்கும். ஜீவாவின் கொழும்புப்
பெயர்வோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் காணாமல் போய்விட்டது. யாழ்
இலக்கியவட்டம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் முக்கிய
பிரமுகர்களான வரதர், செம்பியன்செல்வன், சொக்கன், புத்தொளி சிவபாதம்,
தில்லைச்சிவன் ஆகியோரின் இழப்புக்களால் ஓரளவு தன் செயற்பாட்டில்
குன்றிப்போயுள்ளது. தனித்து அதன் தலைவர் செங்கை ஆழியானால் எவ்வளவு காலம்
தான் தாக்குப்பிடிப்பது? யாழ் இலக்கியவட்டத்திற்குப் புது இரத்தம்
பாய்ச்ச வேண்டியுள்ளது. யாழ் இலக்கியவட்டத்தின் அங்கமான இலங்கை
இலக்கியப்பேரவையின் பரிசளிப்பு விழா நடாத்தப்படவேண்டியுள்ளது. கனகசெந்தி
கதாவிருது வழங்கவேண்டியுள்ளது. இவ்வாண்டு சம்பந்தன் விருதுக்கான தெரிவு
நடந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் சமூகவியலாளர் அ.பொ.செல்லையா
நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கட்டுரையியல் நூல் ஒன்றிற்கு விருது
வழங்க அவர் மகன் செந்தில் முன்வந்தள்ளார். அதேபோல மூத்தஎழுத்தாளர்
நாவேந்தன் நினைவாக சிறந்த சிறுகதை நூலிற்கு நாவேந்தன் விருது வழங்க
அவரது ககோதரர்கள்; முன்வந்துள்ளனர். தெல்லிப்பளை கலை இலக்கியவட்டம்
அடிக்கடி கூட்டங்கள் நடாத்தியது. கோகிலா மகேந்திரனின் அவுஸ்திரேலிய
புலம் பெயர் நோக்குடனான கொழும்பு இருக்கை தெல்லிப்பளை கலை இலக்கிய
வட்டத்தை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. எனினும் அண்மையில் இலக்கிய
நிகழ்வுகள் சில அரங்கேறியுள்ளன.
27). அண்மைக்காலமாக தமிழகத்தில்
குறிப்பிட்ட சில படைப்பாளிகளின் முழுப்படைப்புக்களும் ஒரு தொகுப்பாக
வெளியிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக சொல்வதானால் ஜெயகாந்தன்
சிறுகதைகள், ஜெயகாந்தன் குறுநாவல்கள், அதேபோல கு.அழகிரிசாமி, இந்துமதி,
வாசந்தி, திலகவதி, சுஜாதா போன்றவர்களின் படைப்புக்கள் முழுத்
தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. நீங்களும் அவ்வாறானதொரு முழுத்தொகுப்பை
வெளியிடலாமே?
எழுத்தாளர்கள் தமது படைப்புக்களைப் பெருந்தொகுப்புகளாக வெளியிட அச்சு
வசதிகளும் பதி;ப்பக வசதிகளும் தமிழகத்தில் இன்றுள்ளன. ஈழத்தின்
மூத்தபடைப்பாளி கே.டானியல் படைப்புகள் தமிழகத்தில் 1132
பக்கங்கள் கொண்டதாக வெளிவந்தள்ளது. மறைந்த படைப்பாளி டானியலின் ஆறு
நாவல்கள் இதிலுள்ளன. அதே போல மூத்தபடைப்பாளி மு.தளையசிங்கத்தின்
படைப்புகள் ஒரே தொகுப்பாக வெளிவந்தள்ளது. தளையசிங்கத்தின் சிறுகதைகள்,
குறுநாவல், நாவல், ஏழாண்டு இலக்கியம் போன்ற கட்டுரை, அவருடைய அரிய
மெய்ஞானக்கட்டுரைகள் அனைத்தும் இதில் உள்ளன. தளையசிங்கத்தின் முழுமையான
படைப்புக்கள் இதில் அடங்குகின்றன. ஈழத்தின் புகழ் மிக்க படைப்பாளி எஸ்.
பொன்னுத்துரையின் சிறுகதைகள் பலவும் எஸ்.பொ. கதைகள் என்ற பெயரில்
பெருந்தொகுப்பாக 867 பக்கங்களில்
வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழகப் பதிப்புகள். ஈழத்தில்
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.
50 சிறுகதைகள் இத்தொகுப்பிலுள்ளன.
அதேபோல தி.ஞானசேகரன் சிறுகதைகள் பலவும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.
250 ரூபா உற்பத்தி விலை கொண்ட
அந்நூலை 100 ரூபா அடக்கவிலையில்
விற் பனைக்குவிட்டிருப்பது வியப்பிற்குரியது. நான் எனது மூன்று
குறுநாவல்கள், பத்துக்குட்டிக்கதைகள், பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய
தொகுப்பு ஒன்றை 1978 இல்
செங்கைஆழியான் கதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டேன்;. 1992
இல் எனது ஆறு நாவல்களைச் செங்கைஆழியான் நாவல்கள் என்ற தொகுப்பாக
வெளியிட்டிருக்கிறேன்.
இவ்வாறான முயற்சிகள் நடந்துள்ள போதிலும் ஒரு படைப்பாளியின் படைப்புகள்
பெருந்தொகுதியாக வெளிவரும்போது அப்படைப்பாளி ஜெயகாந்தன் மாதிரி
எழுத்துலகிலிருந்து ஒதுங்கியவராக அல்லது அழகிரிசாமி போன்று அமரரானவராக
இருக்க வேண்டும். தொடர்ந்து எழுதுகின்ற நிலையில் அவ்வாறான தொகுப்புகள்
எவ்வளவு தூரம் படைப்பாளியை முழுமையாக அறிய வைக்கும் எனக் கூறமுடியாது.
இவ்வாறான பாரிய தொகுப்புகளை முழுமையாக வாசிக்கும் பொறுமை இன்றைய
வாசகர்களுக்கு இருக்கப் போவதில்லை. நூலகங்களை அலங்கரிப்பனவாக
விளங்குகின்றன. எனினும் ஈழத்தில் அமரர்களான வரதர், நந்தி, சொக்கன்,
செம்பியன்செல்வன் ஆகியோரின் படைப்புகளை முழுமையான தொகுப்புகளாக வெளியிட
அவர்களின் தரமான படைப்புகள் இருக்கின்றன. உதாரணமாக வரதரின் தரமான 20
சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், காவோலையில் பசுமை என்ற நாவல்,
புதுக்கவிதைகள், யாழ்ப்பாணத்தார் கண்ணீர் என்ற காவியம், பசுமைநினைவுகள்
என்ற கட்டுரைகள் அனைத்தையும் வரதரின் படைப்புகளாக வெளியிடலாம்.
முழுமையான படைப்புகளை வெளியிடும்போது அவர்களின் ஆரம்ப எழுத்துக்களைத்
தரம் பாராது வெளியிட்டு அவர்களின் பிற்காலப் பண்பட்ட எழுத்துக்களைக்
குறைவாக மதிப்பிட வைக்கக்கூடாது. அத்தோடு பெருந்தொகுதி
வெளியிடக்கூடியளவிற்கு நம்மவர்களிடம் படைப்புகள் இல்லை.
28). இலங்கையில் தமிழ்
கிடையாது. தமிழ்கள் தான் உண்டு' என்று அண்மையில் ;பெருவெளி' சஞ்சிகையின்
நேர்காணலில் தமிழக அ. மார்க்ஸ் திருவாய் மொழிந்திருக்கிறாரே? இது பற்றி
நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அவர் கருத்து அர்த்தமில்லாத வழமையான கருத்துத் தான். டானியலையும், சோபா
சக்தியையும், சிவத்தம்பியையும், கைலாசபதியையும் மட்டும் படித்துவிட்டுக்
கூறியுள்ளார். அவர் என்ன கூறுகிறார் என்பது புரியவில்லை.
நுணுகிப்பார்க்கில் ஈழத்து இலக்கியம் என்று ஒன்று இல்லையாம். ஈழத்துத்
தமிழ் இலக்கியங்கள் என்றுள்ளனவாம். மலையக இலக்கியம், தீவக இலக்கியம்
எனத்தமிழ் வேறுபடுகின்றதாம். மேலும் இலங்கை எழுத்துக்களில், (டானியலைப்படித்துவிட்டு),
சிந்தனையாளர்களிடமும் எழுத்தாளர்களிடமும் சைவக்கருத்தியல்புகள்
மிகுந்திருப்பதாகக் கூறியுள்ளார். இலங்கை எழுத்தாளர்களையும்
எழுத்துக்களையும் மட்டமாகக் கருதுகின்ற மனப்பான்மை தமிழக
எழுத்தாளர்களிடம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. என்றோ ஏற்பட்டுவிட்டது.
யாரோ ஒரு பைத்தியக்காரன், இந்தியாவைத் தாய் நாடு என்றும் இலங்கையைச்
சேய்நாடென்றும் கூறிவைத்தான். அதனால் வந்த இழக்காரம். தமிழக
எழுத்தாளர்களை அழைத்து, அவர்களது இலக்கியத்தரம் அறியாமல், இந்திரர்கள்
என்றும் சந்திரரர்கள் என்றும் வார்த்தைகளால் புகழ்ந்தேற்றி பாதபூசை
செய்ததால் வந்த வினை. ஈழத்திலக்கியம் பற்றி அடிக்கடி திருவாய் மலர்ந்து
விடுகிறார்கள். 1967 களில் கங்கை என்ற பத்திரிகையின் ஆசிரியராக
விளங்கிய பகீரதன் என்பவர் இலங்கைக்கு வந்தார். வரதரின் சிறுகதைத்
தொகுதியான கயமை மயக்கம், நாவற்குழியூர் நடராஜன் கவிதைத்தொகுதியான
சிலம்பொலி ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். பகீரதன்
வெளியீட்டுவிழாவில் 'இலங்கை எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுச் சிறுகதை
எழுத்தாளர்களைவிடப் பத்து வருடம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள்.
ஈழத்து எழுத்தாளர்கள் வளர்ந்து வரும் மேல் நாட்டு இலக்கியங்களைப்
படிக்க வேண்டும். சிறுகதை எழுதும் உத்தி முறைகளைத் தெரிந்து கொள்ள
வேண்டும் என்று உபதேசித்தார். 1962
இல் இலங்கைக்கு வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் ஈழத்துச்
சிறுகதைகளுக்கு அடிக்குறிப்புகள் தேவை. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்
தமிழைப் புரிந்து கொண்டு சிறுகதையைப் படிக்க அடிக்குறிப்புகள்
இடப்படவேண்டும்' என்று கூறிச்சென்றார். 'ஈழத்திலக்கியங்களுக்கு அகராதி
வேண்டும். இலங்கை இலக்கியத்தை இங்கு எல்லாரும் புரிந்து கொள்ள இலங்கைப்
பேச்சு வழக்கிலுள்ள சில சொற்கள் இடையூறாகவிருக்கின்றன. சிறு அகராதி
தயாரித்து வெளியிடலாம்' எனத் தமிழக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்துத்
தெரிவித்தார். 'இது தமிழ் இலக்கியமே அல்ல. மொழி தமிழ் என்பதற்காக
இத்தோடு கலக்கத் தேவையில்லை. வெறும் ஈழ இலக்கியம் என்றே கூறிவிடலாம்.
ஈழ இலக்கியம் அங்கீகாரம் பெற ஒரு இருபது வருடம் போக வேண்டும்' என
விக்கிரமாதித்தன் என்ற தமிழ் நாட்டுக் கவிஞர் வாய் மொழிந்தார். 'ஈழத்து
இலக்கியம் கடந்த இருபது வருடங்களாக அரசியல் தன்மைபெற்றுத்
திரிந்துவிட்டது. இலக்கியம் இலக்கியமாக இருக்க வேண்டும். இலக்கியத்தில்
அரசியலைத்தேடுவதும், அரசியலில் இலக்கியத்தைத் தேடுவதும் அபத்தமானது.
இலக்கியம் என்ற போர்வையில் அரசியல் கோஷங்களையும்
துண்டுப்பிரசுரங்களையும் கதை மாதிரியும் கவிதை மாதிரியும் எழுதிப்...பண்ணி
ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.' என வண்ணநிலவன் எடுத்துரைத்தார். 'நாவலரா
அவர் யார்? எங்களுக்கு தமிழக நாவலர் நெடுஞ்செழியனைத் தான்
தெரியும்'என்றார் மணியன். ஆகவே அ. மார்க்ஸின் கருத்துக்கு நாம் அலட்டிக்
கொள்ளத் தேவையில்லை. அவர் நமது படைப்பாளி டானியலின் எழுத்துக்களைத்
தமிழகத்தில் நன்கு அறிய வைத்தவர் என்பதை நன்றியாக நினைவு கூரலாம்.
29). உங்கள் சகோதரன்
புதுமைலோலன் பற்றி உங்கள் நினைவலைகளில் இருந்து.....
என் மூத்த அண்ணர் புதுமைலோலன் ஒரு தீவிர வாசகர். எழுத்துப்
பயிற்சியுடையவர். என் வீடு ஒரு புத்தகசாலையாக விளங்கியது. இலக்கிய
நூல்கள், அக்கால வார மாதாந்தப் பத்திரிகைகள் அனைத்தும் வீட்டை நிரப்பின.
அவர் அக்காலத்தில் வெளிவந்த ஈழகேசரி, சுதந்திரன் பத்திரிகைகளில்;
நிறையச் சிறுகதைகள் எழுதிவந்தார். தமிழகப் பத்திரிகைகளான காதல், மஞ்சரி,
பிரசண்டவிகடன், உமா போன்றவற்றிலும் எழுதினார். அவருடைய வாசிப்பு ரசனை
என்னைக்கவர்ந்தது. திராவிடக் கழகச் சஞ்சிகைகள் வீட்டை நிறைத்தன.
அவருடைய எழுத்தாற்றல் என்னைக் கவர்ந்தது. இயல்பாகவே அவராக விரும்பினேன்.
அக்கால கட்டத்தில் வெளிவந்த அனைத்துச்சிறுவர் பத்திரிகைளையும் பணம்
கொடுத்து வாங்கிப் படித்தேன். சேகரிக்கவும் தொடங்கினேன்.
என் அண்ணன் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். அழகானவர். கம்பீரமனவர். சிறந்த
பேச்சாளர். ஆரம்பத்தில் மு.கார்த்திகேசன், வைத்திலிங்கம் ஆகியோரின்
இடதுசாரி அணியில் இருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்
அங்கதத்தவராக இருந்தார். யாழ்ப்பாண மாநகரசபை அங்கத்தவராக நின்ற
கார்த்திகேசனின் பொதுக்கூட்டங்களில் வேட்பாளரான அவரை ஆதரித்து பேசினார்.
அதன் பின்னர் அவரது கவனம் திசை திரும்பியது. தமிழரசுக்கட்சி ஆரம்பமான
கால கட்டம் அது. இடதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடித்தவர்களில் தவறுகள்
கண்டார். தமிழரசுக்கட்சியில் இணைந்து கொண்டார். பேச்சாளப் பீரங்கியாக
வலம் வந்தார். புதுமைலோலனின் பேச்சினைக் கேட்பதற்காகவே ஒரு கூட்டம்
உருவாகியது. அமிர்தலிங்கத்தின் வலக்கரமானார்.
அக்கால கட்டத்தில் புதுமைலோலன், நாவேந்தன், கரிகாலன், மைசூர் மௌலானா,
ஆலாலசுந்தரம், காசி ஆனந்தன் ஆகியோர் தமிழரசுக்கடசியின் புகழப்பட்ட
மேடைப் பேச்சாளர்களாக இருந்தனர். தொண்டர்கள் தொண்டர்களாகத்
தொடர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் தமிழரசுக்கட்சியில் இருந்தது.
கறுப்புக்கோட்டு அணியாதவர்கள் புறம் தள்ளப்பட்டனர். தூக்கி
எறியப்பட்டனர். அது நிகழ்ந்தபோது விலகிவிட்டார்.
காலையில் படுக்கையைவிட்டு எழுந்து செல்கின்ற அண்ணர் என்ன நேரம் திரும்பி
வருவார் என்றில்லை. ஆரம்பத்தில் அம்மா அண்ணரின் வருகைக்காக
காத்திருந்தார். பின்னர் அண்ணருக்கு வாழ்க்கைப்பட்ட அண்ணி இரவில் கண்
விழித்துக் காத்திருந்தார். ஆரம்பத்தில் சைக்கிளில் சென்றவர் பின்னர்
கார் உரிமையாளரானார். அதன் பின்னரும் கட்சிக் கூட்டம் என்று அவற்றை
முடித்துவர நடுச்சாமமாகியது. எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவரை
நேரத்தோடு வீட்டில் கண்டதாக நினைவில்லை.
அண்ணரின் குடும்பம் பெரியது. நான்கு ஆண்மக்களையும் மூன்று
பெண்பிள்ளைகளையும் கொண்டது. இவர்களில் ஒரு ஆண்மகன் இந்திய
இராணுவத்தினரின் அராஜகத்துக்குப் பலியானார். ஏனைய பிள்ளைகள் அனைவரும்
உலகின் திசை எங்ஙனும் சென்றுவிட்டார்கள். இன்று அண்ணரும் அண்ணியும்
யாழ்ப்பாணத்தில் தனித்துவிடப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு ஓடிச்செல்ல
அண்ணருக்குச் சிறிதும் விருப்பமில்லை. பிறந்த மண்ணைவிட்டுச்
செல்லவிரும்பாமை காரணம்.
அண்ணருடைய எழுத்து என்னையும் தொற்றிக் கொண்டது. என்னுடைய எழுத்துப்
பயிற்சிக்கு அவர் காலானார். ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் 1950 –
1963 காலகட்டத்தில் புதுமைலோலன்
சிறுகதைகள் கணிப்பீட்டுக்குரியவை. அக்காலகட்டத்தில் வீறு கொண்ட இளைஞர்
கூட்டமொன்று சிறுகதைத்துறையில பிரவேசித்தது. ஈழகேசரி இராஜ
அரியரெத்தினமும் சுதந்திரன் எல் டி. சிவநாயகமும் இவரது கதைகளை விரும்பி
வெளியிட்டு இந்தச் சிறுகதை எழுத்தாளனின் உருவாக்கத்திற்குக் காரணமாயினர்.
தொடர்ந்து புதுமைலோலனின் சிறுகதை ஆனந்தன், புதினம், ஐக்கியதீபம், விவேகி
முதலான பத்திரிகைகளில் வெளியாகின. இவர் யாழ்ப்பாணம் நாவலர் ஆரம்பப்
பாடசாலையிலும் நாவலர் வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். பலாலி
ஆசிரியகலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று பத்தொன்பதாம் வயதில்
ஆசிரியராக வெளிவந்தார். கிற்கிராங்கொடை, வெலிகந்த, யாழ்ப்பாணம்
பாடசாலைகளில் ஆசிரியராகக் கட்மையாற்றி ஆனைக்கோட்டை தமிழ்க் கலவன்
பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
அவர் தனது ஆசிரியப் பணியோடு அன்பு வெளியீடு என்ற பெயரில் பாடநூல்கள்
வெளியிடுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டார். அப்பெயரில் ஒரு புத்தகசாலையும்
வைத்திருந்தார். பிரபல எழுத்தாளர் அகஸ்தியரின் குறுநாவல் தொகுதி
ஒன்றினையும் 'காணிவல் காதல்' என்ற தொகுதி ஒன்றினையும் பல ஐந்தாமாண்டுப்
பாட நூல்களையும் வெளியிட்டார். கச்சேரி சத்தியாக்கிரகத்தில் பங்கு பற்றி
அதனைத் தொடர்ந்து நடாத்தியமைக்காகக் கைதாகி சிறையிலிருந்த அனுபவத்தினை
'அன்பு மகள் அன்பரசிக்கு' என்றொரு நூலாக எழுதினார். அவருடைய சிறுகதைகள்
தொகுக்கப்பட்டு அண்மையில் 'புதுமைலோலன் கதைகள்' என்ற பெயரில்
வெளிவந்துள்;ளன
சிறுவயதிலிருந்தே நிறைய வாசிக்கும் பழக்கம் இவரிடமிருந்தது. பெரியாரின்
பகுத்தறிவுக் கொள்கை இவரை ஆக்கிரமித்திருந்தது. கடவுளின் பெயரால்
நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத செயற்பாடுகளையும்
இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டித்தார். புதுமைலோலனின் முதலாவது சிறுகதை
1952 இல் சுதந்திரனில் வெளிவந்தது. புதுமைலோலனின் முதல்; சிறுகதையைத்
தொடர்ந்து பிச்சைக்காரி, சிந்தனை அவதாரம், புகைந்த உள்ளம், அப்பே லங்கா,
அழகு மயக்கம் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். அண்ணரின் சிறுகதைகளின்
இலக்கு வெகு தெளிவானது. சமூகத்தில் தான் கண்டு கேட்டு அனுபவித்தவற்றை
தான் உணர்ந்தவாறு சமூகத்திற்கு எடுத்துக் கூறிவிடல், சமூக விமர்சனத்தின்
மூலம் சமூகத்தின் இழிநிலைகளைச் சுட்டிக்காட்டுதல் என்பனவாம் கருத்தினைப்
பிரசாரம் செய்வது அவரின் நோக்கமல்ல. சிறுகதைகளின் வடிவம் அவருக்கு நன்கு
கைவந்திருந்தது. எளிமையான நடை அவரின் சிறுகதைகளில் காணப்படும். அவரின்
சிறுகதைகளில் ரொமாண்டிசப் பண்பு தூக்கலாக இருக்கும். அதனைவிட
தமிழ்த்தேசியம் பற்றிய சிந்தனைகள் கொண்டனவாக அவரின் பல சிறுகதைகள்
அமைந்தன. அதனால் மார்க்சிய முற்போக்குவாதிகள் அவரை இனவாதக் கதையாளி என
ஒதுக்கிவிட்டன. அவரின் கதைகள் பல கௌதமபுத்தரோடு சம்பந்தப்பட்ட ஒழுக்க
விசாரமாக இருக்கின்றன. அண்ணரின் எழுத்துக்களால் ஆரம்பத்தில் நான்
கவரப்பட்டேன்.
30). சாதியம் சார்ந்த
படைப்புகள் ஈழத்திலக்கியத்தில் முக்கியமானவை. அவைபற்றி சுருக்கமாகக்
கூறுங்கள்?
1850 தொட்டு 1973
வரை வெளிவந்த நாவல்களில் பெரும்பாலானவை சமூகப்பிரச்சினைகளைத் தம்
கருத்தியல்பாகக் கொண்டன. பேராசிரியர் கா.சிவததம்பி சொல்வது போல இவை
தத்துவார்த்தநிலையில் நெறிப்படுத்தப்பட்ட இலக்கியமாக அமைந்தன. சாதிய
ஏற்றத்தாழ்வு, வர்க்கவேறுபாடு, சீதனக் கொடுமை, வறுமை என்பன நாவல்களின்
கருப்பொருளாகின. இவை கதைவளம் மிக்கனவாயும் கலையழகு குன்றியனவாவும்
பொதுவாக அமைந்தன. தத்துவார்த்தரீதியில் நெறிப்படுத்தப்பட்ட நாவல்களின்
வருகையை இளங்கீரன் தொடக்கி வைத்தார். இளங்கீரனின் வருகையோடு ஈழத்துத்
தமிழ் நாவல் மனை கலையழகு பெறத்தொடங்கியது. 1950 களில் இளங்கீரன்
நாவலிலக்கியத்தில் காலடி வைத்தார். அவரால் இந்த மண்ணையும் மக்களையும்
களமாகக் கொண்டு நாவல்களை ஆக்க முடிந்தது. அவர் பதினைந்துக்கும்
மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளபோதிலும் அவரது தென்றலும் புயலும், நீதியே
நீ கேள் ஆகிய இரண்டும் அவருக்கு மட்டுமன்றி, ஈழத்து நாவல் துறைக்கும்
வலுச்சேர்த்தன. முதல் குறித்த நாவலில் சாதியத்தையும் இரண்டாவது நாவலில்
வர்க்கியத்தையும் இடம் பெறவைத்தார். பிற்காலத்தில் செ.கணேசலிங்கன்,
கே.டானியல் ஆகியோரின் நாவல்களில் வர்க்கியமும் சாதியமும் வீறுடன்
அவர்களது நாவல் இலக்கியக் கருப்பொருளாக அமைந்தமைக்கு இளங்கீரனின்
நாவல்கள் முன்னோடிகளாகின. இளங்கீரனின் நாவல்களை மிகைப்படுத்தி
பேராசிரியர் கைலாசபதி இலக்கிய உலகில் உயர்த்தி வைத்தார்.
சாதியத்தின்; அடக்கு முறைகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும்
நாவல்களில் பொருளாகக் கொண்டவர்களில் சொக்கன் (1963), செ.கணேசலிங்கன்
(1965), செங்கைஆழியான்
(1971) கே.டானியல் (1972),
தெணியான் (1973), செ.யோகநாதன்
(1976), சோமகாந்தன்ட
(1989) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
காலவரன் முறையில் நாவலிலக்கியத்தின் நவீனவடிவத்தில் சாதியப்பிரச்சினையை
கருவாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் விவேகியில் தொடராக வெளிவந்த
சொக்கனின் 'சீதா'வாகும். உயர்சாதியாளரான செல்வரெத்தினம் தனது சாதியிலும்
தாழ்வாகக் கருதப்படும் பெண் ஒருத்தியை புரட்சி மனப்பான்மையோடு திருமணம்
செய்துகொள்கிறார். பின்னர் அவரால் அவளோடு சகயமாக வாழ முடியவில்லை.
இவருடைய மகள் சீதாவைப் பிராணப்பையன் ஆத்மநாதன் நேசிக்கிறான். சமூகத்தை
எதிர்த்து அவனால் அவளைக் கரம் பற்ற முடியவில்லை. இதனால் தான்
பிரமச்சாரிணியாக இருந்து விடுவது மேல் என சீதா முடிவு செய்கிறாள். இந்த
நாவல் மூலம் சொக்கன் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
பாரம்பரியமாகச் சமூகத்தினைக் கட்டிவைத்திருக்கிற சாதியத் தளைகளை
அறுக்கின்ற அல்லது குறைந்தது தளர்த்துகின்ற முயற்சியைக் கூட அவரால்
செய்யமுடியவில்லை. அவரையடுத்து செ.கணேசலிங்கன் சாதியத்தின் எரியும்
பிரச்சினைகளை நீ;ண்டபயணம், போர்க்கோலம், செவ்வானம் முதலான நாவல்களில்
காட்டியுள்ளார். சாதியத்துக்கு மிக்க அழுத்தம் கொடுத்து பல நாவல்களைப்
படைத்துத் தந்தவர் டானியலாவார். கணேசலிங்கனும் டானியலும் மார்க்சியக்
கருத்துக்களுக்கு தம் நாவல்களில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு
சாதியத்தின் அழிவுக்கும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களினது விடிவுக்கும்
சமூகப்புரட்சி ஒன்றின் மூலமே விடைகாணலாமென நம்பினர். இவர்களது
நாவல்களில் யாழ்ப்பாண சமூகத்தின் சாதிப்பிரச்சினைக் களங்கள் பொதுவாக
ஒத்த பண்பினடியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோயில்கள், பொதுக்கிணறுகள்,
பொதுவிடங்கள், பாடசாலைகள், தொழில் தாபனங்கள் என்பனவற்றில் பஞ்சமர்கள்
அனுபவிக்கின்ற ஏற்றத்தாழ்வுகளையும், அவமானங்களையும், மனக்காயங்களையும்,
சமூக அநீதிகளையும் இருவரும் தமது நாவல்களில் காட்டியுள்ளனர்.
கணேசலிங்கன் தனது நாவல்களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்திற மக்களை
ஆக்கவிலக்கிய கர்த்தாவின் சமநிலை தளும்பாநிலையில் சித்திரிக்க, டானியல்
பஞ்சமர்களுக்கெதிராகத் தொழிற்பட்ட பாத்திரங்களை மட்டுமன்றி,
அப்பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட சமூகம் முழுவதையும் காறி உமிழ்கிறார்.
இங்கு ஆக்கவிலக்கிய கர்த்தாவுக்கு இருக்க வேண்டிய சமநிலைப் பார்வை
அற்றுப்போய், அந்த சமூகத்தையே அழித்துவிடவேண்டும் என்ற போராட்டக் குணம்
காணப்படுகின்றது. தலித் இலக்கியத்தின் பிதாமகர் என்று டானியல்
கொள்ளப்படுவதற்கு அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது மட்டுமன்றி
தலித் பக்க நியாயங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தங்களும்
காரணமாகின்றன. சாதியத்தினால் பஞ்சமர்கள் மதட்டுமன்றிப் பிராமணர்களும்
பாதிப்படைந்துள்ளமையை சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது என்ற நாவலும்
தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலும் நன்கு
சித்திரித்துள்ளன.
கணேசலிங்கன், டானியல் சார்ந்தோர் சாதியத்தின் அழிவுக்கு அல்லது சமூக
மாற்றத்துக்குத் தமது நாவல்களில் சுட்டிக்காட்டிய வழிமுறை ஒரு
சமூகப்புரட்சியாகும் எனது சாதிய நாவல்களான பிரளயம், அக்கினி முதலியன
யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்வேறு கொடுமைகளின் பல்வேறு வடிவங்களை
சித்திரிக்கின்ற அதேவேளை சமூகமாற்றமானது கல்வி, தொழில் மாற்றம்,
செல்வந்தேடல் என்பன மூலம் ஏற்படுமெனச் சித்திரிக்கிறது. நடைமுறையில்
இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதிய மாற்றம் நான் சுட்டியதுபோல கல்வி
உயர்வாலும் தொழில் மாற்றத்தாலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். ஆங்காங்கே
சாதியத்தின் அடக்கியொடுக்கப்பட்ட முறைகள் இருக்கத் தான் செய்கின்ற
போதிலும் தங்கியிருக்கா நிலை மெல்லென உருவாகி வருகின்ற நிலையில் இந்தச்
சமூகக் கட்டு உடைந்துவிடும். ஈழப்போராட்டத்தின் விளைவாக இது
துரிதப்பட்டுள்ளது. எனது பிரளயம் என்ற நாவல் உருவத்தில் சிறியதாயினும்
நாவலுக்கான கதைப்பரப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் சாதிய நாவல்களில்
வித்தியாசமான செல்நெறியையும் கொண்டுள்ளது.
31). உங்களுடைய
வாடைக்காற்று நாவல் திரைப்படமாக வந்ததைப் போல தங்களின் பிற நாவல்கள்
ஏதாவது திரைப்படமாக வெளிவரும்; சாத்தியக் கூறுகள் உள்ளனவா?
தெரியவில்லை. ஆனால் எனது யானை நாவலை வேறு பெயருடன் திரைப்படமாக்க
முன்வந்தனர். முயற்சி தடைப்பட்டுவிட்டது. வருங்காலத்தில் எனது பல
நாவல்கள் திரைப் படமாகலாம்.
32). இன்றைய இளம்
படைப்பாளிகள் பற்றி...?
நவீன புனைகதைகளுள் சிறுகதைகள் வெளிவருகின்ற வேகமும் எழுத்தாளர்களால் அவை
எழுதப்படுகின்ற தொகையும் மிக அதிகமாகும். ஆனால் எழுதப்படுகின்ற
சிறுகதைகள் சிறுகதை என்ற இலக்கியத்தின் வகைக்குள் அமையாது போகின்றன.
அதற்குக் காரணம் சிறுகதை வகை பற்றிய தெளிவின்மையே ஆகும். சிறுகதை
என்றால் என்ன? பெயருக்கேற்ப சிறிய இலக்கிய வகை அது. நாவலைப் போன்று
பெரிதுமன்று. அதிக சம்பவங்களைக் கொண்டதுமன்று. குறுநாவலைப்போல
இடைத்தரமானதுமன்று. சிறுகதை என்பது சிறியதொரு சம்பவத்தை ஒரு சில
பாத்திரங்களுடன் குறுகிய காலத்தில் விபரிப்பது. உலகின் பெரும்பாலான
சிறந்த சிறுகதைகள் பெரிதும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் அவிழ்த்து
விடை காண்பதாக அல்லது வாசகன் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பத்துடன்
நிறைவுறுவதாகவுள்ளன. படிப்பவன் மனதில் இறுதியில் ஓர் உணர்ச்சியை
எஞ்சவிடுவனவாக அல்லது வாழ்க்கைக்கு ஓர் ஒளிப் புள்ளியைக் காட்டுவனவாக
நல்ல சிறுகதைகள் அமைகின்றன.
சிறுகதைக்குரிய நேர்த்தி என்பது நல்லதொரு சிறுகதை மூன்று இலக்கணங்களைக்
கொண்டமையும் விமர்சகர்கள் சொல்வதைப் போல பலவற்றையல்ல. அம்மூன்று
இலக்கணங்கள் வருமாறு:
1. நல்லதொரு கருவை
அல்லது உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.
2. ஏற்றதொரு வடிவத்தை
அல்லது உருவத்தைக் கொண்டிருக்கும்
3. சிறுகதைக்குரிய
நேர்த்தியைக் கொண்டிருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் சிலிர்க்க வைக்கும்
உள்ளடக்கத்தை தெரிவு செய்கிறார்கள். அது எழுத்தாளனின் ஆளுமையைப்
பொறுத்தது. நல்ல சிறுகதை என்பது சிறுகதை நிகழும் கள விபரணை, நடை, உத்தி,
பாத்திரங்கள், உவமாணங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சமுகச்செய்தி
எனப்பலவற்றைப் பொறுத்தது. இன்றைய இளம் படைப்பாளிகள் சிறுகதை
உள்ளடக்கத்தில் செலுத்துகின்ற கவனத்தை அதன் உருவத்தில் செலுத்தவதில்லை
என்பது என் குறையாகும்.
|